மழைநிவாரண நிதி – குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ 10 அயிரம் வழங்குக
மழைநிவாரண நிதி – குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ 10 அயிரம் வழங்குக :
தமிழ்நாடு முஸ்லிம் லீக் வலியுறுத்தல்நிறுவன தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா வெளியிட்டுள்ள அறிக்கை :
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மட்டும் கடந்த 45 மணி நேரத்தில் 47 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதனால், பெரும்பாலான சாலைகளில் வெள்ள நீர் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடுகிறது. பல வீடுகளில் வெள்ளநீர் சூழ்ந்து நிற்கிறது. இதன்காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ள நிலையில், 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்த புயல் கடந்த எட்டு ஆண்டுகளில் சென்னை பார்க்காத அளவுக்கான அதிகனமழையை கொடுத்துள்ளது. இந்த புயல் மற்ற புயல்களிலிருந்து சில காரணிகளால் வேறுபட்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மாநகர் பகுதி மட்டுமில்லாது புறநகர் பகுதி, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்கள் மழை நீர் சூழ்ந்து பாதிக்கப்பட்டது. முதல் தளம் வரை மழை நீர் புகுந்தது. மின்சாரம் துண்டிக்கப்பட்டு, பால் உள்பட அத்தியாவசிய உணவுபொருட்கள் கிடைக்காமல் பொதுமக்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.
மழை சூழ்ந்த காரணத்தால், கடைகள், வீடுகள் உள்பட அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி, பிரிட்ஜ், வாசிங்மெஷின் உள்பட பல்வேறு பொருட்கள் சேதம் அடைந்துள்ளது. மேலும், மாணவர்களின் புத்தகங்கள், பல்வேறு வகையான சான்றிதழ்களையும் மக்கள் இழந்து இருக்கிறார்கள். .
அதுமட்டுமின்றி, கார், இருசக்கர வாகனங்கள் பழுதுடைந்துள்ளது. 2015-ம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் இதே போன்ற பாதிப்பு ஏற்பட்டது. அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா அவர்கள், சான்றிதழ்களுக்கு சிறப்புமுகாம் நடத்தி வழங்கினார்.
அதே போல, இருசக்கர வாகனம், கார் போன்றவற்றை பழுது பார்க்கவும் சிறப்பு முகாங்களை ஏற்பாடு செய்தார். அதுபோல தமிழக முதல்வர் ஸ்டாலினும், பழுதடைந்த சான்றிதழ்களை வழங்கவும், வாகனங்கள் பழுதை நீக்க சிறப்பு முகாம் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும்.
மேலும், வீடுகளில் புகுந்த மழைநீரால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு, பொருட்கள் சேதம் அடைந்திருக்கிறது. மழையால் பாதிக்கப்பட்ட சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மழை நிவாரண நிதியாக குடும்ப அட்டைதாரர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டுமென தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில் வழங்க வேண்டுமென முதல்வரை வலியுறுத்துக்கிறேன்.
அதே போல, பாதிக்கப்பட்ட சாலையோர வியாபாரிகளுக்கு, கடை உரிமையாளர்களுக்கு மானியத்துடன் கூடிய வட்டியில்லா கடனை வழங்க வேண்டுமெனவும் முதல்வர் ஸ்டாலினை தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.