நகர்புற நல வாழ்வு மையத்தை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்த அரசு கொறடா!
குன்னூர் மாடல்ஹவுஸ் பகுதியில் நகர்புற நல வாழ்வு மையத்தை அரசு தலைமை கொறடா குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், சென்னை அடையாறு சாஸ்திரி நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சி மற்றும் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.52 கோடி மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 208 நகர்ப்புற நல்வாழ்வு மையங்கள், ரூ.60 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 50 ஆரம்ப சுகாதார நிலையங்களை காணொளி மூலமாக திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து, நீலகிரி மாவட்டம் குன்னூர் நகராட்சிக்கு உட்பட்ட மாடல் ஹவுஸ் பகுதி நகர்ப்புற நல வாழ்வு மையத்தை அரசு தலைமை கொறடா கா.ராமச்சந்திரன் பார்வையிட்டு குத்துவிளக்கு ஏற்றினார்.
பின்னர் அரசு தலைமை கொறடா கா.ராமச்சந்திரன் தெரிவித்ததாவது:-மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டு மக்களுக்கு உயர்தர மருத்துவ வசதிக் கிடைத்திட புதிய அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களை கட்டுதல், மருத்துவ கருவிகளை நிறுவுதல், அனைவருக்கும் நலவாழ்வு என்கிற உயரிய நோக்கினை செயல்படுத்தும் வகையில் மக்களை தேடி மருத்துவம் சாலை விபத்துகளில் உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் “இன்னுயிர் காப்போம்- நம்மைக் காக்கும் 48” போன்ற பல்வேறு திட்டங்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வாயிலாக செயல்படுத்தி வருகிறார்கள். மேலும், தமிழ்நாடு மக்களின் சுகாதார தேவைகளை மென்மேலும் மேம்படுத்தும் வகையில் தமிழ்நாட்டில்கிராமப்புறங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் இருப்பதை போல நகர்புறங்களிலும் ஒருங்கிணைந்த தரமான மருத்துவ சேவையை வழங்கிட வேண்டும் என்ற நோக்கத்தில் இன்றைய தினம் தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சி மற்றும் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.52 கோடி மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 208 நகர்ப்புற நல்வாழ்வு மையங்கள், ரூ.60 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 50 ஆரம்ப சுகாதார நிலையங்களை காணொளி மூலமாக திறந்து வைத்தார். அதில் நீலகிரி மாவட்டத்தில் கடநாடு ஆரம்ப சுகாதார நிலையம் ரூ.120 இலட்சம் மதிப்பிலும், உமரிகாட்டேஜ் ஆரம்ப சுகாதார நிலையம் ரூ.158 இலட்சம் மதிப்பிலும், மாடல் ஹவுஸ் நகர்புற நல வாழ்வு மையம் ரூ.25 இலட்சத்திலும், மாக்கமூலா நகர்புற நலவாழ்வு மையம் ரூ.25 இலட்சத்திலும் என ஆக மொத்தம் ரூ.3 கோடியே 28 இலட்சம் மதிப்பில் திறந்து வைக்கப்பட்டது.
கடநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் உமரிகாட்டேஜ் நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவ அலுவலர்கள், செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள்,பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் முதலானோர் பணியமர்த்தப்பட்டு மருத்துவ சேவைகள் வழங்கப்படவுள்ளது. இங்கு உள்நோயாளிகள், வெளி நோயாளிகளுக்கான பிரிவுகளும், மருந்தகம், ஆய்வகம், குழந்தைகள் பிறந்ததிலிருந்து 16 வயது முடிய அனைத்து தடுப்பூசிகளும், கர்ப்ப கால பரிசோதனை, பிரசவித்த தாய்மார்களுக்கான கவனிப்பு, காய்ச்சல், சுவாச நோய்த்தொற்றுகள், வயிற்றுப்போக்கு, தோல்நோய்த் தொற்றுகள், ஒவ்வாமை, உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, மூட்டு மற்றும் தசை எலும்பு பிரச்சனைகள்,கண் மற்றும் காதுநோய்த் தொற்றுகள், சிறுநீர்பாதை தொற்று, இரத்தசோகை, பாம்புக்கடி மற்றும் நாய்க்கடிக்கான சிகிச்சை, ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் தாய்/குழந்தை மருத்துவ பிரச்சனைகள் ஆகியவைகள் அனைத்திற்கும் சிகிச்சை அளிக்கப்படும்.
நகர்புற சுகாதார மற்றும் நலவாழ்வு மையங்களில் மருத்துவ அலுவலர், செவிலியர்,சுகாதார ஆய்வாளர், பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் முதலானோர் பணியமர்த்தப்பட்டு காலை 8.00 மணிமுதல் 12 மணி வரையிலும் மாலை 4.00 மணி முதல் 8.00 மணி வரையிலும் மருத்துவ சேவைகள் வழங்கப்படவுள்ளது. மேலும் மருத்துவசேவைகள் நகர் புறநல வாழ்வு மையங்கள் வாயிலாக கர்ப்பகால மற்றும் பிரசவகால சேவைகள், சிசு மற்றும் குழந்தைகள் நலசேவைகள், குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவத்தினருக்கான சேவைகள்,குடும்பநலம், கருத்தடை மற்றும் பேறுகால சேவைகள்,தொற்றா நோய்களுக்கான சிகிச்சைகள,வெளிநோயாளிகள் மற்றும் சிறுநோய்களுக்குசிகிச்சைகள், தொற்றா நோய்களுக்கான சிகிச்சை அளித்தல் (மக்களைத் தேடிமருத்துவம்), மனநோய்களைக் கண்டறிந்து சிகிச்சை அளித்தல்,கண்,காது, மூக்கு மற்றும் தொண்டை பிரச்சனைக்கு சிகிச்சை அளித்தல், பல் நோய்களுக்கான சிகிச்சைஅளித்தல், முதியோர் மற்றும் இறக்கும் தருவாயில் உள்ளவர்களுக்கு சிகிச்சை அளித்தல், விபத்து மற்றும் அவசர மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்காக செயல்பட்டு வருகிறது என தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில், குன்னூர் சார் ஆட்சியர் சங்கீதா துணை இயக்குநர் சுகாதார (பணிகள்) சோமசுந்தரம், குன்னூர் நகராட்சி ஆணையாளர் இளம்பருதி, வட்டார மருத்துவ அலுவலர் பாரதி, குன்னூர் வட்டாட்சியர் ஜவஹர், குன்னூர் நகரமன்றத் தலைவர் சுசிலா, நகரமன்றத் துணைத் தலைவர் வாஷிம்ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.