வேலைவாய்ப்புடன் கூடிய இலவசப் பயிற்சி

Loading

வேலைவாய்ப்புடன் கூடிய இலவசப் பயிற்சி

 PIB Chennai

மத்திய குறு, சிறு, நடுத்தர தொழில்கள் அமைச்சகத்தின் கீழ், செயல்படும்  சென்னை கிண்டியில் உள்ள மத்திய காலணி தயாரிப்பு பயிற்சி நிறுவனம் எஸ்சி,எஸ்டி பிரிவினருக்கு கட்டணமின்றி 6 மாத கால பயிற்சியை வழங்கவுள்ளது. இந்தப் பயிற்சி 2024, ஜூலை 29 அன்று  தொடங்கும் என்று இந்தப் பயிற்சி நிறுவனத்தின்  இயக்குநர்  திரு கே முரளி இன்று (19.07.2024) சென்னையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இந்தப் பயிற்சிக்கு 50 பேர் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள் என்றும், ஒவ்வொன்றிலும் 25 பேர் பங்கேற்புடன் இரண்டு பிரிவுகளாக பயிற்சி அளிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

தேசிய எஸ்சி,எஸ்டி மையத்தின் ஆதரவில் நடத்தப்படும் காலணி வடிவமைப்பு, உற்பத்திக்கான பயிற்சி வகுப்பில் சேர்வதற்கு குறைந்தபட்சம் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்றும், 18-வயது நிரம்பியவராக  இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

பயிற்சியில் சேரும் காலத்தில் 10-ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல், மாற்றுச்சான்றிதழ், எஸ்சி, எஸ்டி சான்றிதழ், ஆதார் அட்டை, பாஸ்போர்ட் அளவு வண்ணப்புகைப்படம் ஆகியவற்றை கொண்டு வரவேண்டும்.  தங்கிப் பயில விரும்புவோருக்கு விடுதி வசதி இருப்பதாக அவர் கூறினார்.

மேலும் விவரங்களை தெரிந்துகொள்ள www.cftichennai.in என்ற இணையதளத்தை அல்லது 9677943633/ 9677943733 என்ற செல்பேசி எண்களில் தொடர்புகொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

செய்தியாளர் சந்திப்பின் போது சென்னை பத்திரிகை தகவல் அலுவலக கூடுதல் தலைமை இயக்குநர் திரு எம் அண்ணாதுரை, இணை இயக்குநர் திரு பி.அருண்குமார், துணை இயக்குநர் திருமதி ஜெ விஜயலட்சுமி ஆகியோர் உடனிருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த திரு முரளி,  இந்தப் பயிற்சிக்குப் பின்,  ஒரு மாத காலம்  நிறுவனம் ஒன்றில் அனுபவப் பயிற்சி பெற வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும் என்றார். மத்திய காலணி தயாரிப்பு பயிற்சி நிறுவனத்தில் மொத்தம் 7 பாடப்பிரிவுகள் இருப்பதாகவும், இங்கு பயிற்சிப் பெற்றவர்கள் 100 சதவீத வேலைவாய்ப்பை பெற முடியும் என்றும் அவர் கூறினார்.

உலகிலேயே காலணி தயாரிப்பில் இந்தியா இரண்டாவது பெரிய நாடாக உள்ளது என்றும், கடந்த 15 ஆண்டுகளில்  அதிகபட்சம் அந்நிய செலாவணி ஈட்டும் நாடுகளில் முதல் 10 இடத்தில் இந்தியா இருக்கும் நிலையில், இதில் 80 சதவீதம் காலணி உள்ளிட்ட தோல் பொருட்கள் ஏற்றுமதி மூலம், ஈட்டப்படுவதாகவும் அவர் கூறினார்.

காலணிகள் தயாரிப்பில்  தமிழ்நாடு முதலிடத்தைப் பெற்றிருப்பதாக குறிப்பிட்ட அவர், பல பெரிய நிறுவனங்கள் தமிழ்நாட்டில் காலணி தயாரிப்பு தொழில் பிரிவுகளை தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தங்களை செய்துகொண்டிருப்பதால், அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் காலணிகள் வடிமைப்பு, தயாரிப்பு பிரிவுகளில் பணியாற்ற சுமார் 2 லட்சம்  பேர் தேவைப்படுவார்கள் என்று  திரு முரளி தெரிவித்தார். இந்தத் தேவையை பூர்த்தி செய்ய உளுந்தூர்பேட்டையில் விரிவாக்கம் மையம் ஒன்றை தொடங்க திட்டமிட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *