சமூக நீதி அடிப்படையில் சமத்துவ சமுதாயத்தை ஏற்படுத்த விரும்பிய தலைவராக விளங்கினார் கர்பூரிதாக்கூர்: பிரதமர் மோடி
சமூக நீதி அடிப்படையில் சமத்துவ சமுதாயத்தை
ஏற்படுத்த விரும்பிய தலைவராக விளங்கினார் கர்பூரிதாக்கூர்: பிரதமர் மோடி
சமூக நீதிக்கான இடைவிடாத முயற்சிகளால் கோடிக்கணக்கான மக்களின்
வாழ்க்கையில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்திய மக்கள் தலைவர் கர்பூரி
தாக்கூர் அவர்களின் நூற்றாண்டு பிறந்த நாள் இன்று. கர்பூரி தாக்கூரைச்
சந்திக்கும் வாய்ப்பு எனக்கு ஒருபோதும் கிடைக்கவில்லை, ஆனால் அவருடன்
நெருக்கமாகப் பணியாற்றிய கைலாஷ்பதி மிஸ்ராவிடமிருந்து, அவரைப் பற்றி நான்
நிறையக் கேள்விப்பட்டேன். அவர் சமூகத்தின் மிகவும் பின்தங்கிய பிரிவுகளில்
ஒன்றான நயி சமாஜத்தைச் சேர்ந்தவர். எண்ணற்ற தடைகளைத் தாண்டி, அவர்
சாதித்ததுடன், சமூக முன்னேற்றத்திற்காகப் பெரிதும் உழைத்தார்.
மக்கள் தலைவர் கர்பூரி தாக்கூரின் வாழ்க்கை எளிமை மற்றும் சமூக நீதி ஆகிய
இரட்டைத் தூண்களைச் சுற்றியே சுழன்றது. அவரது கடைசி மூச்சு வரை, அவரது
எளிமையான வாழ்க்கை முறையும், பணிவான இயல்பும் சாதாரண மக்களிடம்
ஆழமாக எதிரொலித்தன. அவரது எளிமையைப் பறைசாற்றும் பல சம்பவங்கள்
அவரது வாழ்க்கையில் நிகழ்ந்துள்ளன. அவரது மகளின் திருமணம் உட்பட
எந்தவொரு தனிப்பட்ட விஷயத்திற்கும் அவர் தனது சொந்தப் பணத்தையே செலவிட
விரும்பினார் என்பதை அவருடன் பணிபுரிந்தவர்கள் நினைவு கூர்ந்தனர். அவர் பீகார்
முதலமைச்சராக இருந்த காலத்தில், அரசியல் தலைவர்களுக்காக ஒரு காலனியை
உருவாக்க முடிவு எடுக்கப்பட்டது, ஆனால் அவர் தனக்காக எந்த நிலத்தையும்,
பணத்தையும் எடுத்துக்கொள்ளவில்லை. 1988-ல் அவர் இறந்தபோது, பல
தலைவர்கள் அவரது கிராமத்திற்கு அஞ்சலி செலுத்தச் சென்றனர். அப்போது
அவரது வீட்டின் நிலையைக் கண்ட அவர்கள் கண் கலங்கினர். இவ்வளவு
செல்வாக்குமிக்க உயர்ந்த தலைவர் இப்படி ஒரு எளிமையான வீட்டிலா
வாழ்ந்தார் என்று அவர்கள் அதிசயித்தனர்.
அவரது எளிமைக்கு இதோ மற்றொரு சான்று, 1977-ம் ஆண்டு பீகார்
முதலமைச்சராக அவர் பொறுப்பேற்றபோது, தில்லியிலும், பாட்னாவிலும்
ஜனதா கட்சி அரசு ஆட்சியில் இருந்தது. அந்த நேரத்தில், லோக்நாயக்
ஜெயப்பிரகாஷ் நாராயணின் பிறந்தநாளைக் கொண்டாட ஜனதா தலைவர்கள்
பாட்னாவில் கூடினர். அப்போது கிழிந்த குர்தாவுடன் முதலமைச்சர் கர்பூரி
தாக்கூர் நடந்து சென்றார். சந்திரசேகர் அவருக்கே உரிய பாணியில், கர்பூரி
தாக்கூர் புதிய குர்தா வாங்குவதற்கு ஏதாவது பணம் நன்கொடை அளிக்குமாறு
மக்களைக் கேட்டுக் கொண்டார். அப்படி வந்த பணத்தை ஏற்றுக்கொண்ட
கர்பூரி தாக்கூர் அதனை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு நன்கொடையாக
வழங்கி விட்டார்.
மக்கள் தலைவர் கர்பூரி தாக்கூருக்கு சமூக நீதி மிகவும் விருப்பமான
விஷயமாக இருந்தது. சமூகத்தில் உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற
மக்களின் நிலையைப் பொருட்படுத்தாமல், அனைத்து மக்களுக்கும்
நியாயமான பயன்களும், வாய்ப்புகளும் வழங்கப்படும் ஒரு
சமுதாயத்தை ஏற்படுத்தும் முயற்சிகளை உள்ளடக்கியதாக அவரது
அரசியல் பயணம் இருந்தது. இந்திய சமூகத்தை பீடித்திருந்த அமைப்பு
ரீதியான ஏற்றத்தாழ்வுகளை நிவர்த்தி செய்ய அவர் விரும்பினார்.
காங்கிரஸ் கட்சி அனைத்து பகுதிகளிலும் விரவிப் பரவி இருந்த ஒரு
சகாப்தத்தில் வாழ்ந்த போதிலும், அவர் தெளிவான காங்கிரஸ் எதிர்ப்பு
நிலைப்பாட்டை எடுத்தார், ஏனென்றால் காங்கிரஸ் அதன் அடிப்படைக்
கொள்கைகளிலிருந்து விலகிச் சென்றுவிட்டது என்று அவர் ஆரம்பத்திலேயே
நம்பினார்.
அவரது தேர்தல் வாழ்க்கை 1950-களின் முற்பகுதியில் தொடங்கியது, அதன் பின்னர்,
அவர் சட்டமன்றத்தில் தவிர்க்க முடியாத ஒரு சக்தியாக மாறினார்.
தொழிலாளர்கள், சிறு விவசாயிகள், இளைஞர்களின் போராட்டங்களுக்கு
ஆதரவளித்து தமது சக்திவாய்ந்த குரலை எழுப்பினார். கல்வி அவரது
இதயத்திற்கு மிகவும் நெருக்கமான விஷயமாக இருந்தது. தமது அரசியல் வாழ்க்கை
முழுவதும் ஏழைகளுக்கான கல்வி வசதிகளை மேம்படுத்த அவர் பணியாற்றினார். சிறு
நகரங்கள் மற்றும் கிராமங்களைச் சேர்ந்த மக்கள் வெற்றிப் படிக்கட்டில் ஏறி
சாதனைப் படைக்க உள்ளூர் மொழிகளில் கல்வியை ஆதரித்தார்.
முதலமைச்சராக இருந்தபோது, மூத்த குடிமக்களின் நலனுக்காகவும் அவர் பல
நடவடிக்கைகளை எடுத்தார்.
ஜனநாயகம், வாதம், விவாதம் ஆகியவை கர்பூரி தாக்கூரின் ஆளுமையில்
ஒருங்கிணைந்து காணப்பட்டன. ஓர் இளைஞராக வெள்ளையனே வெளியேறு
இயக்கத்தில் அவர் தம்மை ஈடுபடுத்திக் கொண்டபோது இந்த உணர்வைக் காண
முடிந்தது. நெருக்கடி நிலையை அவர் முழு மூச்சுடன் எதிர்த்தபோதும், இந்த எழுச்சி
உணர்வை அவரிடம் பார்க்க முடிந்தது. ஜே.பி., டாக்டர் லோகியா, சரண்
சிங் போன்ற பெரும் தலைவர்களால் அவரது தனித்துவமான கண்ணோட்டம்
பெரிதும் பாராட்டப்பட்டது.
பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு உரிய பிரதிநிதித்துவம் மற்றும் வாய்ப்புகள்
வழங்கப்படும் என்ற நம்பிக்கையுடன், அவர்களுக்கான ஆக்கபூர்வ
நடவடிக்கையை வலுப்படுத்தியது மக்கள் தலைவர் கர்பூரி தாக்கூர்
இந்தியாவுக்கு அளித்த மிக முக்கியமான பங்களிப்புகளில் ஒன்றாகும். அவரது இந்த
முடிவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய போதிலும், அவர் எந்த நிர்பந்தத்திற்கும்
அடிபணியவில்லை. அவரது தலைமையின் கீழ், ஒருவரின் பிறப்பு அவரது
தலைவிதியை தீர்மானிக்காத அளவுக்கு, அனைவரையும் உள்ளடக்கிய
சமூகத்திற்கான அடித்தளத்தை அமைத்த கொள்கைகள் செயல்படுத்தப்பட்டன. அவர்
சமூகத்தின் மிகவும் பின்தங்கிய அடுக்கைச் சேர்ந்தவர், ஆனால் அவர் அனைத்து
மக்களுக்காகவும் பணியாற்றினார். அவரிடம் கசப்புணர்வின் எந்தத் துளியும்
இருந்ததில்லை, அதுவே அவரை உண்மையிலேயே பெரிய தலைவராக
மாற்றியது.
கடந்த 10 ஆண்டுகளில் நமது அரசு மக்கள் தலைவர் கர்பூரி தாக்கூர் அவர்களின்
பாதையில் நடைபோட்டு, மாற்றத்தக்க அதிகாரமளித்தலைக் கொண்டு வந்துள்ளது.
இது நமது திட்டங்கள் மற்றும் கொள்கைகளைப் பிரதிபலிக்கிறது. கர்பூரி தாக்கூர்
போன்ற ஒரு சில தலைவர்களைத் தவிர, சமூக நீதிக்கான அழைப்பு ஒரு அரசியல்
முழக்கமாக கட்டுப்படுத்தப்பட்டது நமது அரசியலின் மிகப்பெரிய சோகங்களில்
ஒன்றாகும். கர்பூரி அவர்களின் தொலைநோக்குப் பார்வையால் ஈர்க்கப்பட்டு,
திறமையான நிர்வாக மாதிரியாக இதை நாங்கள் செயல்படுத்தினோம். கடந்த சில
ஆண்டுகளில் வறுமையின் பிடியிலிருந்து 25 கோடி மக்களை விடுவித்த இந்தியாவின்
சாதனை குறித்து கர்பூரி தாக்கூர் அவர்கள் மிகவும் பெருமிதம் கொள்வார் என்று
நம்பிக்கையுடனும் பெருமிதத்துடனும் என்னால் கூற முடியும். காலனித்துவ
ஆட்சியில் இருந்து சுதந்திரம் பெற்று கிட்டத்தட்ட ஏழு தசாப்தங்களுக்குப் பிறகு
அடிப்படை வசதிகள் மறுக்கப்பட்ட சமூகத்தின் மிகவும் பின்தங்கிய பிரிவுகளைச்
சேர்ந்தவர்கள் இந்த மக்கள். அதே நேரத்தில், ஒவ்வொரு திட்டமும் 100 சதவீதம்
சென்றடைவதை உறுதி செய்யும் எங்களது முயற்சிகள், சமூக நலனுக்கான அவரது
உறுதிப்பாட்டை எதிரொலிக்கிறது. இன்று இதர பிற்படுத்தப்பட்டோர்,
தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்தவர்கள் முத்ரா கடன்கள்
காரணமாக தொழில்முனைவோராக மாறியுள்ள நிலையில், இது கர்பூரி தாக்கூர்
அவர்களின் பொருளாதார சுதந்திரம் என்ற கனவை நனவாக்குகிறது.
அதேபோல், எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., இட ஒதுக்கீட்டை விரிவுபடுத்தும் பெருமை
எங்கள் அரசுக்கு கிடைத்தது. கர்பூரி தாக்கூர் காட்டிய பாதையில் செயல்படும் ஓபிசி
கமிஷனை (துரதிர்ஷ்டவசமாக காங்கிரஸ் அதனை எதிர்த்தது) அமைத்த
பெருமையும் எங்களுக்குக் கிடைத்தது. எங்கள் அரசின், “பிரதமரின் விஸ்வகர்மா
திட்டம்” இந்தியா முழுவதும் உள்ள இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த
கோடிக்கணக்கான மக்களுக்கு வளத்திற்கான புதிய வழிகளைக் கொண்டு வரும்.
பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவன் என்ற முறையில், மக்கள் தலைவர்
கர்பூரி தாக்கூருக்கு நான் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.
துரதிர்ஷ்டவசமாக, கர்பூரி தாக்கூரை 64 வயது என்ற குறைந்த வயதிலேயே
இழந்தோம். நமக்கு அவர் மிகவும் தேவைப்பட்ட நேரத்தில் அவரை நாம்
இழந்தோம். இருப்பினும், அவர் தமது பணியின் காரணமாக கோடிக்கணக்கான
மக்களின் இதயத்திலும், மனதிலும் வாழ்கிறார். அவர் ஒரு உண்மையான மக்கள்
தலைவர்!
-நரேந்திர மோடி, இந்தியப் பிரதமர்