வேலைக்கு வராததை கண்டித்ததால் ஆத்திரம்..மேலாளரை சுத்தியால் போட்டு தள்ளிய 4 ஊழியர்கள்!
சென்னை:
சென்னை மணலி புதுநகரில் வேலைக்கு வராததை கண்டித்ததால் மேலாளரை 4 ஊழியர்கள் சுத்தியலால் அடித்து படுக்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மணலி புதுநகர் அருகே உள்ள வெள்ளிவாயல் பகுதியில் தனியாருக்கு சொந்தமான கன்டெய்னர்கள் நிறுத்தும் இடம் இயங்கி வருகிறது. இங்கு ஆந்திரா மாநிலம் கூடூர் மாவட்டத்தை சேர்ந்த 45 வயதான சாய் பிரசாத் என்பவர் மேலாளராக வேலை செய்து வந்தார்.மேலும் இங்கு தண்டையார்பேட்டை பகுதியை சேர்ந்த பாலாஜி , நாப்பாளையம் பகுதியை சேர்ந்த ஷாம் , சாய்சாரதி முகிலன் ஆகிய 4 வாலிபர்களும் வேலை செய்து வந்தனர்.
இந்தநிலையில் கடந்த 5-ந்தேதி வேலைக்கு சென்ற பாலாஜி மறுநாள் மாற்று பணியாளர்கள் வருவதற்கு முன்பே சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இது சம்பந்தமாக மேலாளர் சாய்பிரசாத் பாலாஜியிடம் கேட்டபோது இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது என தெரிகிறது . இதையடுத்து மேலாளர், பாலாஜியை வேலைக்கு வர வேண்டாம் என கூறியதாக சொல்லப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த பாலாஜி, நண்பர்களான ஷாம், சாய்சரதி, முகிலன் ஆகியோருடன் நேற்று முன்தினம் நள்ளிரவில் கன்டெய்னர் யார்டில் மேலாளர் தங்கி இருந்த அறைக்கு சென்றுள்ளனர் . அப்போது அங்கு தூங்கிக் கொண்டிருந்த மேலாளர் சாய் பிரசாத்தை சுத்தியலால் அடித்து தாக்கினர்.இதில் தலையில் பலத்த காயம் அடைந்த சாய் பிரசாத் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.இதையடுத்து பின்னர் அங்கிருந்து 4 பேரும் தப்பி ஓடி விட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த மணலி புதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கொலை செய்யப்பட்ட மேலாளரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து கொலை சம்பவத்தில் தொடர்புடைய இளைஞர்களை தேடி வருகின்றனர்.இந்த சம்பவம் மணலி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.