“75-வது வயதில் ஓய்வு… மோடிக்கும் பொருந்துமா?” – மோகன்பகவத்தின் பேச்சால் பரபரப்பு!
ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், “தலைவர்கள் 75-வது வயதில் தாங்களாகவே ஓய்வு பெற வேண்டும்” என தெரிவித்த கருத்து, பிரதமர் நரேந்திர மோடியின் எதிர்காலத்தை பற்றிய அரசியல் விவாதங்களுக்கு தீக்குச்சி போட்டுள்ளது.
மராட்டிய மாநிலம் நாக்பூரில் நடைபெற்ற ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய மோகன்பகவத்,“தலைவர்கள் 75 வயதைக் கடக்கும்போது, ஒதுங்கி நின்று புதிய தலைமுறைக்கு இடம் கொடுக்க வேண்டும்,”என்று தனது நிலைப்பாட்டைத் தெரிவித்துள்ளார்.
இந்த கருத்து, அவரது சொந்த வயதையும், பிரதமர் மோடியின் வயதையும் முன்னிலைப்படுத்தியதே காரணமாக, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமர் மோடி தற்போது 74 வயதாக உள்ளார்.2025 செப்டம்பரில், மோகன்பகவத் மற்றும் மோடி இருவரும் 75-வது வயதை எட்டுவார்கள்.ஏற்கனவே கடந்த மார்ச் மாதம், மோடி நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்திற்கு சென்றதையடுத்து, ஓய்வு குறித்த வதந்திகள் உச்சம் தொட்டன.
சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கூறியதாவது:“அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, ஜஸ்வந்த் சிங் உள்ளிட்ட பலர் 75 வயதைக் கடந்தபின் கட்டாய ஓய்வு பெற்றனர் — மோடியின் விருப்பத்தால்தான். இப்போது அதே விதியை அவர் தனக்கும் பயன்படுத்துவாரா என்பதை பார்ப்போம்.”
காங்கிரஸ் தலைவர் அபிஷேக் மனு சிங்வி விமர்சித்தது:“75 வயது வரம்பு, கொள்கையாக அமையாமல், தேர்ந்தெடுக்கப்படும் முறையாக செயல்படுகிறது. சிலருக்குத் தான் விதி, சிலருக்கு விலக்கு — இது நேர்மையற்ற அணுகுமுறையை காட்டுகிறது.”
இந்தச் சூழ்நிலையில், கடந்த மே 2023ல், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியது முக்கியமாகும்:“மோடி ஜி 2029 வரை பிரதமராக இருப்பார்கள். ஓய்வு பற்றிய வதந்திகளில் எதுவும் உண்மை இல்லை.”
மோகன்பகவத்தின் பேச்சு உண்மையாக ஒரு பொதுக் கொள்கை அறிக்கையா? அல்லது அரசியல் பின்னணியில் சைகையா? என்பது காலத்தால் தீர்மானிக்கப்படும். ஆனால் இதன் தாக்கம் தற்போதைய அரசியல் வட்டாரத்தில் பெரிதாகவே உள்ளது.