சென்னையில் செயல்படும் கேப்டன் சீனிவாச மூர்த்தி மத்திய ஆயுர்வேத ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆய்வு செயல்பாடுகள்
சென்னையில் செயல்படும் கேப்டன் சீனிவாச மூர்த்தி மத்திய ஆயுர்வேத ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆய்வு செயல்பாடுகள்
இந்திய அரசின் ஆயுஷ் அமைச்சகத்தின் ஆயுர்வேத அறிவியல்களுக்கான மத்திய கவுன்சிலின் (CCRAS) கீழ் சென்னையில் செயல்படும் கேப்டன் சீனிவாச மூர்த்தி மத்திய ஆயுர்வேத ஆராய்ச்சி நிறுவனம் (CSMCARI), ஆயுர்வேதம் மூலம் சுகாதார ஆராய்ச்சிகளை மேம்படுத்த செயலாற்றி வருகிறது. இந்த நிறுவனம் வேதியியல், மருந்தியல், தாவரவியல் / மருந்தியல், மருந்தியல், உயிர்வேதியியல் மற்றும் நுண்ணுயிரியல் போன்ற பல்வேறு துறைகளைக் கொண்டுள்ளது. இந்நிறுவனம் தற்போதைய அரசின் முதல் 100 நாட்களில் குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது.
நூற்றுக்கணக்கான இஎம்ஆர் / ஐஎம்ஆர் திட்டங்களை நிறைவு செய்துள்ளதோடு, தற்போது சிஎஸ்எம்சிஏஆர்ஐ ஆனது 26 துறைகளுக்கு இடையேயான ஐஎம்ஆர் திட்டங்களைக் கொண்டுள்ளது. இதுவரை இந்நிறுவனம் 500-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளை தேசிய மற்றும் சர்வதேச பத்திரிகைகளில் வெளியிட்டுள்ளது. ஆயுர்வேதத்தில் 8 காப்புரிமைகள் மற்றும் கருத்தரங்கு / மாநாடு / ஏறக்குறைய 200 அறிவியல் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
இந்நிறுவனத்துக்கு தமிழ்நாடு மருந்துக் கட்டுப்பாட்டாளரால் (இந்திய மருத்துவ முறை) ஆயுஷ் தயாரிப்புகளை பரிசோதிப்பதற்காக மருந்து சோதனை ஆய்வகமாக (DTL) உரிமம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், இந்நிறுவனம் சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் முனைவர் பட்ட ஆய்வு மையமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 40-க்கும் மேற்பட்டவர்களுக்கு முனைவர் பட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன. தற்போது 10 மாணவர்கள் இந்த நிறுவனத்தில் முனைவர் கல்வி படித்து வருகின்றனர். பல்வேறு கல்வி நிறுவனங்களின் இளங்கலை, முதுகலை மற்றும் ஆராய்ச்சி அறிஞர்களுக்கான அதிநவீன கருவிகள்/உபகரணங்கள் குறித்த பயிற்சி இங்கு அளிக்கப்படுகிறது. இந்த நிறுவனம் தொடர்ந்து மருத்துவக் கல்வி (CME) திட்டம், பயிற்சிகள், பட்டறைகள், மாநாடுகளை நடத்துகிறது.
அண்மையில், சிசிஆர்ஏஎஸ் (CCRAS), அரும்பாக்கத்தில் உள்ள இந்திய மருத்துவம், ஹோமியோபதி ஆணையர் அலுவலகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு மா. சுப்பிரமணியன், முன்னிலையில் கையெழுத்திட்டது.
நாளை (2024 அக்டோபர் 29) சிஎஸ்எம்சிஏஆர்ஐ நிறுவனம் 9-வது ஆயுர்வேத தினத்தை முன்னிட்டு கருத்தரங்குகளுடன் மருத்துவ முகாம்கள், போட்டிகள், ஆகியவற்றை நடத்தவுள்ளது.