மாணவிகளின் பாலியல் புகார்: விசாரணை நடத்த 3 பேர் அடங்கிய குழுவை அமைத்தது கலாஷேத்ரா அறக்கட்டளை
மாணவிகளின் பாலியல் புகார்:
விசாரணை நடத்த 3 பேர் அடங்கிய குழுவை அமைத்தது கலாஷேத்ரா அறக்கட்டளை
மாணவிகளின் பாலியல் புகார் தொடர்பாக விசாரணை நடத்த 3 பேர் அடங்கிய குழுவை அமைத்து கலாஷேத்ரா அறக்கட்டளை உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசின் கலாச்சாரத் துறையின் கீழ் சென்னை திருவான்மியூரில் கலாஷேத்ரா நாட்டியக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு பயிலும் மாணவிகளுக்கு, பேராசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுப்பதாகப் புகார்கள் எழுந்தன. இதற்கிடையில், புகாருக்கு உள்ளான பேராசிரியர் ஹரி பத்மன், உதவியாளர்கள் சாய்கிருஷ்ணன், சஞ்ஜித் லால், ஸ்ரீநாத் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாணவிகள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், கலாஷேத்ரா கல்லூரி முன்னாள் மாணவி ஒருவர், அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தார். அதில், பேராசிரியர் ஹரி பத்மன் பாலியல் தொல்லை கொடுத்ததாகத் தெரிவித்திருந்தார். இதையடுத்து, பேராசிரியர் ஹரி பத்மன் மீது 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னர், ஹரி பத்மனை தனிப்படை காவல் துறையினர் சென்னையில் கைது செய்தனர்.
இதனைத் தொடர்ந்து, மாணவிகள் புகார் கூறிய 4 பேரையும் கல்லூரி வளாகத்தில் அனுமதிக்கக் கூடாது என்று கலாஷேத்ரா நிர்வாகத்திற்கு தமிழக மகளிர் ஆணைய தலைவி அறிவுறுத்தி இருந்தார். இதனைத் தொடர்ந்து, மாணவிகள் புகார் கூறிய 4 பேராசிரியர்களை பணியிடை நீக்கம் செய்து கலாஷேத்ரா நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.
இந்நிலையில் மாணவிகளின் பாலியல் புகார் தொடர்பாக விசாரணை நடத்த 3 பேர் அடங்கிய குழுவை அமைத்து கலாஷேத்ரா அறக்கட்டளை உத்தரவிட்டுள்ளது. இதன்படி. ஓய்வு பெற்ற நீதிபதி கண்ணன், ஓய்வு பெற்ற டிஜிபி லத்திகா சரண், மருத்துவர் ஷோபா வர்தமான் ஆகியோர் கொண்ட குழுவை அமைத்து கலாஷேத்ரா அறக்கட்டளை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.