லஞ்சம் வாங்கினால் கடும் நடவடிக்கை: தமிழக அரசு எச்சரிக்கை!
மாநிலம் முழுவதுமுள்ள நெல் பயிரிடும் விவசாயிகள் யாருக்கும் கையூட்டு கொடுக்கவேண்டியதில்லை என்றும் அப்படி நெல் கொள்முதல் நிலையங்களில் லஞ்சம் வாங்கினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-மாநிலம் முழுவதும் நெல் பயிரிடும் விவசாயிகளின் நலன் கருதி 2,600-க்கும் மேற்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன என்றும் இந்த நெல் கொள்முதல் நிலையங்களில் நாளொன்றிற்கு சுமார் 12,800 விவசாயிகளிடமிருந்து சுமார் 60,000 டன் வரையிலான நெல் கொள்முதல் செய்யப்படுகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லிற்குண்டான தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் மிண்ணனு பரிவர்த்தனை மூலம் நேரடியாக வரவு வைக்கப்பட்டு, நெல் நகர்வு செய்யப்பட்டு வருகிறது என்றும் சில நெல் கொள்முதல் மையங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல்மூட்டைகளுக்கு கையூட்டு வாங்குவதாக புகார்கள் வருகின்ற காரணத்தினால் நுகர்பொருள் வாணிபக் கழகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
அதற்காக , சென்னை தலைமை அலுவலகத்தில் 24 மணிநேரமும் செயல்படக் கூடிய 18005993540 என்ற எண்ணுடன் இயங்கி வரும் உழவர் உதவி மையம் இலவச தொலைபேசியில் புகார்களைத் தெரிவிக்க விரும்பும் விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் குறித்த புகார்களை தெரிவிக்கலாம் என குறிப்பிட்டுள்ள தமிழக அரசு, புகார்களின் அடிப்படையில் உடனுக்குடன் தொடர்புடைய மாவட்டங்களுக்கு நேரில் சென்று உரிய விசாரணையினை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் கரம்பக்குடி, விலாப்படி மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தில் பட்டுக்கோட்டை மற்றும் இலுப்பைவிடுதி ஆகிய இடங்களில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும் பணியாற்றும் பணியாளர்கள் கையூட்டு பெறுவதாக வந்த புகார்களையடுத்து விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் தற்காலிக மற்றும் பருவகால பணியாளர்களை பொறுத்தவரையில் எழும் புகார்களின் மீது உண்மைத்தன்மை கண்டறியப்பட்டால் அவர்கள் உடனுக்குடன் பணியிலிருந்து நிரந்தரமாக நீக்கப்படுவார்கள் என கூறியுள்ள தமிழக அரசு, நிரந்தரப் பணியாளர்களை பொறுத்தவரையில் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டு ஒழுங்கு நடவடிக்கை விதிகளின்படி மேல்நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள் என தெரிவித்துள்ளது.
எனவே, மாநிலம் முழுவதுமுள்ள நெல் பயிரிடும் விவசாயிகள் யாருக்கும் கையூட்டு கொடுக்கவேண்டியதில்லை. புகார்கள் இருக்கும் பட்சத்தில் மேற்குறிப்பிடப்பட்டுள்ள எண்களுக்கு வாட்ஸ்-அப் மூலமாகவோ அல்லது நேரில் தொடர்புகொண்டோ புகார்களை தெரிவிக்கலாம் என்றும் மேலும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மேலாண்மை இயக்குனருக்கு 9445257000 என்ற எண்ணில் (வாட்ஸ்-அப் செய்தியாக மட்டும்) புகார்களை அளிக்கலாம் என்றும் புகார்களுக்கு ஆதாரமாக ஆவணங்களோ அல்லது காணொலியோ இருந்தால் அதனையும் பதிவிடலாம் என தமிழக அரசு இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.