விஜய்யுடன் கை கோர்க்கும் ரங்கசாமி? தமிழகத்தில் கால் பதிக்கும் என்.ஆர்.காங்கிரஸ்!
வருகிற சட்டமன்ற தேர்தலில் தமிழக தொகுதிகளிலும் என்.ஆர்.காங்கிரஸ் போட்டியிடும் என முதலமைச்சர் ரங்கசாமி கூறினார்.
புதுச்சேரி:’
யூனியன் பிரதேசமான புதுவையில் கடந்த 2011-ம் ஆண்டு காங்கிரசிலிருந்து விலகிய ரங்கசாமி, பிப்ரவரி 7-ந் தேதி என்.ஆர்.காங்கிரஸ் என்ற கட்சியை தொடங்கினார்.இந்தநிலையில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் 15-ம் ஆண்டு விழா கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது.
அப்போது முதலமைச்சர் ரங்கசாமி அலுவலக வாசலில் உள்ள கொடிக்கம்பத்தில் கட்சி கொடியேற்றி கட்சி அலுவலகத்தில் உள்ள சாமி படங்களுக்கு பூஜை செய்தார்.தொடர்ந்து கூடியிருந்த தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கி பேசினார். அவர் பேசியதாவது:-
கடந்த ஆட்சியில் அரசு பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருந்தது. இதனால் அரசு பணிகளே நடைபெறாத சூழ்நிலை இருந்தது என்றும் எமது அரசு பொறுப்பேற்றது முதல் காலி பணியிடங்களை தொடர்ந்து நிரப்பி வருகிறோம் என்றும் அரசின் அனைத்து துறையிலும் காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. இளைஞர்களுக்கு வேலை வழங்க வேண்டும் என்ற நோக்கத்தோடு மீதமுள்ள காலிபணியிடங்களையும் நிரப்புவோம் என கூறினார்.
ஆளும்கட்சி, எதிர்கட்சி என எம்.எல்.ஏ.க்களில் வேறுபாடும், வித்தியாசமும் பார்க்காமல், மாநில வளர்ச்சியை குறிக்கோளாக கொண்டு செயல்படுகிறோம் என்றும் கட்சி அமைப்பை வலுப்படுத்த வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை எழுந்துள்ளது என்றும் தற்போது 11 தொகுதிகளுக்கு நிர்வாகிகள் நியமித்துள்ளோம் என்றும் மீதமுள்ள தொகுதிகளுக்கும் விரைவில் நிர்வாகிகள் நியமிக்கப்படுவார்கள் என கூறினார்.
மேலும் தொடர்ந்து பேசிய முதலமைச்சர் ரங்கசாமி,என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தமிழகத்திலும் கால் பதிக்க வேண்டும் என பலதரப்பிலும் கோரிக்கை இருந்து வருகிறது என்றும் தமிழகத்திலும் காமராஜர் கொள்கையை கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது. இதனால் வருகிற சட்டமன்ற தேர்தலில் தமிழக தொகுதிகளிலும் என்.ஆர்.காங்கிரஸ் போட்டியிடும் என கூறினார்.
மேலும் காமராஜரின் எண்ணங்களை, செயல்பாடுகளை கருத்தாக கொண்டு செயல்படுவோம் என்றும் 2026 சட்டமன்ற தேர்தலிலும் நாம் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம் என கூறிய முதலமைச்சர் ரங்கசாமி,மக்களோடு இணைந்து கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் செயல்பட வேண்டும் என்றும் மக்களின் குறைகளை கேட்டு அதை நிவர்த்தி செய்யுங்கள் என்றும் அரசிடமும் தெரிவியுங்கள், அரசு அதை நிறைவேற்றும்.இவ்வாறு அவர் பேசினார்.