TASMAC கடை திறக்க பெண்கள் எதிர்ப்பு..ஆண்கள் ஆதரவு தெரிவித்து போராட்டம்!
ஓசூர் அருகே டாஸ்மாக் கடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துபெண்களும், கடை அமைக்க வேண்டும் என வலியுறுத்திஆண்களும் இரண்டு பிரிவாகஒரே இடத்தில் பெண்கள் மற்றும் குடிமகன்கள் சாலை மறியலில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே , அஞ்செட்டி அடுத்த நாற்றாம்பாளையம் பகுதியில் பல ஆண்டுகளாக இயங்கி வந்த டாஸ்மாக் அரசு மதுபான கடையை இடமாற்றம் செய்து பிரதான மையப் பகுதியில் அமைப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து ஒரு தரப்பு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஏற்கனவே இது தொடர்பாக பிரச்சனை எழுந்த நிலையில், டாஸ்மாக் மதுபான கடையை அப்புறப்படுத்தி மெயின் ரோடு அருகே புதூர் பகுதியில் மாற்றி அமைப்பதற்கு திடீர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது இதற்கும் கடும் எதிர்ப்பு பொதுமக்கள் தெரிவித்து டாஸ்மாக் கடையை அமைக்கவே கூடாது என வலியுறுத்தி பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர் அதைத்தொடர்ந்து.
ஆண்கள் ஒன்றாக இணைந்து, இதற்கு முன்பு இருந்த இடம் பிரதான சாலை எனவும் , தற்போது திறக்கப்பட்டுள்ள இடம்மிகவும் மறைவான பகுதி என்பதால் ,கடையை திறக்க அனுமதிக்க வேண்டும் என மது பிரியர்கள் தரப்பில் சிலர் சாலை மறியலில் ஈடுபட்டு,டாஸ்மாக் வேண்டும் என்று கோஷமிட்டனர் .
தகவல் அறிந்து அங்கு வந்த போலீசாரும், அரசு அதிகாரிகளும் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் பேசியதை அடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
இந்த சாலை பிரதானமான பகுதி என்பதாலும் பொதுமக்கள் அதிகம் கூடுவதோடு தினமும் பேருந்துக்காக கல்லூரி ,பள்ளி மாணவர்கள் இந்த இடத்தில் இருந்து தான் பயணிக்கின்றனர்.இந்தப் பகுதியில் மதுபான கடையை அமைத்தால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதோடு விபத்துக்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாலும் இந்த பகுதியில் கடையை மாற்றி அமைக்க கூடாது என பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
ஆனால் மது பிரியர்களோ இந்த இடமே எங்களுக்கு பழகி விட்டது என்றும் மிகவும் மறைவான பகுதி என்பதாலும் மது அருந்துவதற்கு வசதியாக இருப்பதாலும் கடையை அப்புறப்படுத்தக் கூடாது என மது பிரியர்கள் தரப்பில் கூறப்படுகிறது.இதற்கிடையில் வேறு ஒரு நாள் கடை திறக்கப்படும் என கூறி அதிகாரிகள் புறப்பட்டு சென்றனர்,
டாஸ்மாக் கடை வேண்டும் என ஒரு தரப்பினரும் ,வேண்டாம் என ஒரு தரப்பினரும் சேர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியது.