ஆபாச படம் பார்த்து 2 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை..4 சிறுவர்கள் கைது!
கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியில் செல்போனில் ஆபாச படம் பார்த்து 2 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 4 சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் அரசு பள்ளியில் அதேபகுதியை சேர்ந்த 9 மற்றும் 10 வயது மாணவிகள் 2 பேர் படித்து வருகின்றனர். மேலும் அதே ஊரில் 13 வயது முதல் 16 வயது வரை உள்ள 4 சிறுவர்கள் வசித்து வருகின்றனர். இந்த சிறுவர்கள் , மாணவிகளின் உறவினர்கள் என்று தெரிகிறது.
சம்பவத்தன்று அந்த 4 பேரும் சேர்ந்து 2 மாணவிகளை தனியாக அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் கடந்த சில மாதங்களாக 4 பேரும், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்து உள்ளனர் என்றும் தெரியவந்துள்ளது . இதை அறிந்தவர்கள் 1098-க்கு என்ற குழந்தைகளுக்கான உதவி எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளித்தனர். அப்போது புகாரின் பேரில் மாவட்ட குழந்தைகள் நல அதிகாரிகள் சென்று விசாரணை மேற்கொண்டனர். அதனை தொடர்ந்து பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.
அப்போது மகளிர் போலீசார் அந்த 4 சிறுவர்களையும் அழைத்து விசாரணை நடத்தினார்கள். இதில் 4 சிறுவர்களும் பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர்கள், செல்போனில் ஆபாச படங்களை பார்ப்பதை வழக்கமாக கொண்டு இருந்ததும், அந்த படங்களை பார்த்து, அரையாண்டு தேர்வு விடுமுறையின்போது மாணவிகளை தனியாக அழைத்து சென்று தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்ததும் விசாரணையில் தெரிய வந்தது.
இதை தொடர்ந்து போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 சிறுவர்களையும் கைது செய்தனர். அதன் பின்னர் 4 சிறுவர்களும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கோவையில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.