புதுச்சேரியில் உடனடியாக வக்பு வாரியம் அமைக்க வேண்டும்..அதிமுக கோரிக்கை!
கடந்த 9 ஆண்டுகாலமாக வக்பு வாரியம் அமைக்கப்படாமல் உள்ள புதுச்சேரி மாநிலத்திற்கு உடனடியாக வக்பு வாரியம் அமைக்க உரிய நடவடிக்கையை தாங்கள் எடுக்க வேண்டும் என புதுச்சேரி,அதிமுக மாநில செயலாளர் அன்பழகன், துணைநிலை ஆளுநரை சந்தித்து மனு அளித்தார்.
புதுச்சேரி,அதிமுக மாநில செயலாளர் அன்பழகன், துணைநிலை ஆளுனர் கைலாசநாதன் சந்தித்து மனு அளித்தார்.அப்போது அந்த மனுவில் கூறியிருப்பது:புதுச்சேரியில் கடந்த திமுக காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்ற 2016-ம் ஆண்டில் வக்பு வாரிய தலைவர் பதவி காலம் முடிவடைந்தது. அதன் பிறகு 2016-ம் ஆண்டில் இருந்து இன்று வரை ஏறத்தாழ 9 வருடங்களாக வக்பு வாரியம் அரசால் அமைக்கப்படவில்லை. வக்பு வாரிய சட்டப்படி முஸ்லீம் சமுதாய வழக்கறிஞர் பிரிவில் இருந்து திரு.A.சையத் அஹமது மொய்தீன், B.A(French),LLB., என்பவர் தேர்தல் மூலம் வப்பு வாரிய உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.
அதன்பிறகு மாநில வக்பு வாரியத்திற்கு கடந்த 21-06-2022-ல் ஐந்து தகுதியான உறுப்பினர்களை G.O.MS No.28/US(WAQFT.1022) அரசாணைபடி அரசு நியமனம் செய்தது. 13-07-2022-ல் வக்பு உறுப்பினர்களுக்குள் தலைவர்களை தேர்ந்தெடுக்க அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால் எவ்வித காரணமும் இன்றி தலைவர் தேர்ந்தெடுத்தல் அரசால் ரத்து செய்யப்பட்டது.
வக்பு வாரியத்திற்கு தலைவரை தேர்வு செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் வழக்கு எண். WP No.20243/2023 உத்தரவு வழங்கியும் புதுச்சேரி அரசு இன்று வரை வக்பு வாரியத்திற்கு தலைவரை தேர்ந்தெடுக்கவில்லை.
வக்பு வாரிய நிர்வாக கட்டுப்பாட்டில் நிர்வகிக்க கூடிய பள்ளிவாசல்கள், தர்காக்கள், மத்ராசிகள் ஆகியவற்றின் பொருப்பாளர்கள் (முத்தவள்ளிகள்) அனைவரின் பதவிக்காலமும் காலாவதியாகி பல ஆண்டுகள் ஆகியும், புதிய நிர்வாகிகளை நியமனம் செய்ய முடியவில்லை.
புதுச்சேரி மாநிலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட வக்பு வாரியம் இல்லாததால் முஸ்லீம் சமுதாய மக்களின் வாழ்க்கை தரம் உயர்வுக்காக மத்திய வக்பு கவுன்சில் மூலம் வழங்கப்படும் நிதியுதவி பல ஆண்டுகளாக வழங்கப்படவில்லை. வக்பு வாரியத்திற்கு தலைவர் தேர்ந்தெடுக்கப்படாததால் வக்பு வாரிய சொத்துக்கள் முறையாக பாதுகாக்கப்படவில்லை. வக்பு வாரியத்தின் சொத்துக்களை மிக குறைந்த வாடகைக்கு பல ஆண்டுகளாக குறிப்பிட்ட ஒரு சிலர் அனுபவித்து வருகின்றனர். வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் ஏழை எளிய முஸ்லீம் சமுதாய மக்களுக்கு எவ்வித உதவியும் வக்பு வாரியத்தால் செய்யப்படவில்லை.
எனவே மேதகு துணைநிலை ஆளுநர் அவர்கள் கடந்த 9 ஆண்டுகாலமாக வக்பு வாரியம் அமைக்கப்படாமல் உள்ள புதுச்சேரி மாநிலத்திற்கு உடனடியாக வக்பு வாரியம் அமைக்க உரிய நடவடிக்கையை தாங்கள் எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.