வீடு, கட்டிடங்கள் கட்ட முக்கிய அறிவிப்பு..வேலூர் மாவட்ட ஆட்சியாளர் சுப்புலெட்சுமி புதிய உத்தரவு!

Loading

வேலூர் மாவட்டத்துக்குள் அடங்கிய ஊராட்சி ஒன்றிய எல்லைக்கு உட்பட்ட ஊரக பகுதிகளில் புதிய வீடு கட்டுதல், வணிக கட்டிடங்கள், தொழிற்சாலை கட்டிடங்கள் கட்டுதல் மற்றும் ஏற்கனவே கட்டப்பட்ட கட்டிடங்களை விரிவாக்கம் செய்தல் போன்றவற்றை அனுமதியின்றி மேற்கொள்ளக்கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அனுமதி பெறாமல் கட்டப்படும் கட்டிடங்களை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று வேலூர் மாவட்ட ஆட்சியாளர் வே.இர. சுப்புலெட்சுமி கூறினார்.

தமிழ்நாட்டில் கட்டடம் மற்றும் மனைப்பிரிவுகளுக்கான அனுமதியை அதன் பரப்பளவு, கட்டடத்தின் உயரம் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் உள்ளாட்சி அமைப்புகள், நகர ஊரமைப்பு இயக்ககம் (DTCP) சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (CMDA) போன்றவை வழங்குகின்றன. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் என்றால் சிஎம்டிஏ என்று அழைக்கப்படும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமமும், பிறப்பகுதிகளில் என்றால் டிடிசிபியும் அனுமதி வழங்குகின்றன.

மக்கள் காலதாமதமின்றி கட்டிட அனுமதி பெறுவதற்காகவும், கையூட்டு உள்ளிட்ட புகார்களைத் தடுக்கவும், அனைத்து வகையான அரசு வருவாய்துறை சேவைகளும் இணையவழிக்கு மாற்றப்பட்டு, மக்களுக்கு வழங்கப்படுகிறது. அவ்வகையில் கட்டட அனுமதி பெறுவதும் இணையவழியில் விண்ணப்பிக்கும் திட்டத்தை, கடந்த ஆண்டு தமிழக அரசு நடைமுறைக்கு கொண்டுவந்தது. அதன்படி தமிழகத்தில் 2500 சதுர அடி வரையிலான மனையில், 3,500 சதுர அடி வரையில் தரைத்தளம் அல்லது தரைத்தளத்துடன் கூடிய முதல் தளம் எனக் கட்டப்படும் குடியிருப்பு கட்டடங்களுக்கு சுயசான்று அடிப்படையில் இணைய வழி கட்டட அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

இதேபோல் தமிழ்நாட்டிலுள்ள 45 சிறப்பு நிலை மற்றும் தேர்வு நிலை நகராட்சிகளில் சதுர அடிக்கு ரூ.74 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. நிலை-1, நிலை-2 என 93 நகராட்சிகளில் ஒரு சதுர அடிக்கு ரூ.70 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அதேபோல், 62 சிறப்புநிலை பேரூராட்சிகளில் சதுர அடிக்கு ரூ.70 கட்டணமாக அரசால் வசூலிக்கப்படுகிறது. மேலும் 179 தேர்வு நிலை பேரூராட்சிகளில் சதுர அடிக்கு ரூ.65; 190 நிலை -1 பேரூராட்சிகளில் சதுர அடிக்கு ரூ.55; நிலை-2 பேரூராட்சிகளில் சதுர அடிக்கு ரூ.45 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

சென்னை மாநகராட்சியில் ஒரு சதுர அடிக்கு ரூ.100 கட்டணமும், சிறப்பு நிலை ஏ அந்தஸ்திலுள்ள மதுரை, கோவை, திருப்பூர் மாநகராட்சிகள் எனில் சதுர அடிக்கு ரூ.88-ம் சிறப்பு நிலை பி மாநகராட்சிகளான தாம்பரம், சேலம், திருச்சியில் சதுர அடிக்கு ரூ.84-ம் கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. அதேபோல் ஆவடி, நெல்லை, வேலூர், தூத்துக்குடி, ஈரோட்டில் சதுர அடிக்கு ரூ.79; தஞ்சை, நாகர்கோவில், ஓசூர், கடலூர், கரூர், கும்பகோணம், திண்டுக்கல், சிவகாசி, காஞ்சிபுரம் மாநகராட்சிகளில் சதுர அடிக்கு ரூ.74 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

இந்நிலையில சுயசான்று அடிப்படையில் விண்ணப்பிக்காமல் சிலர் கட்டிடங்களை ஊரகப்பகுதிகளில் கட்டுவது தொடர்கிறது.. இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்ட ஆட்சியாளர் வே.இரா. சுப்புலெட்சுமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறுகையில், “வேலூர் மாவட்டத்துக்குள் அடங்கிய ஊராட்சி ஒன்றிய எல்லைக்குட்பட்ட ஊரக பகுதிகளில் புதிய வீடு கட்டுதல், வணிக கட்டிடங்கள், தொழிற்சாலை கட்டிடங்கள் கட்டுதல் மற்றும் ஏற்கனவே கட்டப்பட்ட கட்டிடங்களை விரிவாக்கம் செய்தல் போன்றவற்றுக்கான வரைபட அங்கீகாரம் இணையதளம் மூலம் ஒற்றை சாளர முறையில் வழங்கப்பட்டு வருகிறது.

இதனை பயன்படுத்தி பொதுமக்கள் முறையான அனுமதி பெற்று புதிய கட்டிடங்கள் மற்றும் கட்டிடங்கள் விரிவாக்கம் செய்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும். அனுமதி இன்றி கட்டிடங்கள் கட்டப்பட்டால் அல்லது விரிவாக்கம் செய்யப்பட்டால் அரசு விதிகளின்படி கட்டிட உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அனுமதி பெறாமல் கட்டப்படும் கட்டிடங்களை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” இவ்வாறு வேலூர் மாவட்ட ஆட்சியாளர் வேஇரா. சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார்

0Shares