பட்டா குறித்து வருவாய்த்துறை அமைச்சருக்கு பெயிரா கடிதம்
பட்டா குறித்து வருவாய்த்துறை அமைச்சருக்கு பெயிரா கடிதம்
அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் மாண்புமிகு கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் அவர்களுக்கு பொதுமக்கள் நலன் கருதி, பட்டா உள்ளிட்ட வருவாய் துறையின் சேவைகள் சம்பந்தமாக கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
மேலும் அவர் எழுதியுள்ள கடிதத்தில்.
தமிழக அரசால் புதிதாக கொண்டுவரப்பட்டு நடைமுறைப்படுத்தியுள்ள தானியங்கி முறையில் தாமாகவே பட்டா மாறுதல் திட்டமான எங்கிருந்தும் எந்நேரத்திலும் பட்டா விண்ணப்பிக்கும் திட்டமானது தமிழகத்தில் நிலங்களை வைத்திருக்கின்ற பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது.
அதனைத் தொடர்ந்து புதிய வீட்டுமனை பிரிவுகளில் மனைகளை வாங்குகின்ற பொது மக்களுக்கும் பதிவு முடிந்தவுடன் உடனடியாக பட்டா கிடைக்கும் வகையில், (Bulk Subdivision) வீட்டுமனை பிரிவில் அமைந்திருக்கிற மனைகளை மொத்தமாக உட்பிரிவு செய்யும் திட்டமும் அரசால் புதியதாக கொண்டுவரப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
இந்த தானியங்கி பட்டா திட்டமான ஆகச்சிறந்த மக்களுக்கான மகத்தான திட்டத்தை மேற்கண்ட எமது அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு மனதாரப் பாராட்டி வரவேற்பதுடன், தமிழ்நாடு அரசுக்கும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறைக்கும், உளம் நிறைந்த வாழ்த்துக்களையும், நெஞ்சம் நிறைந்த நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறது.
மேலும் புதிய வீட்டுமனை பிரிவுகளுக்கு CMDA மற்றும் DTCP துறையால் தொழில் நுட்ப அனுமதி வழங்கப்பட்டு சம்பந்தப்பட்ட சார் – பதிவாளர் அலுவலகத்தில் சம்பந்தப்பட்ட வீட்டுமனை பிரிவில் ஒதுக்கப்பட்டு இருக்கிற பொது பயன்பாட்டிற்கான நிலம், சாலைகள், திறந்தவெளி நிலம், பூங்கா, மற்றும் மின்சார வாரியத்திற்கு (TANGEDCO) ஒதுக்கப்பட கூடிய நிலங்களை சம்பந்தப்பட்ட சார்பதிவாளர் அலுவலகத்தில் தானமாக பதிவு செய்து கொடுப்பதுடன், அவைகளுக்குரிய உட்பிரிவு செய்வதற்கான கட்டணத்தையும் அபிவிருத்தியாளர்கள் பதிவுத் துறை மூலமாகவே செலுத்தி விடுகின்றனர். இந்த தகவல்கள் அனைத்தும் தமிழ்நிலம் என்கிற மென்பொருள் மூலம் சம்பந்தப்பட்ட வருவாய் துறைக்கு உட்பிரிவு என்கிற உள்ளீட்டில் சென்றடையும். இதன் அடிப்படையில் அதிகப்படியாக அரசாணை எண்:210-இன் படி 30 நாட்களுக்குள் மேற்கண்ட இனங்களுக்கு பட்டா மாற்றம் செய்திட வேண்டும்.
மேலும் அபிவிருத்தியாளர்கள் சம்பந்தப்பட்ட வீட்டு மனை பிரிவில் இருக்கிற மனைகளை உட்பிரிவு செய்வதற்கு செலுத்த வேண்டிய உரிய கட்டணத்தை CMDA மற்றும் DTCP அலுவலகத்தில் இணையதளம் வாயிலாகவே செலுத்துகின்றனர். இதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட CMDA மற்றும் DTCP அலுவலகத்திலிருந்து சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வீட்டு மனைப் பிரிவு வரைபடங்கள் மற்றும் கட்டணம் செலுத்தியதற்கான தகவல்கள் அனைத்தும் தமிழ் நிலம் மென்பொருளின் வாயிலாகவே பதிவேற்றம் செய்யப்படும்.
இதன் அடிப்படையில் தான் சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்தில் நில அளவையர்கள் தமிழ் நிலம் என்கிற மென்பொருள் வாயிலாகவே அவர்களுக்கென வழங்கப்பட்ட லே-அவுட்டுக்கான உள்ளீடு கடவுச்சொல்லை பயன்படுத்தி, அதன் தகவல்களை உறுதி செய்து, பொது பயன்பாட்டிற்கான நிலம், சாலைகள், திறந்தவெளி நிலம், பூங்கா, மற்றும் மின்சார வாரியத்திற்கு (TANGEDCO) என தானமாக வழங்கப்பட்ட நிலங்களுக்கும், அதில் அமைந்திருக்கிற வீட்டு மனைகளுக்கும் தாமாகவே பட்டா மாற்றம் செய்திட வேண்டும்.
ஆனால் அதை விடுத்து நாகை மாவட்ட ஆட்சியர் எல்லைக்குட்பட்ட நாகை வட்டாட்சியர் அவர்கள் மேற்கண்ட இந்த திட்டம் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாமல், புதிய வீட்டு மனை பிரிவிற்கு விரைவாக மொத்தமாக உட்பிரிவு செய்து பட்டா வழங்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்காமல், மூன்று மாதங்கள் கடந்த பிறகு விண்ணப்பதாரர்களிடம் தனிப்பட்ட முறையில் வீட்டுமனை பிரிவுக்கு பட்டா வேண்டி விண்ணப்பிக்க வேண்டுமெனவும், அதற்குரிய உட்பிரிவு கட்டணத்தை செலுத்த வேண்டும் எனவும், தான்தோன்றித்தனமாகவும், தன்னிச்சையாகவும் வலியுறுத்துவதும் கட்டண வசூல் வேட்டையில் ஈடுபட்டு சட்டத்திற்கு புறம்பாக செயல்படுவதும் ஏற்புடையதல்ல, நாகை வட்டாட்சியரின் இச்செயல் மிகுந்த கண்டனத்துக்குரியது.
ஆகவே பெருமதிப்பிற்குரிய தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் அவர்கள் மேற்கண்ட பொதுமக்களின் பிரச்சனைகளை தங்களின் கூடுதல் கவனத்தில் கொண்டு, வீட்டுமனை அபிவிருத்தியாளர்களுக்கு அவர்களின் வீட்டு மனை பிரிவில் அமைந்துள்ள மனைகளுக்கு (Bulk Subdivision) மொத்தமாக உட்பிரிவு செய்து பட்டா மாற்றம் செய்வதற்கான கால அவகாசம் இதுவரை நிர்ணயம் செய்யப்படாத காரணத்தினால் வருவாய் துறையினர் மாதக்கணக்கில் கால அவகாசம் எடுத்துக் கொள்கிறார்கள். ஆகவே அரசாணை எண்:210 இல் குறிப்பிட்டுள்ளபடி 15 நாட்களில் இருந்து 30 நாட்களுக்குள் பட்டா மாற்றம் செய்திடும் வகையில் தாங்கள் கால அவகாசம் நிர்ணயம் செய்து, உடனடியாக பட்டா வழங்குவதற்கும்,
அதேபோல பொது பயன்பாட்டிற்கான நிலம், சாலைகள், திறந்தவெளி நிலம், பூங்கா, மற்றும் மின்சார வாரியத்திற்கு (TANGEDCO) என தானமாக வழங்கப்பட்ட நிலங்களுக்கு உட்பிரிவை உடனடியாக வழங்குவதற்கும், மேலும் வருவாய்த் துறையின் சார்பில் பொதுமக்களுக்கு வழங்கிடும் சேவைகளை விரைவில் எந்தவிதமான காரண காரியங்கள் ஏதுமின்றி உடனடியாக வழங்குவதற்கும் தாங்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்,
அதேபோன்று தமிழ்நாடு முழுவதும் தானியங்கி பட்டா திட்டம் தாமதம் ஏதும் இன்றி, சட்டத்திற்கு உட்பட்டு தாமாக நடைபெறுவதற்கு தாங்கள் வழிவகை செய்து உறுதி செய்ய வேண்டும் எனவும், வருவாய்த்துறை அமைச்சருக்கு பெயிரா தலைவர் டாக்டர் ஹென்றி கடிதம் எழுதியுள்ளார்.