சிறு தொழில் நிறுவனங்கள் கடனுக்காக வங்கியை தேடி அலைந்த காலம் மாறி, தற்போது வங்கிகள் தேடி வந்து கடன் கொடுத்து வருகின்றன; மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

Loading

சிறு தொழில் நிறுவனங்கள் கடனுக்காக வங்கியை தேடி அலைந்த காலம் மாறி, தற்போது வங்கிகள் தேடி வந்து கடன் கொடுத்து வருகின்றன; மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கோவையில் நடைபெற்ற விழாவில் பெருமிதம்


90 ஆயிரம் பேருக்கு 3,479 கோடி ரூபாய் மதிப்பிலான கடனுதவிகளை வழங்கினார்

 PIB Chennai

கோவை கொடிசியா வளாகத்தில் வங்கிகள் சார்பில் மாபெரும் கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்  கலந்து கொண்டு, சுமார் 90 ஆயிரம் பேருக்கு 3,479 கோடி ரூபாய் மதிப்பிலான கடனுதவிகளை வழங்கினார்.

மாநில அளவிலான வங்கிகள் குழு (SLBC) மற்றும் மாவட்ட முன்னோடி வங்கிகள் சார்பில் மொத்தம் 948 வங்கிக் கிளைகள் வாயிலாக இந்த கடன்னுதவிகள், சுய தொழில் செய்வோர், சிறு குறு தொழில்முனைவோர், சாலையோர வியாபாரிகள், வேளாண் உற்பத்தியாளர்கள், பட்டதாரிகள், மகளிர் சுய உதவிக் குழுக்கள் ஆகியோருக்கு வழங்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து கூட்டத்தில் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை,  வங்கிகள் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என பிரதமர் வலியுறுத்தி வருகிறார். 100 பேருக்கு திட்டமிட்டால் 20 பேருக்கு மட்டுமே அத்திட்டங்கள் சென்றடைந்த நிலையை மாற்றி, அவற்றை முழுமையாக 100 பேருக்கும் கிடைக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதுதான் பிரதமரின் விருப்பம் என அவர் தெரிவித்தார்.

இந்த நோக்கத்துக்காகவே, முன்னேற விரும்பும் மாவட்டங்கள் திட்டம் நமது பிரதமரால் தொடங்கப்பட்டது என்றும், தமிழ்நாட்டில் விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டன என்றும் அவர் தெரிவித்தார். அந்த மாவட்டங்களில், முழுமையான அளவுக்கு மத்திய அரசின் திட்டங்கள் சென்றடைந்துள்ளன என்று அவர் சுட்டிக்காட்டினார்.

இதேபோல, மற்ற மாவட்டங்களிலும், திட்டங்களை முழுமையாக செயல்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், மாவட்ட அளவில் திட்டங்களை கொண்டு செல்வதை, தற்போது  வட்ட அளவில் செய்து வருகின்றோம் எனவும் நிதியமைச்சர் கூறினார்.

இன்றைய நிகழ்ச்சியில் 23,800 பேருக்கு சில்லறைக் கடன்கள் 1,828 கோடி  ரூபாய் வழங்கப்படுகின்றது என்றும் 2,904 புதிய முத்ரா கடன்கள் வங்கி மூலம் வழங்கப்படுகின்றது என்றும் அவர் தெரிவித்தார். தாழ்த்தப்பட்ட, பழங்குடியின வகுப்பினர் பிரிவைச் சேர்ந்த 18 பேருக்கு சுமார் 4 கோடி அளவுக்கு ஸ்டாண்ட் அப் இந்தியா திட்ட கடன்கள் இன்று வழங்கப்படுவதாகவும் அவர் கூறினார். தெருவோர வியாபாரிகள் 7,911 பேருக்கு ஸ்வநிதி கடன்கள் இன்று வழங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

வங்கியை தேடி அலைந்த காலம் மாறி வங்கிகள் தேடி வந்து கடன் கொடுக்கின்ற நிலை தற்போது  இருப்பதாகவும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். சிறு, குறு தொழில்களுக்கு கடன் உதவி வழங்க  சிட்பி வங்கியின் இரண்டாவது கிளை கோவையில் துவங்கப்பட்டுள்ளது எனவும்  அவர்  தெரிவித்தார்.

இந்நிகழ்வில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சந்திரயான் விண்கலத்தின் மாதிரிகளை மத்திய அமைச்சர் பரிசளித்தார்.

இந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க  சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் மற்றும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பொள்ளாச்சி ஜெயராமன், அமுல் கந்தசாமி, ஏ.கே செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வினை அடுத்து கோவை கொடிசியா வளாகத்தில் இயங்கி வரும் ராணுவத் தளவாடங்கள் மற்றும் பாதுகாப்புக் கருவிகளுக்கான அடல் தொழில் பாதுகாப்பு மையத்தினை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பார்வையிட்டார்.

முன்னதாக கோவை விமான நிலையம் அருகே இந்திய சிறுதொழில் வளர்ச்சி வங்கியான  SIDBI வங்கியின் புதிய கிளையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திறந்து வைத்தார்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *