தமிழ்நாடு முதல்வருக்கு DTCP ஒப்பந்த புள்ளி சம்பந்தமாக பெயிரா தலைவர் டாக்டர் ஹென்றி கடிதம்

Loading

தமிழ்நாடு முதல்வருக்கு DTCP ஒப்பந்த புள்ளி சம்பந்தமாக பெயிரா தலைவர் டாக்டர் ஹென்றி கடிதம். 
மேலும் அவர் எழுதியுள்ள கடிதத்தில்
மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் ஆகிய தங்களின் சீரிய தலைமையின் கீழ் தமிழகம் அனைத்து துறைகளிலும் நாளும் வளர்ச்சி அடைந்து வருகிறது. குறிப்பாக தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறையின் கீழ் வழங்கப்படும் சேவைகள் அனைத்தும் பொதுமக்களுக்கு எளிய முறையில் விரைவாக வழங்கப்பட்டு வருகிறது.
தற்பொழுது அம்ருத் 2.0 துணை திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு (GIS) புவியியல் தகவல் அமைப்பு அடிப்படையில் (MASTER PLAN) முழுமை திட்ட வரைபடம் தயாரிக்கும் பணி தொடர்பாக ஒப்பந்த புள்ளி எண். 8457/2022/TCP-3 ஆக கடந்த 01.03.2024 அன்று வெளியிடப்பட்டு, இறுதி ஒப்பந்த புள்ளி மற்றும் சமர்ப்பிக்க வேண்டிய நாள் 30.04.2024 என நிர்ணயித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்த புள்ளியில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகள் மற்றும் தகுதிகளை பார்க்கும் பொழுது தமிழ்நாட்டில் உள்ள ஒப்பந்த ஆலோசகர்கள் எவரும் கலந்து கொள்வதற்கு வாய்ப்பில்லாத நிலை உள்ளது.
குறிப்பாக இந்த ஒப்பந்த புள்ளியில் ஏற்கனவே முழுமை திட்ட வரைபடம் தயாரித்த முன் அனுபவம் இருக்க வேண்டும் எனவும், இந்த ஒப்பந்த புள்ளியின் மதிப்பு ஒன்றுக்கு 5 கோடி ரூபாயாக உள்ளது.
ஆனால் இதில் கலந்து கொள்ளும் ஒப்பந்ததாரர்களின் ஆண்டு நிதி வருவாய் ரூபாய் 15 கோடி இருக்க வேண்டும் எனவும், தொடர்ந்து மூன்று ஆண்டுகள் மேற்கண்ட நிதி வருவாய் இருக்க வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.
தமிழகத்தில் முதன்முறையாக தற்பொழுது தான் இந்த முழுமை திட்ட வரைபடம் தயாரிக்கும் பணிக்கு ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. ஆகவே மேற்கண்ட ஒப்பந்த புள்ளியில் அறிவிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் மற்றும் தகுதிகள் தமிழகத்தில் உள்ள எந்த ஒரு ஒப்பந்ததாரருக்கும் பொருந்தும் வகையில் இல்லை.
மேலும் ஏற்கனவே இந்த முழுமை திட்ட வரைபடம் தயாரிக்கும் பணிக்கு இணையாக தமிழகத்தில் மற்ற துறைகளில் (TWAD) தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், (PWD) பொதுப்பணித்துறை, (HD) நெடுஞ்சாலைத்துறை, (TNEB) மின்சார வாரியம், (CMDA) சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம், (CMA) நகராட்சி நிர்வாகத்துறை போன்ற துறைகளில் பணியாற்றி முன் அனுபவமிக்க ஒப்பந்த  ஆலோசகர்கள் மிகச் சிறப்பான முறையில், துல்லியமாக திட்டங்களை தயாரித்து வழங்கும் பணியில் குறிப்பிடத்தக்க வகையில் 8 நிறுவனங்கள் உள்ளனர்.
ஆகவே மேற்கண்ட முழுமை திட்டம் தயாரிக்கும் ஒப்பந்த புள்ளியில் தெரிவிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் மற்றும் தகுதிகள் எதுவும் நமது தமிழகத்தில் உள்ள மேற்கண்ட ஒப்பந்த ஆலோசகர்களுக்கு பொருந்தும் வகையில் இல்லை.
மேற்கண்ட ஒப்பந்த புள்ளியில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகள் மற்றும் தகுதிகள் பிற மாநிலங்களில் உள்ள ஏற்கனவே முழுமை திட்ட பணிகளை மேற்கொண்டு முன் அனுபவம் மிக்க ஒப்பந்த ஆலோசகர்களுக்கு தான் பொருந்தும் வகையில் உள்ளது.
அந்த வகையில் நமது மாநிலத்தில் முதன் முறையாக முன்னெடுக்கும் இந்த முழுமை திட்ட வரைபடம் தயாரிக்கும் பணியில் நமது மாநிலத்தில் உள்ள ஒப்பந்த ஆலோசகர்கள் மற்றும் பொறியாளர்கள் எவரும் கலந்து கொண்டு மேற்கண்ட முழுமை திட்டம் தயாரிக்கும்  ஒப்பந்த புள்ளி கோரி விண்ணப்பிக்க இயலாத சூழ்நிலை ஏற்படுவதோடு, பிற மாநிலங்களில் குறிப்பாக மும்பை, டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் இருக்கும் ஒப்பந்த ஆலோசகர்கள் தான் இந்த ஒப்பந்த புள்ளியில் கலந்து கொண்டு ஒப்பந்த புள்ளி கோரும் சூழ்நிலை ஏற்படும் என எமது கூட்டமைப்பின் பொறியாளர்களும், பிற பொறியாளர்களும், நமது மாநிலத்தின் ஒப்பந்த ஆலோசகர்களும் கவலை கொள்கின்றனர்.
இப்படி நம்முடைய தமிழ்நாடு மாநிலத்தில் முழுமை திட்ட வரைபடம் தயாரிக்கும் பணியில் பிற மாநிலங்களை சார்ந்த ஒப்பந்த ஆலோசகர்கள் ஒப்பந்த புள்ளி கோரி ஒப்பந்தம் பெறும் பட்சத்தில் அவர்களுக்கு நம்முடைய மாநிலத்தின் புவியியல் கள நிலவரம், மொழி வேறுபாடு, நில அளவீடு செய்வது, மற்றும் நம்முடைய மாநிலம் சம்பந்தமான  தகவல்களை பல துறைகளில் இருந்து ஆவணங்களாக பெறுவது போன்ற அடிப்படை சிக்கல்கள் ஏற்படும்.
ஆகவே மேற்கண்ட ஒப்பந்த புள்ளியில் கோரப்பட்டுள்ள முன் அனுபவத்தின் அடிப்படையில் ஒப்பந்தத்தை பெறும் பிற மாநிலத்தைச் சார்ந்தவர்கள் நமது மாநிலத்தின் முழுமை திட்ட வரைபடம் தயாரிக்கும் பணியை, நம்முடைய மாநிலத்தில் ஏற்கனவே மேலே குறிப்பிட்டுள்ள பிற துறைகளில் பணியாற்றிய அனுபவமிக்க பொறியாளர்கள் பணியாற்றக்கூடிய மேற்கண்ட 8 நிறுவனங்களுக்கு தான் துணை ஒப்பந்தம் கொடுக்க நேரிடும். அல்லது நமது மாநிலத்தில் மேற்கண்ட துறைகளில் பணியாற்றிய அனுபவமிக்க பொறியாளர்களை மேற்கண்ட ஒப்பந்த புள்ளியை பெறும் வட இந்திய நிறுவனங்கள் பணிக்கு அமர்த்த நேரிடும்.
ஆகவே பெருமதிப்பிற்குரிய தமிழ்நாடு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாடு மாநிலம் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள பொறியாளர்களின் நலனில் அக்கறை கொண்டு, மேற்கண்ட எமது கூட்டமைப்பின் நியாயமான கோரிக்கையை தாங்கள் கனிவுடன் பரிசீலித்து, வெளிமாநிலங்களில் இருக்கிற நிறுவனங்கள்  மேற்கண்ட முழுமை திட்டம் தயாரிக்கும் ஒப்பந்த புள்ளியை கோரி ஒப்பந்தம் பெறும் வகையில் உள்ள  நிபந்தனைகள் மற்றும் தகுதிகளை எளிமைப்படுத்தி, மாற்றியமைத்து, இறுதி ஒப்பந்த புள்ளி மற்றும் சமர்ப்பிக்க வேண்டிய நாள் 30.04.2024 என்ற கால அவகாசத்தை தாயுள்ளத்தோடு நிறுத்தி வைத்து, வாய்ப்பான வேறொரு தேதியை முன் அறிவிப்பு செய்து, நமது மாநிலத்தில் உள்ள மேலே குறிப்பிடப்பட்டுள்ள துறைகளில் ஏற்கனவே பணியாற்றி, ஆண்டிற்கு 5 கோடி முதல் 10 கோடி ரூபாய் வரை நிதி வருவாயுடன் செயல்படும் முன் அனுபவமிக்க நிறுவனங்களுக்கு மேற்கண்ட முழுமை திட்டம் தயாரிக்கும் ஒப்பந்த புள்ளியில் பங்கேற்று அவர்கள் ஒப்பந்தத்தை பெறும் வகையில்  வழிவகை செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்து கடிதம் எழுதியுள்ளார்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *