செங்குன்றத்தில் பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்ட கலந்தாலோசனை கூட்டம் :
திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் தனியார் திருமண மண்டபத்தில் புலம் பெயர்ந்த வெளி மாநில தொழிலாளர்களின் நலன் சார்ந்து வெளி மாநில தொழிலாளர்கள், பல்வேறு தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள், வணிகர் சங்கத்தினர், தொழிற்சங்கத்தினர், காவல் துறையினர், வருவாய் துறையினர், தொழிலாளர் நலத்துறையினர் உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்ட கலந்தாலோசனை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்ததாவது :திருவள்ளுர் மாவட்டம், தொழில் துறையில் வளர்ந்து வரும் மாவட்டமாகும். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலுக்கிணங்க, நமது திருவள்ளுர் மாவட்டத்தில் தங்கி பணிபுரியும் புலம் பெயர்ந்த வட மாநில தொழிலாளர்களுக்கு ஏதேனும் அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் சம்பவம் நிகழ்ந்தால் உடன் திருவள்ளுர் மாவட்ட நிர்வாகம் சார்பாக ஏற்படுத்தப்பட்டுள்ள சிறப்பு கட்டுப்பாட்டு அறைக்கு (Toll Free Number 1800 599 7626 அல்லது Whats app Number 9444317862) ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு புகார் அளித்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்றைய தினம் மீஞ்சுர், செங்குன்றம் ஆகிய பகுதிகளிலிருந்து தொழில் முறைவோர்களுடன் கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது என்று கூறினார்.அதனைத் தொடர்ந்து, இக்கூட்டத்தில் காவல் துறை இணை ஆணையர் (ஆவடி) பி.விஜயகுமார் பேசியதாவது : பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வரும் அனைத்து தொழிலாளர்களுக்கும் உரிய பாதுகாப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. ஆவடி, காவல் ஆணையரகத்தை பொறுத்தவரையில், பிற மாநில தொழிலாளர்கள் இங்குள்ள பல நிறுவனங்களில் பணியாற்றி வருகிறார்கள். வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்களில் வழியாக தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருவது மக்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்துகிற காரணத்தினால், காவல் நிலையங்களில் உள்ள ஆய்வாளர்கள், அலுவலர்கள் தங்களின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இருக்கும் வடமாநில தொழிலாளர்களுடன் நேரடியாக சென்று கலந்துரையாடியபோது, தாங்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும், தங்களை பற்றிய தவறான செய்திகள் பரப்பப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர். இதுபோன்ற தவறான தகவல்களை பரப்புவோர் மீது தமிழக காவல் துறையின் சார்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் வடமாநிலத் தொழிலாளர்களுக்கு வேறு ஏதேனும் சந்தேகமோ, புகாரோ இருப்பின் தமிழ்நாடு காவல் தலைமை அலுவலகத்தில் 24 X 7 மணிநேரமும் செயல்படும் அவசர உதவி எண்.9498101300 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்று கூறினார்.
இக்கூட்டத்தில் வெளி மாநில தொழிலாளர்கள், பல்வேறு தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள், வணிகர் சங்கத்தினர், தொழிற்சங்கத்தினர் ஆகியோர்களுடன் மாவட்ட ஆட்சியர் கலந்துரையாடி, வெளி மாநில தொழிலாளர்களின் தற்போதைய நிலை குறித்து கேட்டறிந்து, பாதுகாப்பாக பணிபுரிந்து வருவதை உறுதி செய்தார்.
கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி), மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் செ.ஆ.ரிஷப், சார் ஆட்சியர் (பொன்னேரி) ஐஸ்வர்யா ராமநாதன், காவல்துறை துணை ஆணையர் மணிவண்ணன், தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் சுதா, மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.