வங்கக் கடலில் கருணாநிதி பேனா நினைவுச் சின்னம்

Loading

வங்கக் கடலில் கருணாநிதி பேனா நினைவுச் சின்னம்:
15 நிபந்தனைகளுடன் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் ஒப்புதல்

புதுடெல்லி, ஜூன் 23-
தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு வங்கக் கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் 15 நிபந்தனைகளுடன் ஒப்புதல் வழங்கி உள்ளது.
இது தொடர்பாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தமிழக அரசின் பொதுப்பணித்துறைக்கு கடந்த 19-ம் தேதி ஒப்புதல் கடிதம் அனுப்பி உள்ளது. அதில், “நிபுணர் மதிப்பீட்டுக் குழு மற்றும் தமிழ்நாடு கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் ஆகியவற்றின் பரிந்துரைகளின் அடிப்படையில் சென்னை திருவல்லிக்கேணி அருகே கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க கடலோர ஒழுங்குமுறை மண்டலம் அனுமதி அளிக்கிறது. இந்த அனுமதி நிபந்தனைகளுக்கு உட்பட்டது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிபந்தனைகள்: கட்டுமானம் தொடங்குவதற்கு முன் திட்டம் தொடங்க உள்ள இடத்தில் இருந்து 800 மீட்டர் தொலைவில் உள்ள ஐஎன்எஸ் அடையாரின் ஆட்சேபனை சான்றிதழை பெற வேண்டும், மண் அரிப்பு குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும், பார்வையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்போது அதனை நிர்வகிப்பதற்கான திட்ட அறிக்கை, அவசரகால வெளியேற்றத்துக்கான திட்ட அறிக்கை ஆகியவற்றை பிராந்திய சுற்றுச்சூழல் அலுவலகத்துக்கு வழங்க வேண்டும்.
தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் ஒவ்வொரு ஆண்டும் சுற்றுச்சூழல் அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும், நிபந்தனைகள் நிறைவேற்றப்பட்டிருப்பது குறித்த தகவல்களை பொதுப்பணித்துறை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும், நீதிமன்றம் மற்றும் தீர்ப்பாயத்தின் எந்த உத்தரவும் அல்லது வழிகாட்டுதலும் கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும், தற்போது வழங்கப்பட்டுள்ள அனுமதி கடிதம் தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் இறுதி உத்தரவுக்கு கட்டுப்பட்டது.

நிபந்தனைகள் முழுமையாக ஏற்கப்படாதது கண்டறியப்பட்டால் அனுமதி திரும்பப் பெறப்படும் உள்பட 15 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *