திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலகம் அருகில் ரூ.1 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு கட்டிடத்தை இடித்து அகற்றினர்
திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலகம் அருகில் ரூ.1 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு கட்டிடத்தை ஜேசிபி இயந்திரம் மூலம் வருவாய்த் துறையினர் இடித்து அகற்றினர் :
திருவள்ளூர் செப் 13 : திருவள்ளூர் நகராட்சி சார்பில் ராஜாஜிசாலையில் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. 1 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள இந்த பள்ளியில் 700-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.திருவள்ளூர் நகரின் முக்கியப் பகுதியில் உள்ள இந்த பள்ளியில் மாணவர் சேர்க்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் போதிய இட வசதி இல்லாமல் மாணவ மாணவிகள் சிரமப்பட்டு வந்தனர். இதனால் கூடுதல் வகுப்பறை கட்டவோ, அல்லது மாற்று இடத்தில் புதிய கட்டிடம் கட்டித் தரக்கோரி, திருவள்ளூர் நகராட்சி சார்பில் கோரிக்கை விடப்பட்டது.
இந்நிலையில் திருவள்ளூர் மாவட்ட தலைநகரில் சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலை வட்டாட்சியர் அலுவலகம் அருகில் அரசுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட 51 சென்ட் நிலத்தை மீட்கக் கோரி மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை விடுத்திருந்ததை ஏற்று கடந்த ஜனவரி மாதம் 4-ம் தேதி மாவட்ட கலெக்டர் த.பிரபு சங்கர் உத்தரவின் பேரில் திருவள்ளூர் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார் முன்னிலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. இதனையடுத்து மீட்கப்பட்ட பகுதியில் ரூ.7.50 கோடி மதிப்பீட்டில் திருவள்ளூர் நகராட்சி மேல்நிலைப் பள்ளி கட்டுவதற்கான பூமி பூஜை கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றது.
இதனையடுத்து பள்ளி கட்டுமான பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் சார்பில் ஆக்கிரமித்து கட்டி இருந்த ரூ.1 மதிப்பிலான கட்டிடத்தை இன்று காலை 9 மணி அளவில் அகற்றும் பணி நடைபெற்றது. திருவள்ளூர் வட்டாட்சியர் வாசுதேவன் , நகராட்சி ஆணையர் திருநாவுக்கரசு நகராட்சி சுகாதார அலுவலர் கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலையில் ஜேசிபி எந்திரம் மூலம் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கட்டிடத்தை இடித்து அகற்றினர். இதனால் நகராட்சி மேல்நிலைப்பள்ளி கட்டுவதற்கான பணிகள் விரைவில் முடிவு அடையும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.