5 ஏக்கர் பரப்பளவில் ரூ.33 கோடியில் புதிய நவீன பேருந்து நிலையம் அமைக்க அரசு உத்தரவு

Loading

திருவள்ளூர் மாவட்டம் உதயமாகி 26 ஆண்டுகள் பூர்த்தி அடைந்த நிலையில் அப்போதிருந்த மக்கள் தொகைக்கு ஏற்ப திருவள்ளூர் நகரின் மையப் பகுதியில் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது.  திருவள்ளூர் மாவட்டத்தில் பெரும்பாலான மாவட்ட அளவிலான அரசு அலுவலகங்கள் செயல்படத் தொடங்கியது. இதனால் ஏராளமானோர் தங்களின்தேவைகளுக்காகவும்,கோரிக்கைகளுக்காகவும் திருவள்ளூர் நகருக்கு வந்து செல்கின்றனர்.  தற்போது திருவள்ளூர்  பேருந்து நிலையத்திலிருந்து சென்னை, செங்கல்பட்டு, திருப்பதி, அரக்கோணம்,  பொன்னேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு நாள் தோறும் 157 புறநகர் பேருந்துகள், விழுப்புரம் கோட்டம் மூலமாக இயக்கப்படும் 72 சாதாரண கட்டண  பேருந்துகள், மாநகர் போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்படும் 46 நகர பேருந்துகள் மற்றும் 14 சாதாரண கட்டண பேருந்துகள்  இயக்கப்படுகின்றன.  அதே போல் 50-க்கும் மேற்பட்ட தனியார் பேருந்துகளும் வந்து செல்கின்றன.
இதனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து திருவள்ளூருக்கு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பேருந்துகளில் வருகை தருகின்றனர். அதே போல் திருவள்ளூரில் இருந்து சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கும் வேலைக்கு செல்பவர்கள், கல்லூரிக்கு செல்பவர்கள் என ஏராளமானோர் செல்கின்றனர். இதனால் திருவள்ளூர் நகரில் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை போக்குவரத்து நெரிசலாகவே காணப்படுகிறது.   இதனையடுத்து நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின் போது திருவள்ளூரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மாற்று இடத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்திருந்தனர்.அதன்படி திருவள்ளூர் நகராட்சி எல்லையை ஒட்டிய வேடங்கி நல்லூர் பகுதியில் 5 ஏக்கர் பரப்பளவில் ரூ.33 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான அரசு ஆணை தற்போது வெளியிடப்பட்டது. இதனையடுத்து திருவள்ளூர் எம்எல்ஏ., வி.ஜி.ராஜேந்திரன் புதிய பேருந்து நிலையம் அமைய உள்ள வேடங்கி நல்லூரில் திடீர் ஆய்வு செய்தார்.  அப்போது, நகர்மன்றத் தலைவர் உதயமலர் பாண்டியன், நகராட்சி ஆணையர் கா.ராஜலட்சுமி, திருவள்ளூர் தாசில்தார் மதியழகன், நகர் மன்ற துணைத் தலைவர் சி.சு.ரவிச்சந்திரன் ஆகியோரிடம் பேருந்து நிலையத்தில் என்னென்ன அடிப்படை வசதிகள் செய்து தரப்படுகிறது.  எவ்வளவு பேருந்துகள் நிறுத்தி வைக்கப்படுகிறது போன்ற விவரங்களை கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய திருவள்ளூர் எம்எல்ஏ., வி.ஜி.ராஜேந்திரன், நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் கொடுத்த வாக்குறுதியின் படி திருவள்ளூர் மாவட்ட தலைநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க புதிய பேருந்து நிலையத்தை ரூ.33 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்க திமுக தலைமையிலான அரசு உத்தரவு வழங்கியிருக்கிறது. இந்த பேருந்து நிலையத்தில் 56 பேருந்துகளை ஒரே நேரத்தில் நிறுத்தி வைக்கவும், திருவள்ளூர் டவுன் பேருந்தும் அடிக்கடி சென்று வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதே போல் பை பாஸ் சாலைப் பணிகளும் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். மேலும் இன்னும் 10 ஆண்டுகளில் பூந்தமல்லி வரை வந்த மெட்ரோ ரயில் திட்டம் திருவள்ளூர் வரை நீடிக்கவும் வாய்ப்பிருப்பதாகவும்ம் சூசகமாக தெரிவித்தார்.  ஈரோடு கிழக்கு தொகுதியில் பெற்ற வெற்றியானது முதலமைச்சருக்கு கிடைத்த வெற்றி, அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றியதால் கிடைத்த வெற்றி, திமுக மீது மக்களுக்கு ஏற்பட்டுள்ள நம்பிக்கையால் கிடைத்த வெற்றி என புகழாரம் சூட்டினார். இந்த ஆய்வின் போது, திருவள்ளூர் நகர அவைத்தலைவர் கமலக்கண்ணன், நேதாஜி, நகர்மன்ற உறுப்பினர்கள் வசந்தி வேலாயுதம், செல்வகுமார்,  அயூப்அலி, டி.கே.பாபு,  பிரபாகரன், நீலாவதி பன்னீர்செல்வம், விஜயகுமார், மாவட்ட பிரதிநிதி சிவக்குமார், கடம்பத்தூர் ஒன்றிய செயலாளர் மோ.ரமேஷ்,  நிர்வாகிகள் சிட்டிபாபு , காஞ்சிப்பாடி சரவணன், தா.மோதிலால், நகர துணை செயலாளர் டி.எம்.ரவி, பவளவண்ணன்,. தங்கானூர் ஆனந்த், உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *