வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளருக்கு பெயிராகடிதம்.
அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி அவர்கள், தமிழ்நாடு வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளருக்கு பொதுமக்கள் நலன் கருதி கடிதம் எழுதியுள்ளார்.
மேலும் அவர் எழுதியுள்ள கடிதத்தில் மாநிலம் முழுவதும் பொதுமக்கள் தங்களுடைய சொந்த பயன்பாட்டிற்காக வேளாண் நிலங்களையும், வீட்டு மனைகளையும், தனி வீடுகளையும், அடுக்குமாடி குடியிருப்புகளையும், வணிக வளாகங்களையும் வாங்கவும் விற்கவும் செய்கின்றனர்.
இப்படி வாங்க அல்லது விற்கப்படும் கட்டிடங்களின் மதிப்பானது ரூபாய் 50 லட்சத்திற்கும் மேல் இருக்கும் பட்சத்தில் கட்டிடத்தை மதிப்பீடு செய்வதற்கு பொதுப்பணித் துறை சார்பில் (PWD) நியமிக்கப்பட்டுள்ள உதவி செயற்பொறியாளர்கள், (AEE) சம்பந்தப்பட்ட கட்டிடத்தை நேரில் பார்வையிட்டு மதிப்பாய்வு செய்து அவர்கள் வழங்குகின்ற கட்டிடத்தின் மதிப்பினை அடிப்படையாகக் கொண்டு, பதிவுத்துறையானது அதற்குரிய முத்திரை தீர்வை மற்றும் பதிவு கட்டணங்களை வசூலிக்கும் வகையில் தற்பொழுது நடைமுறையானது உள்ளது.
மேற்கூறிய வகையில் பொதுப்பணித் துறை சார்பில் கட்டடங்களை மதிப்பீடு செய்யும் உதவி செயற்பொறியாளர்கள் தமிழ்நாட்டில் உள்ள 38 வருவாய் மாவட்டங்களுக்கும், பதிவுத் துறையின் 11 மண்டலங்களுக்கும், 56 பதிவு மாவட்டங்களுக்கும், 586 சார் பதிவாளர் அலுவலகங்களுக்கும் சேர்த்து ஆக மொத்தம் இரண்டு பேர் மட்டுமே பணியில் உள்ளனர்.
அதேபோன்று கட்டிடங்களை பொருத்தவரை மாநகராட்சி, நகராட்சி பேரூராட்சி மற்றும் ஊராட்சி அலுவலகங்கள் மூலம் வழங்கப்பட்டுள்ள கட்டிட திட்ட அனுமதி வரைபடத்தின் அடிப்படையிலும், உள்ளாட்சி துறை மூலம் விதிக்கப்பட்டிருக்கிற சொத்து வரிகள் மற்றும் குடிநீர் – கழிவுநீர் வரி சம்பந்தமான இரசீதில் குறிப்பிடப்பட்டிருக்கின்ற சதுர அடியின் அடிப்படையிலும், சம்பந்தப்பட்ட சார் பதிவாளர் அவர்களே மேற்கண்ட கட்டட திட்ட அனுமதி சம்பந்தமான வரைபடத்தையும், வரி ரசீதனையும் பார்வையிட்டு, அதன் அடிப்படையில் முடிவெடுத்து, பதிவு அலுவலகத்திலேயே சம்பந்தப்பட்ட ஆவணதாரர்களுக்கு, அவர்கள் மேற்கொண்ட பதிவு ஆவணத்தை உடனடியாக திரும்ப வழங்கும் வகையிலும்,
அதேபோன்று தற்பொழுது நடைமுறையில் உள்ள பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர்கள் (ASSISTANT EXECUTIVE ENGINEER) கட்டிடத்தை நேரில் பார்வையிட்டு மதிப்பீடு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ள வரம்பு தொகையான ரூபாய்.50 லட்சம் என்கிற அளவுகோலினை மாற்றி அமைத்து இரண்டு கோடி ரூபாய் வரை அளவுகோல் வரம்பினை உயர்த்தி மாற்றி அமைத்திட வேண்டும் எனவும்,
மேலும் தமிழகத்தைப் பொறுத்த வரை பொதுப்பணித் துறையானது (PWD) சென்னை, திருச்சி, கோவை, மதுரை என நான்கு மண்டலங்களாக செயல்படுகிறது. எனவே குறைந்தபட்சம் பொதுப்பணி துறையின் ஒவ்வொரு மண்டலத்துக்கென்று ஒரு உதவி செயற்பொறியாளர் என்கின்ற அடிப்படையில் நான்கு உதவி செயற்பொறியாளர்களையாவது நியமனம் செய்வதற்கு பொதுப்பணித்துறைக்கு தாங்கள் அலுவலரை ஒதுக்கீடு செய்வதற்கான அனுமதியை பெற்று அரசுக்கு பரிந்துரைக்க வேண்டுகிறோம்,
ஆகவே பெருமதிப்பிற்குரிய தமிழ்நாடு வணிகவரி மற்றும் பதிவுத் துறை செயலாளர் அவர்கள் மேற்கண்ட வகையில் கட்டிடங்களை பதிவு செய்யும் பொழுது பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமத்தை தங்களின் கூடுதல் கவனத்தில் கொண்டு, தாங்கள் கனிவுடன் பரிசீலித்து, உரிய நடவடிக்கையை மேற்கொண்டு, உடனடியாக பொதுமக்களின் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், தாங்கள் தகுந்த வழிவகையை செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்து பெயிரா தலைவர் டாக்டர் ஹென்றி கடிதம் எழுதியுள்ளார்.