தற்சார்பு இந்தியா’வை உருவாக்குவதில் தமிழ்நாட்டு மக்கள் மிக முக்கிய பங்கு வகிப்பார்கள்
2047-ஆம் ஆண்டில் ‘தற்சார்பு இந்தியா’வை உருவாக்குவதில் தமிழ்நாட்டு மக்கள் மிக முக்கிய பங்கு வகிப்பார்கள்: மயிலாடுதுறையில் ‘வளர்ச்சி அடைந்த பாரதத்திற்கான சபத யாத்திரை’ நிகழ்ச்சியின் போது மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனோவால் பேச்சு
“2047-ஆம் ஆண்டில் ‘தற்சார்பு இந்தியா’வை உருவாக்குவதில் தமிழ்நாட்டு மக்கள் மிக முக்கியப் பங்கு வகிப்பார்கள். விண்வெளி ஆராய்ச்சி, செயற்கை நுண்ணறிவு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், புத்தொழில், புத்தாக்கம், தொழில்முனைவு போன்ற எண்ணற்ற துறைகளில் கலாச்சார ரீதியாகவும், தொழில்நுட்ப ரீதியாகவும் தமிழ்நாடு முன்னிலை வகிக்கிறது”, என்று மத்திய துறைமுகம், கப்பல் போக்குவரத்து, நீர்வழிகள் மற்றும் ஆயுஷ் துறை அமைச்சர் திரு சர்பானந்தா சோனோவால் தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார் கோயிலில் உள்ள தனியார் கல்லூரியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் வளர்ச்சி அடைந்த இந்தியாவிற்கான சபத யாத்திரை வாகனத்தை வரவேற்று அறிமுகப்படுத்தி, அஞ்சல் துறை மூலம் அமைக்கப்பட்டிருந்த அரங்குகள், ட்ரோன் மூலம் நானோ யூரியா தெளிக்கும் செயல் விளக்கம், உள்ளிட்டவற்றை அவர் பார்வையிட்டார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், பாரம்பரியம் மற்றும் பாதுகாப்பு கலாச்சாரமிக்க சோழர்கள் வாழ்ந்த நாடு என்றும் ராமானுஜம், சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், சர். சி. வி. ராமன், ஏ.பி.ஜே. அப்துல் கலாம், திருவள்ளுவர் போன்ற தலைசிறந்த ஆளுமைகளை தமிழ்நாடு உருவாக்கியதைக் குறிப்பிட்டார். “தமிழ்நாடு வளர்ச்சி அடையும் போது இந்தியா முன்னேறும் என்று பிரதமர் நம்புகிறார்”, என்றும் திரு சர்பானந்தா சோனோவால் கூறினார்.
பிரதமர் திரு நரேந்திர மோடியின் நேர்மை, உறுதிப்பாடு, கொள்கை சார்ந்த திட்டங்கள் மற்றும் செயல்திறன்வாய்ந்த திட்ட அமலாக்கம், சேவை மனப்பான்மை, அர்ப்பணிப்பு போன்றவற்றால் இந்தியா இன்று உலக அரங்கில் தனக்கென ஒரு தனி இடத்தைத் தக்க வைத்துக் கொண்டிருப்பதாக மத்திய அமைச்சர் தெரிவித்தார். சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் உணவுப் பாதுகாப்பு, கண்ணியமான வாழ்க்கை முறையை ஏற்படுத்தித் தருவதோடு ஏழைகளின் பொருளாதார நிலையை மேம்படுத்தவும் மத்திய அரசு உறுதிப்பூண்டுள்ளது, என்றார் அவர். மத்திய அரசின் திட்டங்கள், பயனாளிகள் அனைவரையும் சென்றடைவதை உறுதி செய்வதற்காகவே வளர்ச்சி அடைந்த இந்தியாவிற்கான சபத யாத்திரை வாகனம் இயக்கப்படுவதை அவர் சுட்டிக் காட்டினார்.
கடந்த 9 ஆண்டுகளில் பிரதமர் திரு நரேந்திர மோடியின் சீரிய தலைமையின் கீழ் சமூகத்தின் அனைத்து தரப்பினரும் குறிப்பாக விவசாயிகள், பெண்கள், மாணவர்கள், இளைஞர்கள், மூத்த குடிமக்கள், பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினத்தவர், பட்டியல் பழங்குடியின மக்கள் நாடு முழுவதும் பெருமளவில் பயனடைந்து இருப்பதாக அமைச்சர் பெருமிதத்துடன் கூறினார். மத்திய அரசின் முன்னணித் திட்டங்கள், சாமானிய மக்களின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியின் போது பயனாளிகளுக்கு பல்வேறு நலத் திட்ட உதவிகளையும் அமைச்சர் வழங்கினார். மத்திய அரசின் திட்டங்களால் பயனடைந்த பயனாளிகளுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் கலந்துரையாடினார். மயிலாடுதுறையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சென்னை துறைமுக பொறுப்புக் கழகத் தலைவர் திரு சுனில் பாலிவால் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் பல்வேறு பயனாளிகளுக்கு மத்திய அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மத்திய அரசு பிரதமரின் வீட்டுவசதித் திட்டம், முத்ரா கடன் திட்டம், சாலையோர வியாபாரிகளுக்கான கடனுதவி (ஸ்வநிதி), விவசாயிகளுக்கான வருவாய் ஆதரவு திட்டம், வேளாண் கடன் அட்டை உள்ளிட்ட திட்டங்களால் பயனடைந்தவர்கள் தங்களின் வாழ்க்கைத் தரம் எவ்வாறு உயர்ந்துள்ளது. அதனால் கிடைத்த நன்மைகள் குறித்தும் மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்களை எல்லோரும் பயன்படுத்திக் கொள்வது எப்படி என்றும் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.