அரசு செட்டாப் பாக்ஸ்களை போட கட்டாயப்படுத்தும் அரசு அதிகாரிகள்.. மாவட்ட ஆட்சியரிடம் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் புகார்!
ஈரோடு கேபிள் டிவி ஆபரேட்டர்களை அரசு செட்டாப் பாக்ஸ்களை போட கட்டாயப்படுத்தும் அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர் பொதுநல சங்கத்தினர் மாவட்ட ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
தமிழகம் முழுவதும் ஒரு கோடி வாடிக்கையாளர்களைக் கொண்டு கேபிள் டிவி நிறுவனம் செயல்பட்டு வருகின்றது .25 ஆயிரம் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் இந்த தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் செட்டாப் பாக்ஸ்கள் தொடர்ச்சியாக பழுது ஏற்பட்டு வந்ததால் தனியார் நிறுவனங்களின் செட்டாப் பாக்ஸ்களை வாங்கி கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொது மக்களுக்கு வழங்கி வந்தனர்.
தற்போது மீண்டும் அரசு புதிய ஒப்பந்ததாரர்களிடம் செட்டாப் பாக்ஸ்களை கொள்முதல் செய்துள்ள நிலையில் அதனை கட்டாயமாக பொதுமக்களுக்கு வழங்க கோரியும் அதனை முறையாக பொதுமக்களுக்கு வழங்காத கேபிள் டிவி ஆபரேட்டர்களை மாற்றி புது ஆபரேட்டர்களை நியமிக்க அரசு கேபிள் டிவி அதிகாரிகள் முனைப்பு காட்டுவதாகவும் ,கேபிள் டிவி தொழிலை நம்பி கடந்த 30 ஆண்டுகளாக தொழில் நடத்தி வரும் நாங்கள் அரசு அதிகாரிகளின் இத்தகைய செயல்பாடுகளால் மிகுந்த பாதிப்பை எதிர்கொள்வதாகவும் இதன் மீது ஈரோடு மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க கோரியும் ஈரோடு கேபிள் டிவி ஆபரேட்டர் சங்கத்தினர் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.