மரண தண்டனையில் இருந்து நமது நாட்டு நர்ஸை காப்பாற்றுங்கள்..மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வலியுறுத்தல்!

Loading

நிமிஷா தற்போது ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள ஏமன் தலைநகரான சனாவில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த நிமிஷா பிரியா என்பவர் ஏமன் நாட்டில் உள்ள மருத்துவமனை ஒன்றில் நர்ஸ் வேலையில் இருந்தார். குடும்பத்துடன் தங்கி இருந்தநிலையில் கடந்த 2014-ம் ஆண்டு நிமிஷாவின் கணவர் மற்றும் குழந்தை இந்தியா திரும்பினர். அவர் நாடு திரும்பும் நேரத்தில் ஏமனில் உள்நாட்டு போர் ஏற்பட்டதால், நிமிஷாவால் நாடு திரும்ப முடியவில்லை.

இதையடுத்து அவர் ஏமனில் தங்கி இருந்தபோது அந்த நாட்டை சேர்ந்த தலால் அப்தோ மஹ்தி என்பவருடன் இணைந்து மருத்துவமனை ஒன்று தொடங்க திட்டமிட்டதாகவும், அதில் ஏற்பட்ட தகராறில் மஹ்தியை கொலை செய்ததாக கடந்த 2017-ம் ஆண்டு நிமிஷா கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் அவருக்கு மரண தண்டனையும் விதிக்கப்பட்டது.

இந்த தண்டனையை ரத்து செய்யக்கோரி அவருடைய தாய் பல்வேறு முயற்சிகளை செய்து வந்தார். ஆனாலும் நிமிஷாவின் மரண தண்டனையை அந்த நாட்டு கோர்ட்டு உறுதி செய்தது. அவருக்கு வருகிற 16-ந்தேதி மரண தண்டனை நிறைவேற்றப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள நிமிஷாவை காப்பாற்ற இந்தியாவில் உள்ள பல்வேறு அமைப்புகள் குரல் கொடுத்து வருகின்றன.அதுபோல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு எம்.பி.பிரிட்டாஸ், மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

கேரள மாநிலத்தை சேர்ந்த நர்ஸ் நிமிஷாவின் மரணதண்டனை வருகிற 16-ந்தேதி நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளதாக வெளியான தகவல் மிகவும் துயரமானது. இது அவருடைய குடும்பத்தினர் மற்றும் நலம் விரும்பிகள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தி உள்ளது.

இந்த விவகாரத்தில் மத்திய அரசு உடனடியாக தலையிட வேண்டும். ஏமன் நாட்டு உயர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடந்தி, நர்ஸ் நிமிஷாவின் மரண தண்டனையை தடுத்து நிறுத்த வேண்டும்” என்று அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

0Shares