நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம்
விருதுநகர் மாவட்டம் வலையபட்டி பகுதியில் நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம் யாத்திரைக்கு பொது மக்கள் வரவேற்பு: மத்திய அரசின் வேளாண் திட்டங்கள் உட்பட பல்வேறு திட்டங்கள் குறித்து விரிவாக விளக்கப்பட்டது
நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம் யாத்திரையின் மூலம் மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்கள் குறித்து நாடு முழுவதும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக விருதுநகர் மாவட்டம் வலையபட்டி பகுதியில் இந்த யாத்திரை நடைபெற்றது. இதில் மத்திய அரசின் வேளாண் திட்டங்கள் உட்பட பல்வேறு திட்டங்கள் குறித்து மக்களுக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. இந்த யாத்திரையில் கூறப்பட்ட தகவல்கள் தங்களுக்குப் பெரிதும் பயனளிப்பதாகவும் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வரும் மத்திய அரசுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கிராம மக்கள் தெரிவித்தனர்.
இது குறித்து வலையபட்டி ஊராட்சிமன்றத் தலைவர் திரு சுப்புராஜ் கூறுகையில், விவசாயததில் நவீன தொழில்நுட்பத்தில் டிரோன் மூலம் எவ்வாறு மருந்து தெளிப்பது என்பது குறித்து இந்த யாத்திரையின் போது விரிவாக விளக்கப்பட்டதாகக் கூறினார். அஞ்சலகத் திட்டங்கள் குறித்தும் இந்த யாத்திரையின்போது விளக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். குறிப்பாக பெண்களுக்கான திட்டங்கள் குறித்து விரிவாக அதிகாரிகள் எடுத்துரைத்ததாகக் கூறினார். ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து வந்த மருத்துவப் பிரதிநிதிகள் காசநோய் குறித்து விரிவாக விழிப்புணர்வை ஏற்படுத்தியதாகவும், இது எனது கிராம மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது என்றும் வலையபட்டி ஊராட்சித் தலைவர் திரு சுப்புராஜ் கூறினார்.
அழகம்மாள் என்ற பெண் விவசாயி கூறுகையில் பிரதமரின் விவசாயிகளுக்கான கெளரவ நிதி உதவித் திட்டத்தில் தாம் பயனடைந்து வருவதாகத் தெரிவித்தார். இத்திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு ரூ. 6000 கிடைப்பது தமக்கு மிகுந்த பயனளிப்பதாக அவர் கூறினார். இந்த பணம் பூச்சி மருந்துகள், உரம் போன்ற இடுபொருட்களை வாங்கப் பயன்படுவதாகவும் இது தமக்குப் பேருதவியாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த திட்டத்தைச் செயல்படுத்தும் மத்திய அரசுக்கு விவசாயி அழகம்மாள் நன்றி தெரிவித்தார்.