4 கிலோ கஞ்சா பறிமுதல்..5 பேர் கைது!
திருவள்ளூரில் அரசால் தடை செய்யப்பட்ட 4. 200 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் 5 பேரை கைது செய்துள்ளனர் .
திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இதனையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் உத்தரவின் பேரில் மதுவிலக்கு அமல் பிரிவு சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ஏழுமலை மற்றும் போலீசார் திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே பெரிய குப்பம் பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது சந்தேகத்திற்கிடமாக நின்றுகொண்டிருந்த ஐந்து பேரை பிடித்து சோதனை செய்தனர்.சோதனையில் அவர்கள் தென்காசியை சேர்ந்த சத்தியமூர்த்தி (26), கோவையை சேர்ந்த சூர்யா (21) சங்கரன்கோவிலை சேர்ந்த குருவேல், ஆந்திராவை சேர்ந்த கௌதம், ஒடிசாவை சேர்ந்த அனுப்பும்(எ) ரவி ஆகியோர் என்பது தெரிய வந்தது.
மேலும் அவர்கள் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சாவை வைத்திருப்பதும், ரயில் பயணிகளுக்கு விற்பனை செய்வதற்காக வைத்திருந்ததும் தெரிந்தது.இதையடுத்து ஐந்து பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து 4.200 கிலோ கஞ்சாவையும், இரண்டு செல்போனையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.