கத்தோலிக்கத் திருச்சபையின் 266-வது திருத்தந்தை போப் பிரான்சிஸ் மறைவிற்கு பெயிரா இரங்கல்.

Loading

அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி அவர்கள், கத்தோலிக்கத் திருச்சபையின் 266-வது தலைவர் போப் பிரான்சிஸ் அவர்களின் மறைவிற்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து செய்தி வெளியிட்டுள்ளார்.

மேலும் அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்..

கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் அவர்கள் உடல் நலக்குறைவினால் மறைந்த துயரச் செய்தியை அறிந்து ஆற்றொணாத் துயரமும், பெரும் அதிர்ச்சியும் அடைந்தேன்.  அவர் ஆற்றிய பங்களிப்பும், உலகம் முழுதும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவை செய்வதற்காக அவர் மேற்கொண்ட பணிகளும்,‌ தற்பொழுது உலகில் பல நாடுகளுக்கு இடையில் நடந்து வரும் யுத்தத்தினை நிறுத்துவதற்காக மேற்கொண்ட செயல்பாடுகள் என உலகெங்கிலும் வாழும் மக்களுக்காக தனது வாழ்நாளினை அர்ப்பணித்து அவர் ஆற்றிய சேவைகள் அளப்பரியது. அவரது மறைவு உலகம் முழுவதிலும் உள்ள கத்தோலிக்க மக்களுக்கும் மட்டுமல்ல அனைத்து சமுதாய மக்களுக்கும் பேரிழப்பாகும்.

போப் பிரான்சிஸ் அவர்களின் இயற்பெயர் ஹோர்கே மாரியோ பெர்கோலியோ  ஆகும்.  அர்ஜென்டினா நாட்டைச் சேர்ந்த இவர் டிசம்பர் 17,1936 அன்று பிறந்தார். 2013 ஆம் ஆண்டு 265-வது திருத்தந்தையாக இருந்த பதினாறாம் பெனடிக்ட் வயது மூப்பு மற்றும் உடல்நல குறைவின் காரணமாக தனது திருத்தந்தை ‌ பணியை துறக்கப் போவதாக அறிவித்ததனை தொடர்ந்து, கத்தோலிக்க திருச்சபையின் 266-வது திருத்தந்தையாக மார்ச் மாதம்13,2013 அன்று தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் தென்அமெரிக்காவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் திருத்தந்தை மற்றும் மூன்றாம் கிரகோரிக்கு பின்பு கடந்த 1200 ஆண்டுகளில் ஐரோப்பிய நாட்டினர் அல்லாத ஒருவர் கத்தோலிக்க திருத்தந்தையாக தேர்ந்தெடுக்கப்பட்ட பெருமை இவரையே சாரும்.

போப் பிரான்சிஸ் அவர்களுக்கு தாய்மொழி எசுப்பானியம் என்றாலும் லத்தீன், ஜெர்மன், ஆங்கிலம் மற்றும் பிரெஞ்ச் மொழிகளில் நன்றாக பேசும் திறமை பெற்று இருந்தார்.

இவர் 11.03.1958 அன்று இயேசு சபையில் துறவியாக சேர்ந்தார். ‌1964‌ ஆம் ஆண்டிலிருந்து மூன்றாண்டுகள் சாந்தா ஃபே மற்றும் புவேனோஸ் ஐரேஸ் நகர்க் கல்லூரிகளில் இலக்கியம், உளவியல் ஆகிய பாடங்களை கற்பிக்கும் பணியை செய்துள்ளார்.

1967 ஆம் ஆண்டு இறையியல் படிப்பை முடித்தார். இவர் 1969 ஆம் ஆண்டு தனது 33 ஆம் வயதில் இயேசு சபையில் கிருத்துவப் பட்டம் பெற்று தான் படித்த கல்லூரியிலேயே இறையியல் பேராசிரியராகவும் மற்றும் தலைவராகவும் பணிபுரிந்துள்ளார்.

இவர் 1973  முதல் 1979 ஆம் ஆண்டு வரை அர்ஜென்டினாவின் பெர்கோலியோ இயேசு சபை மறைத்தளத்  தலைவராகவும், பின்னர் 1980  முதல் 1986 ஆம் ஆண்டு வரை புனித மிக்கேல் கிருத்துவக் கல்லூரியின் தலைவராகவும் பணிபுரிந்துள்ளார். இவருக்கு 27.06.1992 அன்று ஆயர்பட்டம் வழங்கப்பட்டது. பின்னர் 28.2.1998 அன்று பேராயர் நிலைக்கு உயர்த்தப்பட்டார். அதனைத் தொடர்ந்து 21.02.2001 அன்று கர்தினாலாக பதவி உயர்வு பெற்றார்.

இவர் தனது பதவி ஏற்பு விழாவை மிக எளிய முறையில் நடத்தியதோடு மட்டுமல்லாமல் அனைவரிடமும் மிகப் பணிவாகவும், எளிமையாகவும், அதேபோல் ஏழை எளியவர்களிடம் பரிவு காட்டுவது, சமுதாயத்தால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நல்வாழ்விற்காக தனது வாழ்நாளின் முக்கிய பணியாக கருதி செயல்பட்டு வந்தார். மேலும் உலகில் பல நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு கல்வி, சுற்றுச்சூழல் அனைத்து சமய மக்கள் நல்லிணக்கத்தோடு, சமாதானமாக வாழ்வதற்கான பணிகளை மேற்கொண்டுள்ளார். உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளுக்கிடையே நடைபெறும் யுத்தத்தினால் அகதிகளாக வெளியேறும் மக்களை அரவணைத்து அவர்களுக்கு உதவிடுமாறு கேட்டுக்கொண்டார். வாடிகன் நகரில் போப் பிரான்சிஸ் அவர்களின் சிறப்பு பிரார்த்தனை கூட்டங்கள் நடைபெறுவது வழக்கம். இப்பிரார்த்தனைக் கூட்டத்தில் அவரின் உரையை கேட்கவும், ஆசிர்வாதத்தினை பெறவும் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடுவது வழக்கம்.கத்தோலிக்க மக்களுக்காகவும் மற்றும் அனைத்து சமுதாய மக்களுக்காகவும் தன் வாழ்நாளை அர்ப்பணித்து வாழ்ந்து வந்த போப் பிரான்சிஸ் அவர்கள் கடந்த சில ஆண்டுகளாக உடல் நலம் பாதிக்கப்பட்டு தொடர் சிகிச்சையில் இருந்து வந்துள்ளார். இறைவன் அருளால் விரைவில் நோயிலிருந்து மீண்டும் நலம் பெற்று வருவார் என  பிராத்தித்து காத்திருந்த கத்தோலிக்க மக்களுக்கு,  போப் பிரான்சிஸ் அவர்களின்  மறைவானது பேரிழப்பாகும்.தங்களின் திருத்தந்தையை இழந்து துயரத்தில் வாடும் உலகம் முழுவதிலும் உள்ள கத்தோலிக்க மக்களுக்கு எமது பெயிரா கூட்டமைப்பின் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரின் ஆன்மா இறைவனின் நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் என உருக்கமாக பெயிரா தலைவர் டாக்டர் ஹென்றி அவர்கள் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

0Shares