பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் இந்தியாவின் பொருளாதார முன்னேற்றம்
பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் இந்தியாவின் பொருளாதார முன்னேற்றம், மேம்பட்ட சர்வதேச உறவுகளை சீனாவின் குளோபல் டைம்ஸ் பத்திரிகை அங்கீகரித்துள்ளது
பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, சமூக நிர்வாகம், வெளியுறவுக் கொள்கையில் ஏற்பட்டுள்ள சிறப்பான முன்னேற்றங்களைப் பாராட்டி பெய்ஜிங்கில் செயல்பட்டு வரும் பிரபல சீன ஊடகமான குளோபல் டைம்ஸ் பத்திரிகை ஒரு கட்டுரையை வெளியிட்டுள்ளது.
ஷாங்காய் புடான் பல்கலைக்கழகத்தின் தெற்காசிய ஆய்வு மையத்தின் இயக்குநர் திரு ஜாங் ஜியாடோங் எழுதிய இந்த கட்டுரை, கடந்த நான்கு ஆண்டுகளில் இந்தியாவின் குறிப்பிடத்தக்க சாதனைகளை எடுத்துக்காட்டுகிறது. இது இந்தியாவின் வலுவான பொருளாதார வளர்ச்சி, நகர்ப்புற நிர்வாகத்தில் மேம்பாடுகள், சர்வதேச உறவுகள், குறிப்பாக சீனாவுடனான அணுகுமுறையில் ஏற்பட்டுள்ள மாற்றம் ஆகியவற்றை அங்கீகரித்துள்ளது. உதாரணமாக, சீனாவிற்கும், இந்தியாவுக்கும் இடையிலான வர்த்தக ஏற்றத்தாழ்வு குறித்து விவாதிக்கும்போது, இந்திய பிரதிநிதிகள் முன்பு வர்த்தக ஏற்றத்தாழ்வைக் குறைப்பதற்கான சீனாவின் நடவடிக்கைகளில் முதன்மையாக கவனம் செலுத்தினர். ஆனால் தற்போது அவர்கள் இந்தியாவின் ஏற்றுமதி திறனுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறார்கள்” என்று கட்டுரை ஆசிரியர் எழுதியுள்ளார்.
நாட்டின் உத்தி சார்ந்த நம்பிக்கையை வலியுறுத்தும் பாரதத்தின் வளர்ச்சியை அடைவதில் இந்தியாவின் செயல்மிக்க அணுகுமுறையை இக் கட்டுரை பாராட்டுகிறது. அதன் விரைவான பொருளாதார, சமூக வளர்ச்சியால், ஒரு பாரத வளர்ச்சியை உருவாக்குவதிலும், வளர்ப்பதிலும் அதிக உத்தி சார்ந்த நம்பிக்கையுடனும், சுறுசுறுப்பாகவும் மாறியுள்ளது என்று ஆசிரியர் கூறுகிறார். அரசியல், கலாச்சாரத் துறைகளில், மேற்கத்திய நாடுகளுடனான அதன் ஜனநாயக ஒருமித்த கருத்தை வலியுறுத்துவதில் இருந்து, ஜனநாயக அரசியலின் இந்திய அம்சத்தை முன்னிலைப்படுத்துவதற்கு இந்தியா நகர்ந்துள்ளது. தற்போது, ஜனநாயக அரசியலின் இந்திய உருவாக்கத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்று அவர் மேலும் கூறுகிறார்.
இந்த மாற்றம், அதன் வரலாற்று காலனித்துவ நிழலில் இருந்து அரசியல் மற்றும் கலாச்சார ரீதியாக ஒரு உலகளாவிய செல்வாக்குள்ள நாடாக தன்னை நிலை நிறுத்துவதற்கான இந்தியாவின் லட்சியத்தை பிரதிபலிக்கிறது என்று ஆசிரியர் சுட்டிக்காட்டுகிறார்.
மேலும், பிரதமர் திரு மோடி தலைமையின் கீழ், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை உத்தியைப் பாராட்டுகிறது. நாட்டின் பன்முக அணுகுமுறை, அமெரிக்கா, ஜப்பான், ரஷ்யா போன்ற முக்கிய உலக சக்திகளுடனான உறவுகளை வலுப்படுத்துதல், ரஷ்யா-உக்ரைன் இடையேயான மோதலில் ஒரு நுணுக்கமான நிலைப்பாட்டை காணுதல் உள்ளிட்டவற்றை இக்கட்டுரை சுட்டிக்காட்டுகிறது.
வெளியுறவுக் கொள்கையில் இந்தியாவின் உத்தி சார்ந்த சிந்தனை மற்றொரு மாற்றத்திற்கு உட்பட்டு, வலிமை மிக்க நாடு என்ற உத்தியை நோக்கி தெளிவாக நகர்கிறது என்று கட்டுரை குறிப்பிடுகிறது. “பிரதமர் திரு நரேந்திர மோடி ஆட்சி பொறுப்பேற்றது முதல் அமெரிக்கா, ஜப்பான், ரஷ்யா, பிற நாடுகள் மற்றும் பிராந்திய அமைப்புகளுடன் இந்தியாவின் உறவுகளை மேம்படுத்தும் ஒரு பன்முக உத்தியை அவர் வலியுறுத்தியுள்ளார்” என்று பேராசிரியர் ஜாங் கூறுகிறார்.
இந்தியா எப்போதுமே தன்னை உலகில் ஒரு சக்தி மிக்க நாடாக கருதுகிறது என்று அக் கட்டுரை குறிப்பிடுகிறது. எனினும், இந்தியா பன்முக சார்பு நாடு என்ற நிலையில் இருந்து பன்முக நாடுகளை ஒருங்கிணைக்கும் நாடாக 10 ஆண்டுகளுக்கும் குறைவான காலத்தில் மாறியுள்ளது என்று கூறுகிறது. இப்போது அது பன்முனை உலகில் ஒரு துருவமாக மாறும் உத்தியை நோக்கி விரைவாக மாறி வருகிறது என்று ஆசிரியர் கூறுகிறார் மாற்றம் அடைந்த, வலுவான, மிகவும் உறுதியான இந்தியா பல நாடுகள் கருத்தில் கொள்ள வேண்டிய ஒரு புதிய புவிசார் அரசியல் காரணியாக மாறியுள்ளது என்று தோன்றுவதாக தமது கட்டுரையின் இறுதியில் ஆசிரியர் குறிப்பிடுகிறார்.