பதிவுத்துறை அமைச்சருக்கு பெயிரா தலைவர் ஹென்றி கடிதம்.
பதிவுத்துறை அமைச்சருக்கு பெயிரா தலைவர் ஹென்றி கடிதம்.
அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி தமிழ்நாடு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சசர் மாண்புமிகு P.மூர்த்தி அவர்களுக்கு பொதுமக்கள் நலன் கருதி, வழிகாட்டி மதிப்பு சம்பந்தமாக கடிதம் எழுதியுள்ளார்.
மேலும் அவர் எழுதியுள்ள கடிதத்தில்
தமிழகத்தில் மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் சீரிய தலைமையின் கீழ், திராவிட மாடல் ஆட்சி அமைந்த பிறகு தங்களின் ஆக்கபூர்வமான செயல்பாடுகள் மூலம், பதிவுத்துறையில் நிலவி வந்த பல்வேறு பிரச்சனைகளை களைந்து, சீர்தூக்கி, செம்மைப்படுத்தி, பல்வேறு முன்னோடி திட்டங்களைக் கொண்டு வந்து மிகச் சிறப்பான முறையில் பொது மக்களுக்கு சேவையினை வழங்கி வருவது மிகுந்த பாராட்டுதலுக்குரியது.
அதேசமயம் வழிகாட்டி மதிப்பினை பன்மடங்கு உயர்த்தியும், முத்திரைத்தாள் கட்டணங்களை உயர்த்தியும், பொது அதிகார ஆவணம், ஒப்பந்த ஆவணம் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களுக்கு கணிசமாக கட்டணங்களை உயர்த்தியும் நடைமுறைப்படுத்தியுள்ளது சற்று வேதனைக்குரியது.
தற்பொழுது தமிழகம் முழுவதும் உள்ள புதிய கட்டிடங்கள் மற்றும் பழைய கட்டடங்கள் என அனைத்திற்கும் கூட்டு மதிப்பின் அடிப்படையில் பதிவு செய்ய வேண்டும் என்கிற உத்தரவு, பொது மக்களுக்கு மேலும் மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக முழுவதும் நிலங்களின் மீதான அரசு வழிகாட்டி மதிப்பினை தெருக்களின் அடிப்படையிலும், புல எண்களின் அடிப்படையிலும் உயர்த்தாமல், வகைப்பாட்டின் அடிப்படையில் உயர்த்தி அது சம்பந்தமான தகவல்களை பதிவு துறையின் www.tnreginet.net என்ற இணையதளத்தில் பொதுமக்களின் கருத்துகளையும் ஆட்சேபனைகளையும் தெரிவிக்கும் வகையில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழிகாட்டி மதிப்பு உயர்வு குறித்து நகர்ப்புறங்களில் வசிக்கும் பலதரப்பு மக்களும் தங்களின் அதிருப்தியை தெரிவிப்பதோடு எங்கள் வீடு அமைந்துள்ள தெருவுக்கு என்ன மதிப்பு என்றோ, அல்லது எங்கள் நிலத்தின் சர்வே எண்ணுக்கு என்ன மதிப்பு என்றோ பதிவுத்துறை இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ள வரைவில் தெரிவிக்கவில்லை.
மாறாக குடியிருப்பு பகுதி வகைப்பாட்டின் அடிப்படையிலும், நிலம் சம்பந்தமான வகைபாட்டின் அடிப்படையிலும் வழிகாட்டி மதிப்பினை பதிவுத்துறை உயர்த்தி உள்ளது எங்களுக்கே ஒன்றும் புரியவில்லை என தங்களின் கருத்துக்களையும், அதிருத்தியையும், ஆட்சேபனையையும் தெரிவித்து வருகின்றனர்.
ஆனால், கடை கோடியில் கிராமப்புறங்களில் வசிக்கின்ற பொதுமக்களுக்கு இது குறித்த தகவல்களும் போதிய விழிப்புணர்வும் துளியும் இல்லை. ஆகவே, கிராமப்புறங்களில் வசிக்கும் பொதுமக்களும் தங்களின் நிலங்கள் குறித்த வழிகாட்டி மதிப்பினை தெரு வாரியாக மதிப்பு மற்றும் சர்வே எண்கள் வாரியாக மதிப்பு என பதிவுத்துறை நிர்ணயித்து, எளிய மக்களும் அறியும் வண்ணம் அந்தந்த சார்-பதிவாளர் அலுவலக எல்லைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள நிலங்கள் குறித்த தகவல்களை, அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம், தாலுகா அலுவலகம், பதிவு அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகம், நகராட்சி, பேரூராட்சி மற்றும் மாநகராட்சி உள்ளிட்ட அரசு அலுவலகங்களில், நிலங்களின் வழிகாட்டி மதிப்பு சம்பந்தமான தகவல்களை பொதுமக்களின் பார்வைக்கு வைத்திட வேண்டும் என்கிற கோரிக்கையை பலதரப்பு பொதுமக்களும் வைக்கின்றனர்.
அப்பொழுது தான் தமிழகம் முழுவதும் உள்ள நிலங்களின் வழிகாட்டி மதிப்பினை அனைத்து தரப்பு மக்களும் அறிய முடியும் என்பதால், பெருமதிப்பிற்குரிய மாண்புமிகு தமிழ்நாடு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் அவர்கள் மேற்கண்ட பொதுமக்களின் விருப்பத்தையும், வேண்டுகோளையும், கருத்துக்களையும் தாங்கள் ஏற்று, கனிவுடன் பரிசீலித்து, மேற்கண்ட அரசு அலுவலக விளம்பரப் பலகையில் வெளியிட்டு, மேலும் 30 நாட்கள் கால அவகாசம் தந்து பொதுமக்களின் கருத்துக்களையும், ஆலோசனைகளையும், ஆட்சேபனைகளையும் பெற்று அதன் அடிப்படையில் உரிய திருத்தமும், நடவடிக்கையும் மேற்கொண்டு, புதிய வழிகாட்டி மதிப்பினை நடைமுறைப்படுத்திட வேண்டுமென வேண்டுகோள் விடுத்துகடிதம் எழுதியுள்ளார்