பான் கார்டை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கான காலக்கெடு ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிப்பு
பான் கார்டை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கான காலக்கெடு ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிப்பு: ஒன்றிய அரசு அறிவிப்பு
-பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க ஜூன் 30ம் தேதி வரை அவகாசத்தை ஒன்றிய அரசு நீட்டித்தது. ஆதார்- பான் எண் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மார்ச் 31-ம் தேதிக்குள் ஆதார்- பான் எண் இணைக்க வேண்டும் என ஒன்றிய அரசு அறிவித்தது. இதை செய்ய தவறும்பட்சத்தில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் பான் அட்டை செயலற்றதாகி விடும் எனவும் எச்சரித்திருந்தது. தற்போது ரூ.1000 அபராத கட்டணத்துடன் ஆதார்- பான் இணைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பான் கார்டை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கான காலக்கெடு ஜூன் 20ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 31ம் தேதியுடன் காலக்கெடு முடிய இருந்த நிலையில் மேலும் 3 மாதங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜூன் 30ம் தேதிக்குள் பான் கார்டை இணைக்காவிட்டால் ஜூலை 1ம் தேதி முதல் தங்கள் பான் கார்டை எந்தவிதமான பரிவர்த்தனைக்கும் பயன்படுத்த முடியாது. இந்த வாய்ப்பை தவறவிட்டால், 10 இலக்க பான் எண் செயலிழந்துவிடும். ஆதார் எண்ணுடன், பான் எண்ணை இணைக்கவில்லை என்றால் வருமானவரி ரீஃபண்ட் பெற இயலாத நிலை உள்ளது. தற்போது வரி செலுத்துவோர் பயன்பெறும் வகையில் பான் – ஆதார் இணைப்பு நீட்டிக்கப்பட்டுள்ளது.
எஸ்எம்எஸ் மூலம் ஆதாருடன்-பான்கார்டை இணைப்பது எவ்வாறு:
* UIDPAN என டைப் செய்ய வேண்டும்.
* UIDPAN இடைவெளி- 12 இலக்க ஆதார் எண்(இடைவெளி) 10இலக்க பான் எண்ணை டைப் செய்ய வேண்டும்.
* ஆதாரில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து 567678 அல்லது 56161 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்ப வேண்டும்.
* குறுஞ்செய்தி அனுப்பியபின், ஆதாருடன் பான் எண் இணைக்கப்பட்டது குறித்த உறுதியான செய்தி கிடைக்கும்.
ஆதார்- பான் எண் ஏற்கனவே இணைக்கப்பட்டுள்ளதா என்பதை வருமான வரித்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம்.
* வருமான வரித்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கம் e-filing இணையதளப் பக்கத்திற்கு செல்ல வேண்டும். (https://www.incometax.gov.in/
* இதில் இடதுபுறம் உள்ள Quick Links என்ற டேப்பில் “Link Aadhaar Status” என்பதை செலக்ட் செய்யவும்.
இப்போது உங்கள் பான் மற்றும் ஆதார் எண்ணை பதிவிடவும்.
* அடுத்து ‘View Link Aadhaar Status’ என்பதை கிளிக் செய்யவும்.
* இதை கொடுத்த பின் உங்கள் ஆதார்- பான் எண் ஏற்கனவே இணைக்கப்பட்டுள்ளதா? இல்லையா? என்பதை காண்பித்து விடும். இணைக்கப்பட்டிருந்தால் எதுவும் செய்யத் தேவையில்லை. ஆனால் இணைக்கப்பட வில்லை என்றால் கட்டாயம் இணைக்க வேண்டும்.
* இந்த சிம்பிள் ஸ்டெப்ஸ் பின்பற்றி ஆதார்- பான் ஆன்லைனில் எளிதாக இணைக்கலாம்.