இந்திய ஒற்றுமை யாத்திரை 2.O-க்கு தொண்டர்கள் தயார்-காங்கிரஸ்

Loading

இந்திய ஒற்றுமை யாத்திரை 2.O-க்கு தொண்டர்கள் தயாராக இருப்பதாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் வைபவ் வாலியா தெரிவித்துள்ளார்.காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை மேற்கொண்ட இந்திய ஒற்றுமை யாத்திரை கடந்த மாதம் நிறைவடைந்தது. இந்நிலையில், இந்திய ஒற்றுமை யாத்திரை 2.O-க்கு அக்கட்சி திட்டமிட்டுள்ளது.
சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூரில் நடைபெற்ற அக்கட்சியின் 85வது மாநாட்டில் உரையாற்றிய ராகுல் காந்தி, தெற்கில் இருந்து வடக்கு நோக்கி நடைபெற்ற இந்திய ஒற்றுமை யாத்திரையின் இரண்டாம் கட்டத்தை கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி நடத்த விரும்புவதாகவும், இதற்கான புதிய திட்டத்தை வகுக்க கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அனுமதி அளிக்க வேண்டும் என்றும் கோரி இருந்தார்.இதையடுத்து ராய்ப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ், ”தெற்கில் இருந்து வடக்கு நோக்கி ராகுல் காந்தி மேற்கொண்ட இந்திய ஒற்றுமை யாத்திரை மிகப் பெரிய வெற்றியை பெற்றது. இந்த யாத்திரை கட்சிக்கு மிகப் பெரிய புத்துணர்ச்சியை அளித்துள்ளது.கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் நோக்கி நடைபெற்ற இந்த யாத்திரை 4 ஆயிரம் கிலோ மீட்டர் நீளம் கொண்டது.இதேபோல், அருணாச்சலப் பிரதேசத்தின் பசிகாட் பகுதியில் இருந்து குஜராத்தின் போர்பந்தர் வரை மற்றொரு யாத்திரையை நடத்த காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது. இந்த பாத யாத்திரை முழுக்க முழுக்க பாத யாத்திரையாக இருக்காது. ஏனெனில், இந்தப் பாதையில் பல இடங்களில் காடுகளும் ஆறுகளும் குறுக்கிடுகின்றன. எனவே, இந்த யாத்திரை பல்வேறு முறைகளைக் கொண்டதாக இருக்கும். எனினும், பெரும்பகுதி இது பாத யாத்திரையாகவே இருக்கும்.கர்நாடகாவில் வரும் ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. ஜூன் மாதம் தொடங்கியதும் மழைக்காலம் தொடங்கிவிடும். அதன் பிறகு நவம்பரில் மீண்டும் சட்டப்பேரவைத் தேர்தல் வர இருக்கிறது. இதையெல்லாம் கருத்தில் கொண்டு பாத யாத்திரைக்கான திட்டம் வகுக்கப்படும். ஒன்று இந்த யாத்திரை ஜூன் மாதத்திற்குள் தொடங்கப்படலாம் அல்லது நவம்பருக்கு முன் தொடங்கப்படலாம். இது குறித்த முழு விவரம் இன்னும் சில வாரங்களில் வெளியிடப்படும்” எனத் தெரிவித்தார்.
இந்திய ஒற்றுமை யாத்திரை 2.O உறுதியாகி இருப்பதால், இதில் பங்கேற்க தான் தயாராக இருப்பதாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் வைபவ் வாலியா தெரிவித்துள்ளார். இந்திய ஒற்றுமை யாத்திரையில் ராகுல் காந்தியோடு சேர்ந்து 4 ஆயிரம் கிலோ மீட்டர் பயணித்த இவர், அடுத்த யாத்திரையிலும் பங்கேற்க இருப்பதற்கான ஆர்வத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். கட்சி எப்போது உத்தரவிட்டாலும் உடனடியாக கிளம்பும் வகையில் தனது உடைமைகளை தயாராக எடுத்து வைத்திருப்பதாக வைபவ் வாலியா தெரிவித்துள்ளார். மேலும், முதல் யாத்திரையில் பங்கேற்ற பலரும் இரண்டாம் யாத்திரையிலும் பங்கேற்க ஆர்வம் தெரிவித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *