மாணவர் குறைதீர் முகாமில் 54 மாணவர்களுக்கு உயர் கல்வி தொடர உடனடி சேர்க்கை!
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கத்தில், மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக் கல்வித்துறை சார்பில் 2024-25ம் கல்வியாண்டில் பயின்ற 10,11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான சிறப்பு மாணவர் குறைதீர் முகாம் நடைபெற்றது.மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தலைமை தாங்கினார்.
இம்முகாமில் 345 மாணவர்கள் கலந்துக் கொண்டனர். இம்முகாமில் பொறியியல் பாடப்பிரிவில் 12 மாணவர்களும், கலை மற்றும் அறிவியல் பாடப் பிரிவில் 13 மாணவர்களும், தொழில்நுட்பம் சார்ந்த பாடப் பிரிவுகளில் 19 மாணவர்களும், கிளை மருத்துவம் பாடப் பிரிவில் 10 மாணவர்களும் என ஆக மொத்தம் 54 மாணவர்களுக்கு உயர் கல்வி தொடர உடனடி சேர்க்கை நடைபெற்றது.
8 குழந்தைத் தொழிலாளர்கள் கண்டறியப்பட்டு, அவர்கள் தொழிற்பயிற்சி நிறுவனத்தில் சேர்க்கப்பட்டனர். மேலும் 2 மாணவர்களுக்கு மருத்துவ படிப்பு சார்ந்த புத்தகங்கள் (சூநுநுகூ) 2 மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியரால் வழங்கப்பட்டது. உயர் கல்வி தொடர 12 மாணவர்களுக்கு தேவையான சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. 14 மாணவர்களுக்கு கல்வி கடனுக்காக விண்ணப்பிக்கப்பட்டது. 24 மாணவர்களுக்கு நிதி உதவி சார்ந்த விண்ணப்பங்கள் பெறப்பட்டது. 13 கல்லூரிகள், 4 தொழில்நுட்ப கல்லூரிகள், 5 கிளை மருத்துவம் சார்ந்த கல்லூரிகள் மாணவர்களுக்கு சலுகை அளிக்கப்பட்டது.
இதில் உதவி ஆணையர் (கலால்), வி.கணேஷ், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்(பொ) மோகனா, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை உதவி இயக்குநர் விஜயா, மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் நிஷாந்தி, உதவி திட்ட அலுவலர் வா.பாலமுருகன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் அருள்ராஜ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக எழுத்தர் (கல்வி) அ.பவானி, அனைத்து மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் திரளான மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.