திருவள்ளூர் மாவட்டம் ஆவடி சார் பதிவகத்தில் பத்திர பதிவு செய்ய டோக்கன் கிடைக்காமல் பொதுமக்கள் அவதி
பதிவுத்துறை தலைவருக்கு பெயிரா (FAIRA) கூட்டமைப்பின் தேசிய செயலாளர் V.ஜெயச்சந்திரன் பொதுமக்கள் நலன் கருதி கடிதம்.
அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் தேசியத் தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி அவர்களின் வழிகாட்டுதலோடு, பெயிரா தேசிய செயலாளர் V.ஜெயச்சந்திரன் அவர்கள் தமிழ்நாடு பத்திர பதிவுத்துறை தலைவருக்கு பொதுமக்கள் நலன் கருதி கடிதம் எழுதியுள்ளார்.
மேலும் அவர் எழுதியுள்ள கடிதத்தில் சென்னை மண்டலம், திருவள்ளூர் பதிவு மாவட்டம், ஆவடி சார் பதிவாளர் அலுவலகத்தில் நாளொன்றுக்கு குறைந்தபட்சம் 200 ஆவணங்களை பதிவு செய்கின்றனர். குறிப்பாக சுப தினங்களில் இதற்கும் அதிகமாக ஆவணங்களை பதிவு செய்கின்றனர்.
ஆகவே தான் இந்த அலுவலகம் சனிக்கிழமையும் செயல்படுகிறது. (மேலும் கூடுதலாக இந்த அலுவலகத்தில் 24 டோக்கன் தக்கல் முறையில் வழங்கப்படுகிறது) டோக்கன் ஒன்றுக்கு ரூபாய். 5000/- கட்டணம் செலுத்தி தக்கல் முறையில் உடனடி டோக்கன் பெறும் வசதியும் இந்த அலுவலகத்தில் உள்ளது என்பதை தாங்கள் அறிந்ததே,
இந்த சூழ்நிலையில் கடந்த 03.11.2022 தேதி முதல் 29.04.2023 வரை இந்த அலுவலகத்தில் ஒரு சார் பதிவாளர் மட்டுமே பணியாற்றுகிறார். இதனால் நாள் ஒன்றுக்கு 100 ஆவணங்கள் மட்டுமே பதிவு செய்யப்படுகிறது. இதனால் இந்த அலுவலகத்தில் கடந்த ஆறு மாத காலங்களாக ஆவணங்களை பதிவு செய்ய முன் அனுமதி டோக்கன் இல்லை.
இதனால் ஆவடி பதிவு அலுவலகத்தில் ஆவணங்களை பதிவு செய்ய வரும் பொதுமக்கள் முன் அனுமதி டோக்கன் கிடைக்காமல் தக்கல் முறையில் கூடுதலாக ரூபாய். 5000/- கட்டணம் செலுத்தி பதிவு செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் பொதுமக்கள் கூடுதல் கட்டணம் செலுத்துவதோடு, மிகுந்த சிரமத்திற்கும் மன உளைச்சலுக்கும் ஆளாக்கப்படுகின்றனர்.
மேலும் அடமானக் கடன் பத்திரத்தை ரத்து செய்வதற்கான கட்டணமே ரூபாய். 50/- மட்டும் தான், ஆனால் இதற்கும் முன்பதிவு டோக்கன் தக்கல் முறையில் பதிவு செய்வதற்கு ரூபாய். 5000/- செலுத்த வேண்டியுள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலைகள் பொதுமக்களை கடும் கோபத்துக்குள்ளாக்குவதோடு, அரசுக்கும் பதிவுத்துறைக்கும் உள்ள நற்பெயரை கெடுக்கும் வகையில் உள்ளது.
ஆகவே பெருமதிப்பிற்குரிய தமிழ்நாடு பத்திர பதிவுத்துறை தலைவர் அவர்கள் பொதுமக்களின் நலனை தங்களின் கூடுதல் கவனத்தில் கொண்டு, மேற்கண்ட பிரச்சினைகளுக்கு தகுந்த தீர்வு காணும் வகையில் உடனடியாக ஆவடி சார் பதிவாளர் அலுவலகத்தில் கூடுதலாக பதிவாளர் ஒருவரை நியமிக்க வேண்டும் என கடிதம் எழுதியுள்ளார்.