ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் டாக்டர் ஆசந்த லட்சுமிபதி மண்டல ஆயுர்வேத ஆராய்ச்சி நிறுவனத்தின் 100 நாள் சாதனைகள்

Loading

ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் டாக்டர் ஆசந்த லட்சுமிபதி மண்டல ஆயுர்வேத ஆராய்ச்சி நிறுவனத்தின் 100 நாள் சாதனைகள்

 PIB Chennai

சென்னையில் உள்ள டாக்டர் ஆசந்த லட்சுமிபதி மண்டல ஆயுர்வேத ஆராய்ச்சி நிறுவனம் பல்வேறு நோய்களைக் கண்டறியும் பரிசோதனைகளை மேற்கொண்டு வருவதுடன் ஆயுஷ் மருத்துவ சிகிச்சைகளையும் வழங்கி வருகிறது.

மத்தியில் 3-வது முறையாக தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்த 100 நாட்களில் ஆயுஷ் அமைச்சகம் புரிந்துள்ள  பல்வேறு சாதனைகளை, இந்த நிறுவனத்தின் தலைவரும், உதவி இயக்குநருமான திரு சி முரளிகிருஷ்ணா சென்னையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் தன்னாட்சி அமைப்பாக செயல்படும் மத்திய ஆயுர்வேத அறிவியல்  ஆராய்ச்சி கவுன்சிலின் கீழ் சென்னை நிறுவனம் 1971-ம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. சென்னை தரமணியில் உள்ள விஎச்எஸ் மருத்துவமனை வளாகத்தில் செயல்பட்டு வரும் இந்த நிறுவனம், ஆயுர்வேத சிகிச்சை முறைகளில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் கவனம் செலுத்தி வருகிறது.

இந்நிறுவனம் பல்வேறு நோய்களுக்கான மருத்துவ பரிசோதனைகளை நடத்துவதுடன், இலவச சிகிச்சைகளையும் வழங்கி வருகிறது.  மருத்துவர்களின் ஆலோசனை, மருந்து விநியோகமும் இதில் அடங்கும். வெளி நோயாளிகள் பிரிவில் ப்ளூ காய்ச்சல் போன்ற நோய்களுக்கு தினசரி சிகிச்சை அளிக்கப்படுகிறது.  முதியோர்களுக்கான சிறப்பு மருத்துவம் ஒவ்வொரு செவ்வாய் கிழமையும், வர்ம நோய்களுக்கான சிகிச்சை ஒவ்வொரு புதன் கிழமையும் வழங்கப்படுகிறது.

இந்த நிறுவனம் கடந்த 100 நாட்களில் 90,251 வெளி நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துள்ளது என்று கூறிய திரு முரளி கிருஷ்ணா 1,39,209 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார். 75,999 நோயாளிகளுக்கு இந்தக் காலகட்டத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்த நிறுவனம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும், இலவச மருத்துவ முகாம்களையும் நடத்தி வருவதாகவும் அவர் கூறினார்.

நீரிழிவு, பெண்களுக்கு மாதவிடாய் நிற்கும் கால பிரச்சனைகள், ரத்த அழுத்தம், உடல் பருமன், மலேரியா போன்ற பல்வேறு நோய்களுக்கு சுமார் 60 மருத்துவ பரிசோதனை முகாம்களை வெற்றிகரமாக இந்த நிறுவனம் நடத்தியுள்ளது.

கொவிட்-19 தொற்றுக்கு ஆயுர்வேத முறைப்படியான சிகிச்சை தாக்கத்தை ஏற்படுத்தியது குறித்து அண்மையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளூர் மொழிகளில் மருத்துவ இலக்கிய ஆராய்ச்சியின் கீழ் 11 பாடப்புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளது. தேசிய மற்றும் சர்வதேச இதழ்களில் 120 ஆராய்ச்சி கட்டுரைகள் வெளிவந்துள்ளன.

ஆயுர்வேதா தினம், சர்வதேச யோகா தினம், சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டு, விடுதலையின் அமிர்தப் பெருவிழா 2.0, ஊட்டச்சத்து மாத நடவடிக்கைகள், தூய்மையே சேவை போன்ற நிகழ்ச்சிகள் இந்த நிறுவனத்தின் சார்பில் நடத்தப்பட்டுள்ளன என்ற தகவலையும் அவர் தெரிவித்தார்.

செய்தியாளர் சந்திப்பின் போது மூத்த ஆராய்ச்சி அலுவலர்கள் டாக்டர் சீனிவாஸ், கே பிரமிளா தேவி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

     

0Shares