16 மாணவ மாணவிகளோடு “காஃபி வித் கலெக்டர்”
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் சமூக நலத்துறை மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பாக மாவட்டத்தில் குழந்தை திருமணம் தடுப்பு சட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கு நடைபெறவிருந்த குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு தற்போது பள்ளி மற்றும் கல்லூரிகளில் கல்வி பயின்று வரும் 16 மாணவியர்களோடு “காஃபி வித் கலெக்டர்” என்ற தலைப்பில் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் கலந்துரையாடி, ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகள் வழங்கி பேசினார்.கடந்த மூன்று ஆண்டுகளில் சிறுமியர்களுக்கு நடைபெறவிருந்த 136 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக குழந்தை திருமண தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குகள் தொடரப்பட்டு, மீட்கப்பட்ட பெண் குழந்தைகளுக்கு தொடர்ந்து கல்வி பயிலவும், தொழில் பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வருகிறது. பெண் குழந்தையை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் கீழ் குழந்தை திருமணம் குறித்தான சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது.இதில் ஒரு பகுதியாக குழந்தை திருமணத்திலிருந்து மீட்கப்பட்டு உயர்கல்வி பயின்றுவரும் உங்களுடன் “காஃபி வித் கலெக்டர்” என்ற தலைப்பில் இன்று நடைபெறும் இந்த கூட்டத்தில் குழந்தை திருமண தடுப்புச் சட்டம்-2006 குறித்தும், குழந்தை திருமணத்தினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் தெளிவாக விவரித்தும், குழந்தை திருமணத்திலிருந்து மீட்கப்பட்டு தற்போது உயர்கல்வி பயிலும் உங்களை போன்று உள்ள மற்றவர்களுக்கும் இதுபோன்ற விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பது குறித்தும் இக்கூட்டத்தில் தெளிவாக சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. அனைத்து பெண் குழந்தைகளும் தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளை முழுமையாக பயன்படுத்தி வாழ்வில் வெற்றி பெற வேண்டும். அதற்கு அரசு சார்பாக சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களும் மாவட்ட நிர்வாகம் என்றும் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும். எனவே, எந்தவித அச்சமுமின்றி உங்கள் கல்வியில் முழு கவனம் செலுத்தி, படித்து நாளை நல்லதொரு சமுதாயத்தை கட்டமைக்க உறுதுணையாக இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.அதனைத் தொடர்ந்து அம்மாணவியர்களை பாராட்டி, புத்தகங்களை பரிசாக வழங்கினார்.இதில் மாவட்ட சமூக நல அலுவலர் ஆர்.சுமதி, மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் எஸ்.கே.லலிதா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் நிஷாந்தினி, குழந்தைகள் நல குழுமத் தலைவர் மேரி ஆக்ஸிலியா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக பணியாளர்கள், மாணவியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.