தமிழ் புத்தாண்டு பெயிரா வாழ்த்து

Loading

 

அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி அவர்கள், உலகம் முழுவதிலும் வாழும் அனைத்து தமிழ் உறவுகளுக்கும் தனது இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

 

மேலும் அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்

சூரிய நாட்காட்டியின்படி சித்திரை மாதத்தின் முதல் நாள் மற்றும் பொதுவாக கிரிகோரியன் ஆண்டின் ஏப்ரல் 14 அன்று தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அதாவது தை முதல் நாள் தமிழ் புத்தாண்டா அல்லது சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டா என மிகப்பெரும் விவாதத்துக்கு உள்ளானது. கடந்த 2008ஆம் ஆண்டு அன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு கருணாநிதி அவர்கள் தலைமையிலான திமுக அரசு தை முதல் நாளே தமிழ் புத்தாண்டு என அறிவித்து அரசாணை வெளியிட்டது. அதன் பின்னர் ஆட்சி பொறுப்பேற்ற முதலமைச்சர் மாண்புமிகு ஜெயலலிதா அவர்கள் தலைமையிலான அதிமுக அரசு, அந்த  அரசாணையை திரும்ப பெற்று சித்திரை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக அறிவித்தது.

ஏப்ரல் 14 ஆம் தேதி  தமிழ்நாட்டில் மட்டுமல்லாது நாடு முழுவதும் மக்கள் வெவ்வேறு பெயர்களில் அறுவடை பண்டிகைகளைக் கொண்டாடுகிறார்கள். கேரளாவில் விஷு, ஒரியவில் பான சங்கராந்தி, வங்காளிகள் போஹேலா பைசாக், நேபாளிகள் ஜூட் ஷீத்தல், பஞ்சாபிகள் பைசாகி, அசாமியர்கள் போஹாக் பிஹு என இதே நாள் புத்தாண்டாக கொண்டாடப்படுகிறது. –

மேலும் இலங்கையில் அலுத் அவுருடு என இதே நாளை அந்நாட்டு மக்கள் தங்களின் புத்தாண்டாக கொண்டாடுகிறார்கள்.

தமிழ் புத்தாண்டினை வரவேற்கும் விதமாக தங்களது   இல்லங்களை தூய்மைப்படுத்தி, உள்ளங்களை சீர்படுத்தி, வாசலில் அரிசி பொடி கோலங்களை இட்ட காலங்கள் மாறி தற்பொழுது வண்ண பொடி கொண்டு அழகிய கோலங்கள் இட்டு, வாழ்வின் இருளைப் போக்கி ஒளியினை வரவேற்கும் விதமாக குத்துவிளக்கு ஏற்றி மலர்களை கொண்டு அழகுபடுத்தி  தமிழ் புத்தாண்டை மகிழ்வுடன் வரவேற்பார்கள்.

மேலும் நமது முன்னோர்களின் வழக்கப்படி ஒரு பெரிய தட்டில் முக்கனிகள், காய்கறிகள், அரிசி, வெற்றிலை பாக்கு, பணம், தங்கம் மற்றும் வெள்ளி நகைகள், பூக்கள் மற்றும் முகம் பார்க்கும் கண்ணாடியினையும் வைத்து தமிழ் புத்தாண்டிற்கு முன் இரவு கடவுளை வழிப்பட்டு பூஜை செய்து, பூஜை அறையில் வைப்பதனை மரபாக கடைபிடித்து வருகின்றனர்.

இந்த மரபிற்கு காரணம் தமிழ் புத்தாண்டு தினத்தன்று அதிகாலை எழுந்து முதலில் நம் கண்கள் மங்களகரமான காட்சியை காணும் பொழுது, தங்களது வாழ்வில் முக்கனிகளை போல் ஆரோக்கியம் மேம்படவும், அரிசியினை போல் ஊட்டத்தினை தந்திடவும், பணம் செல்வ செழிப்பை கொடுத்திடவும், தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் அழகையும், அலங்காரத்தையும் தங்கள் வாழ்வில் வழங்கிடும்  என்கின்ற நம்பிக்கையின் அடிப்படையில் இம்மரபினை பின்பற்றுகின்றனர்.

தமிழ் புத்தாண்டு தினத்தன்று அதிகாலையில் நீராடி, புத்தாடை அணிந்து, கோவிலுக்கு சென்று இறைவனிடம் நன்மைகளை நாடி மனமுருக வழிபட்டு, பெரியோர்களிடம் நல்வாழ்வு வேண்டி ஆசிர்வாதம் பெற்று, உற்றார் உறவினர்களுடன் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவது தமிழ் புத்தாண்டின் சிறப்பாகும்.

மேலும் வாழ்க்கை என்றால் இனிப்பும் – கசப்பும் கலந்தது தான் என்பதனை உணர்த்திடும் வகையில் மாங்காய் பச்சடி – வேப்பம்பூ பச்சடி ஆகியவைகளை உண்பது வழக்கமாகும்.

மேலும் தமிழ் புத்தாண்டு தினத்தன்று வகைவகையான உணவுகளை சமைத்து, உணவினை உண்டு மனதிற்கும், வயிற்றுக்கும் மிகுந்த மகிழ்ச்சியையும், மன நிறைவினையும் கொடுக்கும் இந்நாள் போல் எந்நாளும் தொடர இந்த புத்தாண்டு நன்னாள் திகழட்டும்.

இந்த தமிழ் புத்தாண்டு நம் அனைவரின் வாழ்வில் புதிய நம்பிக்கையினையூட்டி, இனிய துவக்கத்தினை கொடுத்து, துன்பங்கள் நீங்கி மகிழ்ச்சி பொங்கிட, செல்வ செழிப்பு பெருகிட, அமைதி, அன்பு, அறம் மலர்ந்திட,  ஆரோக்கியமும் ஆயுளும் கூடி, முயற்சிகள் அனைத்தும் வெற்றி கண்டு, கட்டுமானம் உள்ளிட்ட ரியல் எஸ்டேட் தொழில் துறை எழுச்சியும் – வளர்ச்சியும் கண்டு தொழில் முனைவோர்கள் ஏற்றம் காணும் ஆண்டாக இந்த தமிழ் புத்தாண்டு சிறப்பான ஆண்டாக அமைந்திட எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும் என தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து FAIRA தலைவர் டாக்டர் ஹென்றி செய்தி வெளியிட்டுள்ளார்.

 

0Shares