“நமது லட்சியம், வளர்ச்சியடைந்த பாரதம்” யாத்திரை நடைபெற்றது
பழங்குடியின மக்களுக்காக மத்திய அரசு செயல்படுத்தும் திட்டங்கள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த ஜவ்வாதுமலையில் “நமது லட்சியம், வளர்ச்சியடைந்த பாரதம்” யாத்திரை நடைபெற்றது
மத்திய அரசின் நலத்திட்டங்கள் மக்களுக்கு சென்றடைவதை உறுதிசெய்யும் வகையில் திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலையில் உள்ள புலியூர் ஊராட்சியில் “நமது லட்சியம், வளர்ச்சி அடைந்த பாரதம்” எனும் வாகன விழிப்புணர்வு யாத்திரை நடைபெற்றது.
நாடு முழுவதும் நடைபெறும் இந்த யாத்திரையில் பழங்குடியின மக்களுக்காக மத்திய அரசு செயல்படுத்திவரும் திட்டங்கள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
புலியூர் ஊராட்சியில் நடைபெற்ற விழிப்புணர்வு யாத்திரையின்போது நமது லட்சியம், வளர்ச்சி அடைந்த பாரதம் என்பதற்கான உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதுவரை சமையல் எரிவாயு இணைப்பு பெறாத பழங்குடியின மக்களுக்குப் பிரதமரின் உஜ்வலா திட்டத்தின் மூலம் விலையில்லா எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டது, வங்கிகள் மூலம் ஆயுள் காப்பீடு பாலிசிகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் மத்திய அரசின் மக்கள்நலத் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.
மதராஸ் ஃபெர்ட்டிலைசர் நிறுவனத்தின் சார்பில் நானோ திரவ யூரியாவை ட்ரோன் மூலம் பயிர்களுக்கு தெளிக்கும் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. பழங்குடியின விவசாயிகளுக்கு ட்ரோன்கள் மானிய விலையில் வாங்குவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.