சமையல் எண்ணெய் விலை குறைய வாய்ப்பு!
கச்சா எண்ணெய் மீது சுங்கவரி குறைக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால் சமையல் எண்ணெய் விலை குறைய வாய்ப்பு இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்திய ரூபாயின் மதிப்பு சமீப காலமாக அமெரிக்க டாலருக்கு எதிரான சரிந்து கொண்டே இருப்பதால் பல பொருட்களும் விலை உயர்வை சந்தித்தன. இது 50 சதவீதம் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சமையல் எண்ணெயிலும் எதிரொலித்தது.
இந்த நிலையில் மத்திய அரசாங்கம் கச்சா பாமாயில், கச்சா சோயாபீன் மற்றும் கச்சா சூரியகாந்தி எண்ணெய் ஆகியவை மீதான அடிப்படை சுங்க வரியை 20 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக குறைத்தது. இறக்குமதி வரி முன்பு 27.5 சதவீதமாக இருந்தது. தற்போது சுங்கவரி குறைக்கப்பட்டதன் காரணமாக இனி 16.5 சதவீதமாக அது இருக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மேலும் உள்நாட்டு சுத்திகரிப்பு துறையை ஊக்கப்படுத்துவதற்காக கச்சா எண்ணெய் மீது சுங்கவரி குறைக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த வரி குறைப்பு கச்சா எண்ணெய்கள் மீது மட்டுமே இருக்கும் என்றும் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் இறக்குமதி மீது இருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் உள்நாட்டில் தயாரிக்கப்படும் சமையல் எண்ணெய் விலை குறைவாகவும், வெளிநாட்டில் இருந்து சுத்திகரித்து வரும் சமையல் எண்ணெய்களின் விலை அதிகமாகவும் இருக்கும் என எண்ணெய் உற்பத்தியாளர்கள் கூறினர்.