பெண்கள் பெயரில் சொத்துக்கள் வாங்கினால் முத்திரைத் தீர்வை விலக்கு பெயிரா தலைவர் டாக்டர் ஹென்றி தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கடிதம்
தமிழ்நாடு அரசின் புதிய திட்டத்திற்கு பெயிரா நன்றி தெரிவித்துக் கடிதம்.
அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் முப்பெரும் விழா மாநாடு கடந்த 05.01.2025 அன்று திருவண்ணாமலையில் நடைபெற்றது. இம்மாநாட்டில் பெண்கள் பெயரில் சொத்துக்களை வாங்கினால் அண்டை மாநிலமான புதுச்சேரியை போன்று முத்திரைத் தீர்வையில் சலுகை வழங்க வேண்டும் என நிறைவேற்றப்பட்டு அரசுக்கு (பதிவுத்துறைக்கு) முன் வைக்கப்பட்ட தீர்மானங்கள் மற்றும் கோரிக்கையில் கோரிக்கை எண். 70 இல் குறிப்பிட்டுள்ள தீர்மானத்தை தமிழ்நாடு அரசு கவனத்தில் கொண்டு, அதனை நிறைவேற்றிடும் வகையில்,
இன்று தமிழக சட்டப் பேரவையில் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களின் நடவடிக்கையின் பேரில், நிதித்துறை பட்ஜெட்டில் பெண்கள் பெயரில் சொத்துக்களை வாங்கினால் ஒரு சதவிகிதம் முத்திரைத் தீர்வை குறைவு என சலுகை வழங்கி, சட்டசபையில் அறிவித்து வெளியிட்டுள்ள திட்டத்தினை மனம் திறந்து பாராட்டி வரவேற்று தமிழக அரசுக்கும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும் அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.
மேலும் புதுச்சேரி அரசு, இந்திய முத்திரைச் சட்டம், 1899ன் கீழ், விற்பனை, பரிமாற்றம் அல்லது தானப்பத்திரம் மூலம் சொத்துக்களை வாங்கும் பெண்களுக்கு 50% சதவீதம் முத்திரைக் கட்டணத்தை விலக்கு அளிக்க திட்டமிட்டு, கடந்த 17.12.2004 தேதியிட்ட அறிவிப்பு எண்.8834/Rev-C3/2004 இன் மூலம் இரண்டு நிபந்தனைகளுடன் சிறப்பு அறிவிப்பை வெளியிட்டது. அதில் ஒரு சொத்தை பெண் ஆணுடன் (ஆண்களுடன்) கூட்டாக சொத்தினை வாங்கினால், மேற்கூறிய முத்திரைத் தீர்வை சலுகை பொருந்தாது எனவும், மேற்கூறிய சலுகையைப் பெறும் பெண் சொத்தினைப் பதிவு செய்த நாளிலிருந்து 5 ஆண்டுகள் வரை (அதிகாரம் பெற்ற முகவர் மூலம் உட்பட) எந்த வகையிலும், எந்தவொரு ஆணுக்கும் ஆதரவாகவோ, தனித்தனியாகவோ அல்லது கூட்டாகவோ, அத்தகைய சொத்தை பராதீனம் (விற்பனை) செய்யக் கூடாது எனவும். இந்த நிபந்தனையை மீறி ஒருவேளை ஐந்து ஆண்டுகளுக்குள் அந்த சொத்தை விற்க நேரிட்டால் அந்த பெண் பயனாளி எந்த வட்டியும் இன்றி மீதியான 50% முத்திரைத் தீர்வை தொகையை அரசுக்கு செலுத்திய பிறகு தான், ஐந்து ஆண்டுகளுக்குள் அத்தகைய சொத்தைப் பராதீனம் செய்யலாம் எனவும்,
மேலும், 31.08.2009 தேதியிட்ட புதுச்சேரி அரசு அறிவிப்பின்படி, மேற்கூறிய கட்டணச் சலுகை, புதுச்சேரியில் வசித்துவரும் பெண்களுக்கு மட்டுமே பொருந்தும் எனவும் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
மேற்கண்ட நிபந்தனைகளையும் சலுகையையும் தான் சுட்டிக்காட்டி அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கையை முன் வைத்தது. ஆனால் அரசு முதல் கட்டமாக பெண்களின் பெயரில் சொத்துக்களை வாங்கினால் ஒரு சதவீதம் முத்திரை தீர்வை என்கிற திட்டத்தை சட்டசபையில் அறிவித்திருக்கிறது.
மேலும் கடந்த மார்ச் 8, 2025 இல் சர்வதேச மகளிர் தினத்தில், பெண்களுக்கு எதிர்கால பாதுகாப்பும், கண்ணியமும், கௌரவமும் அதிகரிக்கும் வகையில் மகளிர் பெயரில் சொத்துக்களை வாங்கினால் அவர்களுக்கு 50 சதவீதம் முத்திரைத் தீர்வை சலுகை வழங்கிட வேண்டும் என மேற்கண்ட அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் சார்பில் அரசுக்கு கோரிக்கையாக முன் வைத்தது.
அரசு இதனையும் கவனத்தில் கொண்டு, சிறிய மாநிலமான புதுச்சேரியிலேயே நிரந்தரமாக இருப்பிடம் கொண்ட பெண்கள் பெயரில் மட்டும் தனிப்பட்ட முறையில் சொத்துக்களை வாங்கி, அவர்கள் ஐந்து ஆண்டுகள் வரை எந்தவித பராதீனமும் செய்யாத பட்சத்தில் அவர்களுக்கு முத்திரை தீர்வையில் 50% சதவிகிதம் விலக்கு அளிப்பது போன்று,
மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்கள், தாய் உள்ளத்தோடு மேற்கண்ட புதுச்சேரியின் திட்டத்தை தங்களின் கூடுதல் கவனத்தில் கொண்டு, முத்திரைத் தீர்வை விலக்கு பெற பத்து லட்சம் வரை மதிப்புள்ள சொத்துக்களுக்கு மட்டும் என்கிற வரம்பினை நிர்ணயிக்காமல், தமிழகத்திலும் நிரந்தரமாக வசிக்கும் பெண்கள் பெயரில் சொத்துக்களை வாங்கினால் அவர்களுக்கும் முத்திரைத் தீர்வையில் 50% விலக்கு அளிக்கும் வகையில், தாங்கள் நடவடிக்கையை மேற்கொண்டு உரிய வழிவகை செய்ய வேண்டுமென தமிழ்நாடு முதலமைச்சருக்கு அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் தலைவர் டாக்டர் ஹென்றி வேண்டுகோள் விடுத்து கடிதம் எழுதியுள்ளார்.