தமிழக சட்டசபையில் இன்று பட்ஜெட் தாக்கல்

Loading

தமிழக சட்டசபை இன்று  காலை 10 மணிக்கு கூடுகிறது. இந்த கூட்டத்தில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இந்த ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். பட்ஜெட்டில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாக உள்ளன. தமிழகத்தில் செயல்படுத்தப்படும் ஒவ்வொரு திட்டங்களுக்கும் எவ்வளவு நிதி ஒதுக்கப்படும் என்ற விவரமும் அதில் இடம் பெற்றிருக்கும். அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சுமார் 2 மணி நேரம் இந்த பட்ஜெட் உரையை வாசிப்பார். அதன்பிறகு இன்றைய சட்டசபை நிகழ்ச்சிகள் முடிவடையும். இதன்பிறகு சபாநாயகர் அப்பாவு தலைமையில் அவரது அறையில் அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் நடைபெறும்.
இந்த கூட்டத்தில் சட்டசபையை எத்தனை நாட்கள் நடத்த வேண்டும். அதில் என்னென்ன அலுவல்களை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து முடிவு செய்யப்படும். சட்டசபையில் இன்று பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதும் நாளை (செவ்வாய்க்கிழமை) வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என தெரிகிறது. சட்டசபை அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளின் அடிப்படையில் பட்ஜெட் மீதான விவாதம் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது தெரியவரும். சுமார் 4 நாட்கள் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது. இதில் ஆளுங்கட்சி, எதிர்கட்சியினர் இடையே கடும் விவாதம் ஏற்படும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரும் அவ்வப்போது பேசுவார்கள். நிறைவு நாளில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விரிவாக பதில் அளிப்பார்.
சமீபத்தில் நடைபெற்ற ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு சட்டசபையில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளதால் அவரும் அவையில் பேச வாய்ப்பு உள்ளது. இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி பெற்ற வெற்றி சட்டமன்ற கூட்டத்தொடரில் அரசியல் ரீதியாக எதிரொலிக்கும். அடுத்த ஆண்டில் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தல், அ.தி.மு.க., பா.ஜ.க. கட்சிகளிடையே ஏற்பட்டு உள்ள உரசல் என பல்வேறு விவகாரங்களும் சட்டசபையில் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சட்டம்-ஒழுங்கு பிரச்சினை, நீட் தேர்வு, பேனா நினைச்சின்னம், மின் கட்டண உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு உள்ளதால் சட்டசபையில் அனல்பறக்கும் விவாதம் நடைபெறும். சட்டசபையில் எடப்பாடி பழனிசாமிக்கு அருகே தான் ஓ.பன்னீர்செல்வத்துக்கு இருக்கை உள்ளது.
இந்த இருக்கை இடம் மாற்றப்படுமா? அல்லது அதே இடத்தில்தான் இருவரும் அமருவார்களா? என்பதும் நாளை தெரியவரும். ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் அரசுக்கு திருப்பி அனுப்பியதால் அந்த மசோதா மீண்டும் சட்டசபையில் கொண்டு வந்து நிறைவேற்றப்படும் என தெரிகிறது.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *