இரட்டை வேடம் போடும் அதிமுக: அமைச்சர் ரகுபதி கடும் தாக்கு!
பாஜகவுடன் இணைந்து நீங்கள் நடத்தும் கபட நாடகம் என்றைக்கும் வெற்றி பெற போவதில்லை என்றும் உங்களைப் போன்ற அடிமைகளை மக்கள் நம்ப போவதுமில்லை என்று அதிமுக மீது அமைச்சர் ரகுபதி கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் ரகுபதி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,தொகுதி மறுசீரமைப்பின் பெயரால் தமிழ்நாட்டிற்கு ஏற்படப்போகும் பேராபத்தை உணர்ந்து தமிழ்நாடு முதல்-அமைச்சர் நடத்திய அனைத்துக் கட்சிகூட்டம் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது என தெரிவித்துள்ளார்.
மேலும் கட்சி வேறுபாடுகளைத் தாண்டி தமிழ்நாட்டின் ஒற்றுமைக்குரலை வெளிப்படுத்த வேண்டும் எனும் முனைப்போடு முதல்-அமைச்சர் தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்தார் என்றும் தமிழர்களுக்கு எதிரியான பாஜகவும் அதன் எடுபிடிகள் சிலரையும் தவிர அனைவரும் பங்கெடுத்து முதல் அமைச்சரின் முன்னெடுப்பிற்கு ஆதரவு கொடுத்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அதிமுகவும் கூட்டத்தில் கலந்து கொண்டு ஆதரவு கொடுத்தது, ஆனால் செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார் திமுக நாடகம் நடத்துகிறது என மாற்றிப் பேசுகிறார் என குறிப்பிட்டுள்ள அமைச்சர் ரகுபதி
தனது கள்ளக்கூட்டாளி பாஜகவுடன் இணைந்து தமிழ்நாட்டின் உரிமைகளை அடகுவைத்து அடிமை ஆட்சி நடத்திய அதிமுக இதனை சொல்வதற்கு எதாவது தகுதியிருக்கிறதா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கெடுக்காமல் போனால் தமிழ்நாட்டு மக்களிடம் அம்பலப்பட்டு விடுவோமோ எனும் அச்சத்தில் கூட்டத்தில் கலந்து கொண்டு அதிமுக நாடகம் நடத்தியிருக்கின்றது என்பதையே ஜெயக்குமாரின் பேச்சு காட்டுகிறது என்றும் பாஜகவுடன் இணைந்து நீங்கள் நடத்தும் கபட நாடகம் என்றைக்கும் வெற்றி பெற போவதில்லை என்றும் உங்களைப் போன்ற அடிமைகளை மக்கள் நம்ப போவதுமில்லை என்றும் முதல்-அமைச்சரின் தலைமையில் தமிழ்நாடு போராடும், தனது உரிமையை வெல்லும். என தெரிவித்துள்ளார்.