தர்மயுத்தத்தை நடத்தி வருகிறோம்; விரைவில் மக்கள் தீர்ப்பு வரும் 2-வது ஓ.பன்னீர்செல்வம் பேச்சு
அதிமுக சட்ட விதிகளை காப்பாற்ற 2-வது தர்ம யுத்தத்தை நடத்தி வருவதாகவும், விரைவில் மக்கள் தீர்ப்பு வரும் என்று ஒ.பன்னீர்செல்வம் பேசினார்.அதிமுக மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் கட்சி தலைமை கழக நிர்வாகிகளுடன் ஓ.பன்னீர்செல்வம் நேற்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அவர் பேசுகையில், “அதிமுகவை தொண்டர்களுக்கான இயக்கமாக எம்ஜிஆர் உருவாக்கினார். எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய 2 பெரும் தலைவர்கள் அதிமுகவை யாராலும் வெல்ல முடியாத சக்தியாக வளர்த்து எடுத்தார்கள். ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் நிரந்தர பொதுச் செயலாளர் ஜெயலலிதா தான் என்று தீர்மானம் நிறைவேற்றி மகிழ்ந்தோம்.அதிமுகவின் தலைமை பொறுப்பை ஏற்பவர்கள் தொண்டர்கள் மூலம் தேர்வு செய்யப்பட வேண்டும். இதன்படி தான் ஜெயலலிதா மறைந்த பின்பு தேர்தல் நடத்தி ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டது. இதன்படி வேட்பாளர்கள் படிவத்தில் ஒருங்கிணை ப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தான் கையெழுத்திடுவார்கள்.ஆனால் அந்த சட்ட விதியை சிதைக்கும் அளவுக்கு 23ம் தேதி பொதுக் குழு நடைபெற்றது. அதில் சர்வாதிகாரத்தின் உச்ச நிலைக்கு சென்று 23 தீர்மானங்கள் ரத்து செய்து அறிவிப்பு செய்யப்பட்டது. அதிமுக தலைமை பொறுப்பில் உள்ளவர்களின் பெயரை உச்சரிக்கை விரும்பவில்லை. அந்த தகுதியை அவர் இழந்துவிட்டார். அதிமுக சட்ட விதிகளை காப்பாற்ற 2வது தர்ம யுத்தம் நடைபெற்று வருகிறது.மக்கள் தீர்ப்பு தான் மகேசன் தீர்ப்பு. அது கூடிய விரைவில் வரும். அப்போது தெரியும். நாம் தர்மத்தின் பக்கம் சென்று கொண்டு இருக்கிறோம் என்று. எதற்கும் அஞ்ச வேண்டாம். பொறுமையாக இருங்கள். எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆன்மா அதிமுகவை காப்பாற்றும்.” இவ்வாறு பேசினார்.