தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் எனது மண், எனது தேசம் யாத்திரை

Loading

சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
நேரு இளைஞர் மையம் சார்பில் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் எனது மண், எனது தேசம் யாத்திரை நடைபெற்றது
 PIB Chennai
விடுதலையின் அமிர்தப் பெருவிழாவின் ஒரு பகுதியாக, எனது மண் எனது தேசம் என்ற இயக்கத்தின் நாடு தழுவிய இரண்டாம் கட்ட பிரச்சாரம் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி முழுவதும் நடைபெற்று வருகிறது. கிராமங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள வீடுகளில் இருந்து தன்னார்வல இளைஞர்கள் மற்றும் இளைஞர் மன்றங்களின் உறுப்பினர்களால் மண் மற்றும் அரிசி, அமிர்த கலசத்தில் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
மாநிலத்தின் அனைத்து மூலைகளிலிருந்தும் மண் மற்றும் அரிசியை எடுத்துச் செல்லும்  அமிர்த கலச யாத்திரைகள், மத்திய மற்றும் மாநில அரசு முகமைகள், நேரு இளைஞர் மையம்,  நாட்டு நலப்பணித் திட்டம், சாரண சாரணியர் இயக்கங்களின் உறுப்பினர்கள், அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரால் மேற்கொள்ளப்பட்டு வருவது,  எனது மண் எனது தேசம் இயக்கத்தின் இரண்டாம் கட்டத்தின் சிறப்பம்சமாகும். கிராமங்களிலிருந்து மண் சேகரிக்கப்படும் போது, ஐந்து முக்கிய அம்சங்கள் அடங்கிய  உறுதிமொழியும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இந்த கிராம அளவிலான நடவடிக்கைகள் செப்டம்பர் 30-ஆம் தேதி வரைத் தொடரும். இந்த யாத்திரையின் போது சேகரிக்கப்பட்ட மண், பெரிய கலசத்தில் சேர்க்கப்பட்டு,  கலக்கப்படும். பின்னர்,  துணிச்சல்மிக்க வீரர்களை கௌரவிப்பதற்காக வட்டார  தலைமையகங்களில் ஏற்பாடு செய்யப்படும் விழாவிற்கு அந்தக் கலசம் கொண்டு வரப்படும்.
தர்மபுரி நேரு இளைஞர் மையம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அமிர்த கலச யாத்திரை, அம்மாவட்டத்தில் உள்ள செந்தில் பப்ளிக் பள்ளியில் நிறைவடைந்தது.  பள்ளி வளாகத்தில் நடைபெற்ற  விழாவில், தர்மபுரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர்  திரு எஸ்.பி.வெங்கடேஸ்வரன், தன்னார்வலர்களால் சேகரிக்கப்பட்ட மண்ணைப் பெற்றுக் கொண்டார்.  நேரு இளைஞர் மையத்தின் மாவட்ட இளைஞர்  அதிகாரி திரு பிரேம் பரத்குமார், நல்லம்பள்ளி ஒன்றியத்  தலைவர் திருமிகு மகேஸ்வரி பெரியசாமி, பள்ளியின் மூத்த முதல்வர் திரு எஸ். சீனிவாசன்,  வழக்கறிஞர் திரு கே.ஜி.காவேரிவர்மன்,  பள்ளி முதல்வர் திரு செந்தில்முருகன்  ஆகியோர் விழாவில் உரையாற்றினார்கள்.  நிகழ்ச்சியின் போது ஐந்து முக்கிய அம்சங்களை உள்ளடக்கிய உறுதிமொழியும்  ஏற்றுக் கொள்ளப்பட்டது.
எனது மண் எனது தேசம்  இயக்கத்தின் கீழ் நேரு இளைஞர் மையம் சார்பில் கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் மண் சேகரிப்பு நிகழ்ச்சி  நடைபெற்றது. தேசிய இளைஞர் தன்னார்வலர்கள், இளைஞர்  மன்றங்கள் மற்றும்  மகளிர் மன்ற உறுப்பினர்கள்  இந்த நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தனர். கிருஷ்ணகிரியில் உள்ள  ரிச்மான் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில், மூத்த விஞ்ஞானியும், வேளாண் அறிவியல்  மையத்தின் தலைவருமான முனைவர் த. சுந்தரராஜ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் கல்வி நிறுவனங்களின் ஆதரவுடன் மாவட்ட நேரு இளைஞர் மையங்களால் இதுபோன்ற நிகழ்ச்சிகள் மற்ற மாவட்டங்களிலும்  நடைபெற்றன.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *