யானை மிதித்து பெண் படுகாயம்
யானை மிதித்து பெண் படுகாயம்
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த எருக்கம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கோபால் மனைவி கோகிலா (51). காட்டு ஓரம் உள்ள தங்களது நிலத்தில் புல் பிடுங்குவதற்காக தம்பதியர் இருவரும் நேற்று காலை தங்களது நிலத்திற்கு சென்றனர். பிடுங்கிய புல்லை கட்டுவதற்காக கயிறை எடுக்க திரும்பியபோது யானை வருவதை கண்ட கோகிலா வேகமாக அங்கிருந்து ஓடுவதற்கு முயற்சித்தார். அப்போது அவரை விரட்டி வந்த ஒற்றை யானை அவரை கீழே தள்ளி இடுப்பின் மீது மிதித்தது இதை கண்ட அவரது கணவர் கோபால் சப்தம் போடவே யானை அங்கிருந்து சென்று விட்டது.
இதனை அடுத்து கோகிலாவை உடனடியாக பேரணாம்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். பின்பு மேல் சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பேரணாம்பட்டு வருவாய் ஆய்வாளர் கீதா கிராம நிர்வாக அதிகாரி மற்றும் வனத்துறையினர் இது குறித்து விசாரித்து வருகின்றனர்.
பேரணாம்பட்டு பகுதியில் யானைகளின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பயிர்களின் சேதமும் உயிர்களின் சேதமும் இங்கு ஏற்படுவதை தடுக்க ஒரு நிரந்தரமான தீர்வை அரசும் வனத்துறையினரும் எடுக்க வேண்டும் என்பது இங்குள்ள விவசாயிகள் பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.