கூட்டணி என்றால் 20 தொகுதி…அடம் பிடிக்கும் திமுக..சிவா கணக்கு பலிக்குமா?

Loading

புதுச்சேரி:

2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணியில் 20, தனித்து என்றால் 30 தொகுதியில் திமுக போட்டியிடும்என எதிர்க்கட்சித் தலைவர் சிவா உறுதியாக பேசினார்.

புதுச்சேரி மாநில திமுக செயற்குழுவின் அவசர ஆலோசனைக் கூட்டம் லப்போர்த் வீதியில் நடைபெற்றது திமுக அமைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான சிவா பேசும்போது,

தமிழ்நாடு திராவிட மாடல் ஆட்சியின் திட்டங்கள் புதுச்சேரி மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்பது தான் எங்கள் எண்ணம். அதை நோக்கிய பயணத்தில் சில சலசலப்புகள் இருக்கத்தான் செய்யும். நாம் பனங்காட்டு நரி. எந்த சலசலப்புக்கும் அஞ்ச மாட்டோம் என்பது புதுச்சேரி மக்கள் அறிவர்.

புதுச்சேரி மாநிலம் வளர்ச்சி பெற வேண்டும். படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். புதுச்சேரியில் தொழில் புரட்சியை உருவாக்க வேண்டும், தொலைந்துபோன சுற்றுலாவை மீட்டெடுக்க வேண்டும் என்றுதான் ஜனநாயக வழியில் திமுக தொடர்ந்து போராடி வருகிறது. புதுச்சேரியில் திமுக ஆட்சியில் இருக்கும்போதுதான் தொழில் வளர்ச்சி, கல்வி வளர்ச்சி ஏற்படுத்தப்பட்டது.
ஆனால் இன்று இரட்டை என்ஜின் பூட்டிய அரசால் எந்த ஒரு புதிய திட்டத்தையும் கொண்டுவர முடியமால் நிர்வாகத்தில் இரு துர்வமாக செயல்படுகின்றனர். பெஸ்ட் புதுச்சேரி ஆக்குவோம் என்றார் நிர்மலா சீத்தாராமன், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தருவோம் என்றார் உள்துறை அமைச்சர் அமித்ஷா. ஆனால் எதுவும் நடந்தபாடில்லை.

கூட்டுறவு சர்க்கரை ஆலை, பஞ்சாலைகளில் பணிபுரிந்த 20 ஆயிரம் தொழிலாளர்கள் இன்று தெருவில் நிற்கிறார்கள். இந்த மில்கள் திறந்திருந்தால் அதில் நடைபெற்ற ஊழல்கள் வெளிச்சத்துக்கு வந்துவிடும் என்பதால் மில்களை விற்று வருகிறார்கள். அந்த மில்களில் இருந்த கோப்புகள் எல்லாம் மாயமாகிவிட்டன.

வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் கழக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அனுமதியோடு புதுச்சேரியில் திமுக கூட்டணியில் 20 தொகுதிகளை கேட்டு பெறுவோம். தனித்து என்றால் 30 தொகுதியிலும் போட்டியிட்டு புதுச்சேரியில் மீண்டும் திராவிட மாடல் ஆட்சியை அமைப்போம். இனியும் ஓடாத வண்டியில் ஏறி பயணம் செய்ய திமுக தயாராக இல்லை. தற்போதுள்ள 6 திமுக எம்எல்ஏ–க்கள் சிறப்பாக மக்கள் பணியாற்றுகின்றனர். வெற்றிவாய்ப்பை இழந்தவர்கள் தொடர்ந்து எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் மக்களுக்கு சேவை செய்து வருவதால் நிச்சயம் திமுக வெற்றிபெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதற்காக திமுக–வினர் ஒரு முகமாக நின்று பணியாற்றி வேண்டும் என்றார்.

0Shares