திருவாலங்காட்டில் 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு போதை பொருள் ஒழிப்பு குறித்து
திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வித் துறை சார்பாக 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு போதை பொருள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படும் வகையில் நடைபெற்ற “Collector @ School“ என்ற சமூக விழிப்புணர்வு கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் கலந்து கொண்டு, மாணவ மாணவியர்களோடு கலந்துரையாடி ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகளை வழங்கி பேசினார்.திருவள்ளூர் மாவட்டத்தில் திருவாலங்காடு வட்டாரம் போன்ற 14 வட்டாரங்கள் உள்ளது. இந்த 14 வட்டாரங்களில் இருக்கக்கூடிய பள்ளிகளிலும் இதே மாதிரி ஒரு வட்டாரத்திற்கு ஒரு பள்ளியாவது சென்று மாணவர்களுடன் உரையாட வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இந்த நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இன்னும் ஒரு வட்டாரத்தை ஆய்வு செய்தால் கிட்டத்தட்ட 14 வட்டாரங்களையும் முடித்து விட்டதற்கான சூழ்நிலை இருக்கும். தொழில் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பார்க்கும்போது நம் திருவள்ளூர் மாவட்டம் வளர்ந்த மாவட்டமாகும். மாவட்ட காவல் துறையும், வருவாய்த்துறையும் இணைந்து அதிகாரிகள் அனைத்து பள்ளிகளிலும் 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கடைகளுக்கு ஆய்வு செய்து, போதைப்பொருட்களை பறிமுதல் செய்து வருகிறோம். கஞ்சா, மற்ற டிரக்ஸ் போன்ற போதைப்பொருட்களால் மாணவர்களிடம் அதிகமாக பரவி வருகிறது. இந்த தீய பழக்கத்தினால் நம் வாழ்க்கையே கெட்டுப் போகும். பின்தங்கிய வட்டாரமான இந்த திருவாலங்காடு வட்டாரத்தில் இருக்கும் நீங்கள் நன்றாக படித்து முன்னேற வேண்டுமானால் நன்றாக படிக்க வேண்டும். இந்த தீய பழக்கத்திற்கு உட்பட்டால் அதிலிருந்து வெளியில் வருவது சிரமமான ஒன்றாகும். இதை தடுப்பது என்பது இந்த பழக்கத்திற்கு ஆளாகாமல் இருப்பது தான் ஒரே வழியாகும். அதற்காகத் தான் பள்ளிகளுக்கு சென்று கூட்டம் நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தி இந்த பள்ளியில் “Collector @ School“ என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தி வருகிறோம் என்று என்று கூறினார்.
அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் 9ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவியர்கள் போதை பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு உறுதி மொழியை ஏற்றுக் கொண்டு ஒன்றிணைந்து போதை பொருள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளும் வகையில் கைகளை உயர்த்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும், போதை பொருள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாணவ – மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகளை ஆட்சியர் பார்வையிட்டார்.
இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் த.இராமன், திருத்தணி காவல் துணை கண்காணிப்பாளர் த.விக்னேஷ், போதைப் பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் மருத்துவர் பவித்ரா, உள்ளாட்சி பிரதிநிதிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.