வருவாய்த்துறை முதன்மைச் செயலாளருக்கு பெயிரா கடிதம்

Loading

அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி அவர்கள், தமிழகத்தில் ஆட்சேபமற்ற மற்றும் ஆட்சேபனைக்குரிய அரசு புறம்போக்கு நிலங்களில் வீடு கட்டி குடியிருக்கும் பொதுமக்களின் நலன் கருதி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் அரசு முதன்மை செயலாளர் திருமதி. அமுதா ஐஏஎஸ் அவர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

மேலும் அவர் எழுதியுள்ள கடிதத்தில்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் கடந்த 20-02-2025 அன்று  சென்னை செனாய் நகரில் நடந்த அரசு நிகழ்ச்சியில் தாங்கள் கலந்து கொண்டு, பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்த ஆட்சேபமற்ற புறம்போக்கு நிலங்களில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக வீடு கட்டி வசித்து வரும் பொதுமக்களுக்கு தகுதியின் அடிப்படையில் பட்டா வழங்கும் திட்டம் விரைவில் கொண்டு வரப்படும் என தமிழ்நாடு அரசு சார்பில் தாங்கள் தெரிவித்த உறுதியான செய்தியினை பத்திரிகை மற்றும் ஊடகத்தின் வாயிலாக படித்தும் பார்த்தும் அறிந்தோம். எளிய மக்களுக்கான மகத்தான இந்த திட்டத்தை எமது அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் சார்பாக வரவேற்று அரசுக்கும் தங்களுக்கும் உளம் நிறைந்த வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும் இத்தருணத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, அரசாணை எண்:465 நாள்:27.11.2018 ஆம் ஆண்டு 2018-2019-ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் ஆட்சேபனைக்குரிய புறம்போக்குகளான நீர்நிலைகள் மற்றும் மேய்க்கால், மந்தைவெளி மற்றும் சாலைகள் உள்ளிட்ட புறம்போக்கு நிலங்களை மீட்டெடுக்கும் பொருட்டு, இதில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக வீடு கட்டி வசித்து வரும் தகுதியுள்ள பயனாளிகளுக்கு அதே பகுதியில் உள்ள  ஆட்சேபனையற்ற (அட்சேபமற்ற) புறம்போக்கு நிலங்களில்  மாற்று நிலங்களை  தேர்வு செய்து  இலவச வீட்டு மனை பட்டா வழங்கபடும் எனவும், நடைமுறையில் உள்ள அரசு திட்டத்தின் படி குடியிருப்பு கட்டி தரப்படும் எனவும், மேற்கண்ட அரசாணையில் குறிப்பிடபட்டுள்ளதையும் தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.

ஆகவே மேற்கண்ட அரசாணை எண்.465 இல் குறிப்பிடப்பட்டுள்ள ஷரத்துகளை தங்களின் கூடுதல் கவனத்தில் கொண்டு, கனிவுடன் பரிசீலித்து தாங்கள் வெளியிட்ட பத்திரிக்கை செய்தியில் ஆட்சேபமற்ற புறம்போக்கு நிலங்களில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருந்து வரும் பொது மக்களுக்கு என நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவினை,  ஐந்து ஆண்டுகளாக குறைத்திடவும், அதேபோன்று மேற்கண்ட  அரசாணையில் குறிப்பிட்டுள்ள ஆட்சேபனைக்குரிய புறம்போக்கு நிலங்களில் ஐந்து ஆண்டு காலம் வீடு கட்டி குடியிருக்கும் பொது மக்களின் நலனையும் கருத்தில் கொண்டு, ஆட்சேபனைக்குரிய மற்றும் ஆட்சேபமற்ற புறம்போக்கு நிலங்களில் வீடு கட்டி குடியிருக்கும் தகுதியுள்ள பயனாளிகளுக்கு, ஆட்சேபமற்ற புறம்போக்கு நிலங்களில் மாற்று வீட்டு மனை பட்டா வழங்கும் திட்டத்தினையும், நடைமுறையில் உள்ள திட்டத்தின் அடிப்படையில் வீடு கட்டி தரும் திட்டத்தினையும், விரைவில் நடைமுறைப்படுத்திடும் வகையில் தாங்கள் நடவடிக்கை மேற்கொண்டு, உரிய வழிவகை செய்ய வேண்டும் என வருவாய்த்துறை முதன்மைச் செயலாளருக்கு  வேண்டுகோள் விடுத்து பெயிரா தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி கடிதம் எழுதியுள்ளார்.

0Shares