ஜெய் நடிக்கும் தீராக் காதல்
ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷ், ஷிவதா இணைந்து நடிக்கும் படத்துக்கு ‘தீராக் காதல்’ என தலைப்பு வைத்துள்ளனர். ‘அதே கண்கள்’, ‘பெட்ரோமாக்ஸ்’ படங்களை இயக்கிய ரோகின் வெங்கடேசன் இயக்கியுள்ளார். ரவிவர்மன் நீலமேகம் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு சித்துகுமார் இசையமைத்துள்ளார். ஜி.ஆர்.சுரேந்தர்நாத் வசனம் எழுதியுள்ளார்.
லைகா தயாரிக்கும் இந்தப் படம் பற்றி இயக்குநர் ரோகின் வெங்கடேசன் கூறியதாவது: இது ரொமான்டிக் ட்ராமா வகையில் உருவாகும் படம். என்ஜினீயரிங் நிறுவனம் ஒன்றில் ஆலோசகராக இருக்கும் ஜெய், கார்பரேட் நிறுவன தலைமை அதிகாரியாக இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ், மனிதவள மேம்பாட்டு அதிகாரியான ஷிவதா இவர்கள் மூவரையும் சுற்றி நடக்கும் கதைதான் படம்.
பார்வையாளர்கள் கதையோடு தங்களை ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ள முடியும். வழக்கமான கதையாக இல்லாமல் இதன் திரைக்கதை சிறப்பாக இருக்கும். ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷ், ஷிவதா மூன்று பேரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
ஷிவதா நான் இயக்கிய ‘அதே கண்கள்’ படத்தில் நடிப்பில் மிரட்டியிருப்பார். இதில் நடித்தால் நன்றாக இருக்கும் என்பதால், நடிக்க வைத்தோம். ஷூட்டிங் முடிந்துவிட்டது. இறுதிக் கட்டப் பணிகள் நடந்து வருகின்றன. இவ்வாறு ரோகின் வெங்கடேசன் கூறினார்.