வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளருக்கு பெயிரா தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி கடிதம்.

Loading

வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளருக்கு பெயிரா தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி
கடிதம்.
அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் டாக்டர்
ஆ.ஹென்றி அவர்கள், தமிழ்நாடு வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளருக்கு கடிதம்
எழுதியுள்ளார்.
மேலும் அவர் எழுதியுள்ள கடிதத்தில்
போலி ஆவணங்கள் மூலமும் ஆள்மாறாட்டம் மூலமும் சொத்துக்களை இழந்த
பொதுமக்களுக்கு உரிய நீதி கிடைக்கும் வகையில், இந்தியாவில் எந்த மாநிலங்களிலும்
இல்லாத வகையில் கடந்த 2022 ஆம் ஆண்டு தமிழ்நாடு பத்திர பதிவுத்துறை போலி ஆவண
ரத்துச் சட்டம் (தமிழ்நாடு பதிவு திருத்தச்சட்டம் 41/2022, நாள்: 16.08.2022) கொண்டு வந்து
நடைமுறைப்படுத்தியது. (பதிவுத்துறைத் தலைவர் சென்னை அவர்களின் சுற்றறிக்கை எண்.
33760/U1/2022 நாள்: 27.09.2022) இச்சட்டம் சொத்துக்களை இழந்து பாதிக்கப்பட்ட
பொதுமக்களுக்கு உரிய காலத்தில் உரிய நீதி கிடைக்கும் என்கிற அடிப்படையில்
பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. மேற்கண்ட எங்கள் அகில இந்திய ரியல்
எஸ்டேட் கூட்டமைப்பும் இச்சட்டத்தை மனம் திறந்து பாராட்டி உளமாற வரவேற்றது.
ஆனால் இந்த சட்டத்தின் மூலம் தற்பொழுது பேராபத்தும் ஏற்படுகிறது. காரணம் பல்வேறு
நபர்களிடமிருந்து பல நிலங்களை வாங்கிய 'A' என்கிற ஒர் நபர் பின்னாளில் அவரது பல
சொத்துக்களையும் ஒரே ஆவணம் மூலம் 'B' என்கிற நபருக்கு கிரைய ஆவணம் எழுதிக்
கொடுக்கையில், அதில் 'C' என்கிற நபருக்குரிய ஏதாவது ஒரு புல எண்ணுக்குட்பட்ட நிலமும்
தவறுதலாக ஆவணத்தில் சேர்க்கப்பட்டிருக்கும் பட்சத்தில் அது சம்பந்தமாக 'C" என்கிற நபர்
புகார் செய்தால், அந்த ஆவணத்தில் தவறுதலாக சேர்க்கப்பட்ட 'C' என்ற நபரின் சொத்துப்
பொறுத்த மட்டும் சம்பந்தப்பட்டவர்களுக்கு உரிய முறையில் அழைப்பாணை அனுப்பி
விசாரணை மேற்கொண்டு அந்த ஆவணத்தில் இருந்து தவறுதலாக சேர்க்கப்பட்ட புல எண்
சம்பந்தமான சொத்துக்களை மட்டும் நீக்கி திருத்துதல் பத்திரம் பதிவு செய்து தர
அறிவுறுத்தினாலே போதுமானது.
அல்லது 77A சட்ட பிரிவின் கீழ் மாவட்ட பதிவாளருக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரத்தின்
அடிப்படையில் தவறுதலாக குறிப்பிடப்பட்டு இருக்கும் அந்த பிழையான புல எண்ணை
மாத்திரம் சம்பந்தப்பட்ட ஆவணத்தில் இருந்து நீக்கி உத்தரவு பிறப்பித்து, அது சம்பந்தமாக
பதிவுத்துறையின் இணையதள அட்டவணையில் பதிவு செய்தாலே போதுமானது.
(உதாரணம். சென்னை மண்டல துணைப்பதிவுத்துறை தலைவர் அவர்களின் செயல்முறை
உத்தரவு எண். 2625/B1/2021, நாள்: 03.02.2022. மற்றும் ந.க. எண். 2208/ஆ1/2021. நாள்:
07.04.2022.) மாறாக ஒரு குறிப்பிட்ட புல எண்ணில் அடங்கிய சொத்துக்காக பல புல எண்கள்
குறிப்பிட்டு பதிவு செய்துள்ள ஆவணத்தை பொத்தாம் பொதுவாக ரத்து செய்வது என்பது
ஏற்புடையது அல்ல. (உதாரணம் திண்டிவனம் மாவட்ட பதிவாளர் (நிர்வாகம்) அவர்களின்
நடவடிக்கைகள் ந.க. எண். 155/ஆ1/2023, நாள்:15.05.2023.)
இது பல சட்ட சிக்கல்களையும் பேராபத்தையும் ஏற்படுத்தும் என்பதோடு, மருந்து நோயை
விட கொடுமையானதாக கூடிய அசாதாரண நிலையையும் தோற்றுவிக்கும்.
ஏனெனில் 'C' என்ற நபரின் ஒர் புல எண் குறித்த புகாருக்காக 'A' என்ற நபர் 'B' என்ற நபருக்கு
கிரையம் எழுதிக் கொடுத்துள்ள ஏனைய பல சொத்துக்கள் அடங்கிய ஆவணத்தை

முழுவதுமாக ரத்து செய்துவிட்டால் அந்த ஆவணத்தில் அடங்கிய 'C' யின் சொத்து 'C' க்கு
சென்றடையும் வேளையில்
'A', 'B' க்கு கிரையம் செய்த ஏனைய சொத்துக்கள் பொறுத்து
இச்சட்டமும் பதிவுத்துறையும் தற்பொழுது யாரை உரிமையாளராக உறுதிப்படுத்தும்? யார்
சொத்துக்கு உரிமை கொண்டாட முடியும்? மேற்கண்ட சொத்தை யார் மீண்டும் விற்பனை
செய்ய நேரிடும்? இப்படி பல கேள்விகளையும் சந்தேகங்களையும் சட்ட சிக்கல்களையும்
உருவாக்கும். மேலும் அவ்வாறான இதர சொத்துகளுக்கு 'A' என்ற நபர் உரிமை கோரும்
பட்ஷத்தில் இச்சட்டத் திருத்தம் தவறு செய்த 'A' நபரை ஊக்குவிப்பதாகவும் அமையும்.
அது மட்டுமல்ல சில தனிப்பட்ட காரணங்களுக்காக நிலங்களை வாங்கி வைத்திருக்கிற
உரிமையாளர்களை மிரட்ட வேண்டும், பழிவாங்க வேண்டும், அச்சுறுத்த வேண்டும் அல்லது
நிலங்களை அபகரிக்க வேண்டும் என்கிற எண்ணத்தின் அடிப்படையில் செயல்படுகின்ற சில
சமூக விரோதிகளுக்கு இச்சட்டம் ஆதரவாக அமையும் வகையில் உள்ளது. மாவட்ட
பதிவாளர்களில் ஒரு சிலர் கூட சில சமூக விரோதிகளின் மிரட்டல்கள் மற்றும் அழுத்தத்தின்
காரணமாகவும் அல்லது சுயநல ஆதாயத்திற்காகவும் மேற்கண்ட குற்ற செயல்களில்
ஈடுபடுவதற்கு அதிக வாய்ப்பினை இச்சட்டம் உருவாக்கி தருவதாக அமைகிறது.

ஆகவே பெருமதிப்பிற்குரிய தமிழக வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் அவர்கள்
மேற்கண்ட பிரச்சனையை தங்களின் கூடுதல் கவனத்தில் கொண்டு, மேற்கண்ட 77A
சட்டப்பிரிவில் சில மாற்றங்களை மேற்கொண்டு, போலி ஆவணங்கள் மூலமும்
ஆள்மாறாட்டம் மூலமும் நிலங்களை இழந்த பொதுமக்களுக்கு சம்பந்தப்பட்ட சொத்து
மாத்திரம் திரும்ப கிடைக்கும் வகையிலும், இதர சொத்துக்களை சம்பந்தப்பட்ட நிலங்களின்
உரிமையாளர்களுக்கு அவர்களின் உரிமையை நிலைநாட்டும் வகையிலும் ஆவணத்தை
பாதுகாக்கும் வகையிலும் சட்ட திருத்தத்தை மேற்கொள்ள வேண்டுமென பெயிரா தலைவர்
டாக்டர் ஆ.ஹென்றி கடிதம் எழுதியுள்ளார்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *